Search This Blog

Saturday, 3 November 2018

#MeToo இயக்கத்தின் ஓராண்டு

One year of the #MeToo movement

(image source from internet)
#MeToo இயக்கத்திற்கு இந்த மாதம் ஒரு வருடம் ஆகிறது. ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வைய்ன்ஸ்டைனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியூ யோர்க் டைம்ஸ்மற்றும் நியூ யோர்க்கர் இதழில் வெளியிட்ட கட்டுரைகளில் இதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் எண்ணுக்கணக்கற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தன.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இயக்கத்திற்கு வெளிப்படையாக கூறப்படுகின்ற காரணம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலை எதிர்த்துப் போராடுவது, அதாவது ஏதோவொரு விதத்தில் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு நடவடிக்கையைக் கொண்டுவருவது என்பதாகும். ஆயினும், இந்த ஒடுக்குமுறையான, பிற்போக்கான வழிமுறைகள் ஆதாரமற்ற, பெயர்கூறாத கண்டனங்கள் மற்றும் குற்றமற்றதன்மை மீதான அனுமானித்தலின் மீதும் மற்றும் உரிய விசாரணை மீதும் இடைவிடாத தாக்குதல்கள் ஆகியவற்றில் தங்கியுள்ள இந்த பிரச்சாரம் “முற்போக்கான”தாக கூறப்படுவதை பொய்யாக்குகின்றன. இத்தகைய வழிமுறைகள் ஒரு ஜனநாயக-விரோத, எதேச்சாதிகார இயக்கத்தின், அத்துடன், சமூக சமத்துவமின்மை, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள், போர் அச்சுறுத்தல் மற்றும் நாளின் மற்ற மிகப்பெரும் சமூக, அரசியல் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திட்டமிட்டு திருப்புவதாக இருக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் அடையாள முத்திரைகளாய் இருக்கின்றன.
#MeToo இயக்கமானது, நிலைமைகளில் ஒரு மேம்பாட்டைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, உண்மையில், ஜனநாயக உரிமைகளைப் பலவீனப்படுத்துவதற்கே உதவியிருப்பதுடன், மிரட்டல் மற்றும் அச்சத்தின் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது, கணிசமான எண்ணிக்கையிலான கலைஞர்கள் மற்றும் பலரின் மரியாதைகளையும் தொழில்வாழ்க்கைகளையும் அழித்திருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தையும் குடியரசுக் கட்சியையும் வலதின் பக்கமிருந்து எதிர்ப்பது என்ற ஜனநாயகக் கட்சியின் மூலோபாயத்தில் இது தனக்குரிய இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த பாலியல் வெறிக்கூச்சலானது அகநிலைவாதமும், தீவிரமான சுய-மோகிப்பும், அதிகூடிய பகிரங்கப்படுத்தலுக்கான ஏக்கமும் நிறைந்திருக்கின்ற ஹாலிவுட் மற்றும் ஊடகங்களை மையமாகக் கொண்டிருப்பது தற்செயலானதல்ல.
ஹாலிவுட்டில் 1940களின் பிற்பகுதியிலும் 1950களின் ஆரம்பப் பகுதியிலும் மெக்கார்த்திய சூனிய-வேட்டை மிகக் குறைந்த எதிர்ப்பையே பெற்றதென்றால் அதற்கு பெருமளவு காரணம், ஸ்ராலினிசத்தின் மற்றும் மக்கள் முன்னணியின் செல்வாக்கின் கீழ் அமெரிக்க கலைத்துறை-புத்திஜீவித இடதுகள் போதுமான அளவு அரசியல் தயாரிப்பு இல்லாமல் இருந்தமையே காரணமாய் இருந்தது. ஆயினும், அத்துடன் சேர்த்து, தனிமனிதர்கள் தமது தொழில்வாழ்க்கைகளையும் -ஓர்சன் வெல்ஸ் (Orson Welles) இன் பிரபலமான சொல்லாடலைப் பயன்படுத்துவதானால், அவர்களது நீச்சல்குளங்களையும்- காப்பாற்றிக் கொள்வதற்காக, சந்தர்ப்பவாதமான விதமாய் தமது முன்னாள் நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கு எதிராகத் திரும்பினர், ”பெயர்களை கூறினர்”, உறவுகளை முறித்துக் கொண்டனர், பெரும்பாலும் இதனை வெளிப்படையாக எந்த வருத்தமும் இல்லாதவர்களாக அதைச் செய்தனர் என்ற உண்மையும் உடனிருந்தது. முன்பு, தான் அலட்சியத்துடனேயே பேசிவந்திருந்த இயக்குநர்-துப்பு கொடுப்பவரான எலியா கசான் (Elia Kazan) உடன் வேலை செய்வதற்கு சம்மதம் தெரிவித்ததை “விளக்குவதற்கு” நடிகர் ஜேம்ஸ் டீன் (James Dean) சொன்ன அழியா வசனத்தை ஒருவர் நினைவுகூர வேண்டும்: “அவர் என்னை நட்சத்திரமாக்கினார்.”
திரைப்படத் துறை மற்றும் அதுசார்ந்த துறைகளில் வெகுகாலமாக நிலவி வந்திருக்கும் தார்மீக நெறிகளைக் குறித்தெல்லாம் எந்த பிரமைகளும் இருக்கக் கூடாது. எண்ணிலடங்கா அழகான இளம் பெண்களும் ஆண்களும், புகழுக்கு ஏங்கி, தமது வருங்காலங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கக் கூடியவர்களாகத் தெரிகின்ற, செல்வாக்கான அல்லது ஓரளவுக்கு கீழ்நிலையில் இருக்கின்ற “நுழைவாயில் காவலாளி” ஆளுமைகளாக இருக்கின்ற ஆண்களின் மற்றும் சிலசமயங்களில் பெண்களின் கருணையில் தம்மைக் காண்கின்றனர். இது துஷ்பிரயோகத்திற்கு மிகவாய்ப்பான ஒரு சூழ்நிலையாக இருக்கிறது. இது அடிப்படையாக பாலியல் விவகாரம் குறித்ததல்ல, மாறாக அதிகாரத்தை செலுத்துவதைக் குறித்ததாகும்.
அமெரிக்காவில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை ஆட்டுவிக்கிறதாக இருக்கின்ற பிரபலங்களின் பொன்னுலகை —குறிப்பாக அதற்கான மாற்று பலருக்கும் பொருளாதார அல்லது உளவியல் பாதாளமாக தென்படக் கூடியதான நிலைமைகளின் கீழ்— குறித்த கற்பனாவுலக வகையையும், அத்துடன் அதில் பங்குபெற அனுமதிக்கப்படாமல் போவது குறித்த பேரச்சத்தையும், விவரிப்பதற்கு இக்காலத்துக்கு ஒரு தியோடர் டிரைய்ஸர் அல்லது எஃப் ஸ்காட் ஃபிட்ஸ்கெரால்ட் (Theodore Dreiser or F. Scott Fitzgerald) தேவைப்படும்.
(ட்ரைய்ஸரின் ஒரு அமெரிக்க துன்பியலில் (An American Tragedy) கிளைட் கிரிஃபித்ஸ்: “அவன் இங்கே கண்டதைக் கொண்டு மிகவும் அந்நியப்பட்டவனாக, மிகவும் தனிமைப்பட்டவனாக, மிகவும் உளைச்சல் கண்டவனாக, மிக சித்தரவதைப்பட்டவனாக உணர்ந்தான், ஏனென்றால் அவன் பார்த்த இடங்களிலெல்லாம் காதலும், நேசமும், திருப்தியும் இருப்பதாகப்பட்டது. என்ன செய்வது? எங்கே போவது? இப்படியே காலத்திற்கும் அவனால் தனியே பயணித்துக் கொண்டிருக்க முடியாது. அவன் பரிதாப நிலையில் இருந்தான்... ஏழையாக இருப்பது, விரும்பிய வழியில் வாழ்க்கையை நடத்த பணமில்லாதவனாக அந்தஸ்தில்லாதவனாக இருப்பது எத்தனை கடினமானதாய் இருந்தது... அவன் மிகவும் ஏங்கிய செல்வமும், அழகும், பிரத்தியேக சமூக அந்தஸ்தும் தண்ணீரைப் போன்று ஓடுகின்றதும் நிலையற்றதுமான அவனது மனோபாவத்தின் மீது அத்தனை பெரிய தாக்கம் செலுத்தும்போது அவன் என்ன செய்ய முடியும்.. அந்த உலகில் வாழ்வது தான் எத்தனை அற்புதமானது.”)
வாய்ப்புதேடுவோரில் பலர் எந்த மட்டத்திற்கு தொழில்வாழ்க்கையில் வெற்றிபெறுகின்றதான பேரில், “சாதிப்பதற்கு” தேவையான விருப்பமில்லாத மேற்செலவுகளில் ஒன்றாக அதனை நியாயப்படுத்தி, பாலியல் நடவடிக்கைக்கு உடன்படுகின்றனர் என்பதில் எவரும் விவரமில்லாத ஏமாளிகளாய் இருக்க முடியாது; இதில் ஒரு பாதி-காதல் ஒளிவட்டத்திலான அவர்களது இறுகிய மனத்துடனான திட்டமிட்ட காய்நகர்த்தல்களைத் தவிர அவர்களது உள்மனதில் எவ்வித சம்பந்தமுமிருப்பதில்லை.
குறிப்பாக விடயங்கள் எதிர்பார்த்தவிதத்தில் சரியாக செல்லாவிடின், சங்கடமும் வருத்தமும் பின்னாளில் வரலாம். தமது தொழில்வாழ்க்கைகள் தேக்கமடைந்திருப்பதை அல்லது தேய்ந்து செல்வதை —பல சந்தர்ப்பங்களில் இது அவர்களின் பிழையால் நடப்பதல்ல என்றபோதிலும்— காணுகின்ற நடிகைகள் உள்ளிட்ட தனிமனிதர்கள், ஹாலிவுட்டிலான தமது ஏமாற்றத்தை அல்லது பிரமைவிலக்கத்தை, கண்மூடித்தனமாகவும் பழிவாங்கும் எண்ணத்துடனும், திருப்பி வைன்ஸ்டீன் போன்றதொரு மனிதரின் மீது குவிக்கலாம். (மேலும், நாம் முன்னர் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல, சில விவகாரங்களில் பாலியல் துர்நடத்தைப் பிரச்சாரம் உண்மையில் பலரது தொழில்வாழ்க்கைகளைப் புதுப்பித்திருக்கிறது, அவர்களது புதிய நிதி சாத்தியங்களை திறந்து விட்டிருக்கிறது. முன்வந்து குற்றம்சாட்டுபவர்களுக்கு பொதுவாக ஊடக பாராட்டு கிடைக்கிறது ஒட்டுமொத்த விவகாரத்தில் நல்ல பலன் பெறுகிறார்கள் என்கிறபோது அவர்களின் “துணிச்சலை” பாராட்டுவதென்பது மூளையற்ற செயலாகும்.”)
சமூக அக்கறையின்மையும் சுய-மோகிப்பும் நேர்மறை குணங்களாக மாற்றப்பட்டு விட்டிருக்கின்ற மோசமான கலை மற்றும் சித்தாந்த நிலைமைகளின் கீழ் வெற்றியை ஈட்டியிருக்கின்ற இன்றைய திரை ஆளுமைகளைக் குறித்து நல்லவிதமாய் ஒருவர் எண்ணுவதற்கு எந்தவிதமான சிறப்புக் காரணமுமில்லை. சென்ற ஆண்டில் நாம் எழுதியதைப் போல, “தொழிலாள வர்க்கப் பெண்கள் —ஒரு தொழிற்சாலை அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும்போது பாலியல் அழுத்தங்களுக்கு ஆளாவதென்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட வாழ்வா சாவா பிரச்சினையாக ஆகலாம்—முகம்கொடுக்கின்ற நிலைமைக்கும், மறுபக்கத்தில், ஒரு தொழில்வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக செயல்படுகின்ற ஒரு பொழுதுபோக்கு கலைஞர் அல்லது கூத்தாடிக்கு திறந்திருக்கும் தெரிவுகளுக்கும் இடையில் ஒருமாபெரும் வித்தியாசம் இருக்கிறது.”
தமது ஆவேசத்திலும் நோக்குநிலை பிறழ்விலும், பல்தரப்பான #MeToo ஊக்குவிப்பாளர்கள், பாலியல் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை பெண்கள் முன்வைக்கின்ற போது, அவை வேறு எந்த ஆதாரமும் இல்லாதநிலையில் வைக்கப்பட்டாலும் கூட, “பெண்கள் நம்பப்பட வேண்டும்” என்பதாக கூறுகின்றனர். இரண்டு தனிநபர்களது வாய்வார்த்தைகளை மட்டுமே நம்பியிருக்கும்படியான சில சூழ்நிலைகள் அமைகின்றன என்பது வலிமிகுந்தவொரு யதார்த்தமாகும். சில குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புகின்ற சாத்தியத்தை இது கொண்டு வருகிறது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
ஆயினும் அதற்கு மாற்றுவழி —வெறுமனே குற்றம்சாட்டுபவரது வார்த்தையை மட்டும் நம்புவது என்பது— அதனினும் மோசமானதாய் இருப்பதோடு, குற்றமின்மையை ஊகிப்பது அல்லது குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு வலுவான ஆதாரம் தேவையாயிருப்பது ஆகியவற்றை ஒரு கேலிக்கூத்தாக ஆக்குகிறது.
Scottsboro Boys மற்றும் Emmett Till போன்ற பயங்கர வழக்குகள், அவற்றுடன் மிக சமீபத்திய, டவானா பிராவ்லி சம்பந்தமான வழக்கு, வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் Duke lacrosse அணியின் “ஜாக்கி”க்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் CBC நபரான-ஆளுமையான- ஜியான் கோமேஷிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போன்றவை விளங்கப்படுத்துவதைப் போல, ஆண்களைப் போலவே பெண்களும் பொய்சொல்கிறார்கள்.
“வழமைக்குமாறான” அல்லது ஏற்பில்லாத வகை பாலியல் நடத்தைக்கு பெண்கள் குறிப்பான மற்றும் கபடவேடமான தண்டனைகளுக்கு உள்ளாகின்றனர் என்ற அதே காரணத்தாலேயே, அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பொய் சொல்வதற்கான ஒரு ஊக்கத்தையும் கொண்டிருக்கின்றனர்.
மேலும், இதே வரிசையில், பெண்கள் “தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடுகின்ற ஒரு ஒடுக்கப்பட்ட பாலினமாக” இருக்கின்ற காரணத்தால், “பயங்கரவாதிகளை” போல, அவர்களும் “வன்முறையின் மிகவும் மனிதத்தன்மையற்ற செயல்களில் இருந்தும் சுருங்கிக் கொள்வதில்லை” என்ற நாவலாசிரியர் ஆல்ஃபிரட் டொப்லின் (Alfred Döblin) இன் கருத்தில் இருக்கும் உண்மையைப் புறந்தள்ளுவதென்பது ஒருவர் சமூக மற்றும் உளவியல் யதார்த்தத்தை எளிமையாக உதாசீனப்படுத்துவதாக இருக்கும். வன்மமானது உளவியல்ரீதியாக அல்லது சமூகரீதியாக ஒடுக்குகின்ற மற்றும் காயப்படுத்துகின்ற நிலைமைகளுக்கான ஒரு எதிர் வெளிப்பாடாக இருக்கலாம், ஆயினும் அதற்காக அது புனிதமானதாகவோ அல்லது அங்கீகரிக்கத்தக்கதாகவோ ஆகிவிடாது. “அப்பாவி ஆண்கள் தண்டனைக்கு முகம்கொடுப்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை ஏனென்றால் பெண்கள் அந்த அளவுக்கு மிகவும் துன்பப்பட்டு வந்திருக்கின்றனர்!” என்ற பெரும்பான்மையான பெண்ணிய கருத்துரைகளின் உட்கருத்தானது சற்றும் முற்போக்கான உள்ளடக்கமற்ற ஒரு பயங்கரமான மற்றும் அவமானகரமான சுலோகமாகும்.
“ஓராண்டு கால குற்றச்சாட்டுகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் வேலைநீக்கங்களின் அலையானது உண்மையில் அமெரிக்கர்களை பாலியல் துன்புறுத்தல் குறித்து கூடுதல் சந்தேகம் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது” என்று 2017 நவம்பர் முதல் 2018 செப்டம்பர் வரை நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்ட தி எகானாமிஸ்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த பத்திரிகை எழுதியது: “இருபது ஆண்டுகளுக்கும் முன்பாக வேலையிடங்களில் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய ஆண்கள் தமது வேலைகளில் தொடர வேண்டும் என்று பதில் கொடுத்த வயதுவந்த அமெரிக்கர்களின் சதவீதம் 28 இல் இருந்து 36க்கு அதிகரித்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாரிடும் பெண்கள் தீர்வுகளை விடவும் அதிகமாய் பிரச்சினைகளுக்கே காரணமாகிறார்கள் என்று கருதுகிறவர்களின் சதவீதம் 29 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் பாலியல் தாக்குதல் குறித்த போலியான குற்றச்சாட்டுகள், புகாரளிக்காது விடப்படுகின்ற அல்லது தண்டனையின்றி விடப்படுகின்ற தாக்குதல்களைக் காட்டிலும் ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதாக இப்போது 18 சதவீத அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.” “ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானதான இந்த அபிப்ராய மாற்றங்கள் ஆண்களை விடவும் பெண்களிடையே அதிகமாய் இருக்கின்றன” என்று அந்தக் கட்டுரை சேர்த்துக் கொள்கிறது.
பொதுமக்களின் தரப்பிலிருந்து பெருகும் இந்த சந்தேகமானது —ரோஸ் மக்கோவன், ஆசியா அர்ஜெண்டோ மற்றும் பிரபலங்களையும் மற்றவர்களையும் சுய-விளம்பரம் தேடுவோராக அல்லது அதனினும் மோசமானவர்களாக பொதுமக்கள் காணும் போக்கு அதிகரிக்கிறது— பொதுவாக ஆரோக்கியமானதொரு கூறினைக் கொண்டிருக்கிறது. பிரெட் கவனாவ்-கிறிஸ்டின் பிளாஸி ஃபோர்ட் இடையிலான மோதலிலும் #MeToo, ஜனநாயகக் கட்சி மற்றும் போலி-இடது வட்டாரங்களில் வாய்வீச்சும் வெறித்தனமும் கூட்டப்பட்டதன் பின்னாலான காரணிகளில் இதுவுமொன்றாய் இருக்கிறது. இந்த சக்திகள் அமெரிக்க பொது மக்களை நம்பச்செய்வதில் பெருமளவு தோல்வி கண்டிருக்கின்றன, இப்போது மேலும் மேலும் அவர்களைச் சாடுவதற்கு தலைப்படுகின்றன.
ஆயினும், அவர்களது முயற்சிகள் பின்விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. நியூயோர்க்கரில் ரோனன் ஃபரோவின், நியூ யோர்க் டைம்ஸ் செய்தி நிருபர்களின் மற்றும் ஏராளமான மற்றவர்களின், நேர்மையற்ற, உணர்ச்சி பரபரப்புக்குத் தீனி போடுகின்ற பத்திரிகைத்துறை “அம்பலங்கள்” கட்டவிழ்வதைப் பொறுத்தவரை, அவை கட்டவிழவே கூடும், இது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான உண்மையான பாதிப்படைந்தவர்களின் கூற்றுக்களையும் குற்றச்சாட்டுகளையும் பலவீனப்படுத்தும் என்பதோடு அவற்றுக்கான ஒரு பின்னடைவையும் உருவாக்கும். ஃபாரோ, ஜெசிக்கா வாலண்டி, ரெபெக்கா ட்ரைய்ஸ்டர் மற்றும் குழுவினர் இதுவிவகாரத்தில் கொண்டிருக்கும் பொறுப்பற்ற தனம் என்பது அதன் பாதிப் பெண் அலுவலர்கள் உள்ளிட மக்களின் பெரும் எண்ணிக்கையிலானோரின் தலைவிதிக்கு அவர்கள் காட்டுகின்ற ஆழமான, குட்டி-முதலாளித்துவ அலட்சியத்தின் இன்னுமொரு வெளிப்பாடு மட்டுமேயாகும்.
பாலியல் தாக்குதல் மற்றும் வன்முறை —இவற்றில் அநேகமானவை பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன— என்பது, எந்த புள்ளிவிவரங்களை ஒருவர் தெரிவு செய்து கொண்டு பார்த்தாலும், முக்கியமானதும் பயங்கரமானதுமான சமூக நிகழ்வாகும். ஒருவரின் உடல் மீது அத்துமீறுவதென்பது சாத்தியமானதிலேயே மிகவும் சேதமிழைக்கின்ற மற்றும் அவமதிக்கின்ற அனுபவங்களில் ஒன்றாக அமைகிறது. பாலியல் அத்துமீறலானது வர்க்க சமூகத்தின் கொடூரத்தை தனிநபர்கள் மற்றும் சமுதாயங்களின் அன்றாட வாழ்வில் அது தோற்றமளிக்கின்றதொரு வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.
ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த பெண்கள், சமூகரீதியாக பொதுவாக பாதுகாப்பற்றும் உடைமைகளற்றும் இருப்பவர்கள், மிக இளைய வயதினர், பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்திலுள்ளவர்களின் கருணையில் வாழத் தள்ளப்பட்டிருப்பவர்கள், தமது மேலதிகாரிகளை அல்லது அரசாங்க அதிகாரிகளை சார்ந்து வாழ வேண்டியிருப்பவர்கள் ஆகியோரே மிகவும் எளிதில் பலியாகும் நிலையில் இருக்கின்றனர். ஆயினும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உள்ளும் அவர்கள் மத்தியிலும் இருக்கின்ற வன்முறை என்பதும் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்வின் ஒரு உண்மையாய் இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்ய நினைக்கலாம். உதாரணமாக, வேலைநீக்கம் நடந்த குடும்பங்களில் வீட்டு வன்முறை கூர்மையானதொரு அதிகரிப்பைக் கண்டிருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
எவ்வாறாயினும், அவ்வப்போது சில வாய் வார்த்தைகள் சொல்வதைத் தாண்டி, பணக்காரர்களாலும் பராக் ஒபாமாவின் முன்னாள் உதவியாளரான டினா சென் போன்ற செல்வாக்கான தனிமனிதர்களாலும் இப்போது தலைமை கொடுக்கப்படுகின்ற #MeToo மற்றும் Time’s Up இயக்கங்களின் எவரொருவரும் தொழிலாள வர்க்கப் பெண்களுக்காய் பேசுவதே கிடையாது, அவர்கள் தங்கள் தலைவிதிப்படி விடப்படுகின்றனர்.
ஒட்டுமொத்தத்தில், #MeToo என்பது ஒரு உண்மையான சமூகப் பிரச்சினைக்கான ஒரு பிற்போக்கான பதிலிறுப்பாக இருக்கிறது.
இன்றைய சமூகத்தின் அநியாயம் மற்றும் அநீதி குறித்த நடுத்தர வர்க்க பெண்ணியவாதிகளது புகார்களின் வெறுமையானது அவர்களது தேர்ந்தெடுத்த புகார்களில் காட்டப்படுவதாக இருக்கிறது. வருடாந்திரம் தொழிற்துறை விபத்துகளில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள் அல்லது வலிமருந்துகளின் அளவுக்கதிமான அளவுகளால் உயிரிழக்கும் அல்லது தற்கொலை செய்து கொள்ளக் கூடிய பத்தாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதில்லை. அந்த பாதிப்பும், அதேபோல உலகமெங்கிலும் அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் உருவாக்கப்படும் கொலைபாதக சேதாரமும் -இவை இந்நாட்களில் பெரும்பாலும் “மனித உரிமைகள்” அல்லது இன்னும் “பெண்களது உரிமைகள்” என்ற பேரிலும் கூட நிகழ்த்தப்படுகின்றன- ஒட்டுமொத்தமாக அவர்களது தலைவிதி என்பதைப் போல எளிதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  
புகாரிடுவதற்கு குறைவாக கொண்டிருப்பவர்கள்தான் உரத்து புகாரிடும் நிலையாக இருக்கிறது. தொழில்முறையாக பெண்கள் கடந்த பல தசாப்தங்களில் மிகப்பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் கொண்டிருக்கும் பட்சத்தில் நிதிரீதியாக தண்டிக்கப்பெறுவது [அவர்கள் மிக வசதியானவர்களாக இல்லாத வரை] தொடர்கின்ற நிலையிலும் கூட “சமமான கல்வி நிலைகள் கொண்ட, ஒரே தொழிலில் சமமான நேரத்திற்கு பணியிலமர்த்தப்படுகின்ற, இளம் வயது ஆண்கள் பெண்கள் மத்தியில் [முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்] எந்த பாலின ரீதியான ஊதிய இடைவெளிகளும் இருக்கவில்லை” என்று ஐக்கிய இராச்சியத்தின் ஆராய்ச்சியாளரும் கல்வியாளருமான அலிசன் வொல்ஃப் தெரிவிக்கிறார்.
பெண் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கணக்கியல் துறையினர் மற்றும் பிற தொழில்துறையினரின் எண்ணிக்கைகள் சமீப ஆண்டுகளில் பெரும் பாய்ச்சல் கண்டிருக்கின்றன. அமெரிக்காவில் “பெண் பயிற்சி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 1970 இல் 3 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, சட்டக் கல்லூரி மாணவர்களில் பாதிப் பேர் பெண்கள்” என்று வொல்ஃப் விளக்குகிறார். தொழில்முறை பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் ஆண்களின் எண்ணிக்கை லேசாக வீழ்ச்சி கண்டிருக்கும் (1982 இல் 40,229 ஆக இருந்ததில் இருந்து 2010 இல் 34,661க்கு) அதேநேரத்தில், அதில் பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது மடங்கு —1970 இல் 1,534 ஆக இருந்ததில் இருந்து 2010 இல் 30,289க்கு— அதிகரித்திருக்கிறது. 
இந்த புதிய வசதியானதும் சுயாதீனமானதுமான சமூக அடுக்கின் ஒரு பகுதி இன்னும் அதிக வேட்கை கொண்டிருக்கிறது, அது நல்ல வசதியான இடங்களில் அமர்ந்திருக்கும் ஆண்களை —அவசியப்பட்டால் தாட்சண்யமற்ற சூழ்ச்சியான வழிமுறைகளின் மூலமும்— தாங்கள் இடம்பெயர்க்க வேண்டிய போட்டியாளராக காண்கிறது. உயர் நடுத்தர வர்க்கத்திற்குள்ளான இந்த ஆக்ரோஷமான உட்சண்டை, “பாலின சுத்திகரிப்பு”, #MeToo இயக்கத்தின் வடிவத்திலும் பாலியல்ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி —இவற்றில் பலவும் மிகைப்படுத்தப்பட்டவையாகவோ அல்லது கண்டுபிடிக்கப்பட்டதாகவோ இருக்கின்றன— கல்வித்துறை மற்றும் ஊடக ஆளுமைகளை வெளியேற்றுவதற்கான ஏராளமான முயற்சிகளின் வடிவத்திலும் தலைப்புச்செய்திகளில் இடம்பிடிக்கின்றன.
ஜேர்மன் சோசலிஸ்டான கிளாரா ஸெட்கின் (Clara Zetkin) 1896வாக்கிலேயே பின்வருமாறு சுட்டிக்காட்டியிருந்தார், “ஒரு தொழிலை மேற்கொள்வதற்கு பாலின சமத்துவத்திற்கான முதலாளித்துவப் பெண்களின் கோரிக்கை என்பது...” ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சுதந்திரமான வியாபாரத்தினையும் சுதந்திரமான போட்டியையும்  நடைமுறைப்படுத்துவது என்பதைத் தவிர்த்து வேறெந்த அர்த்தமும் அளிக்கவில்லை. இந்த கோரிக்கையை அடைவதென்பது நடுத்தர வர்க்கத்தின் மற்றும் புத்திஜீவிகளின் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் நலன்களின் ஒரு மோதலை எழுப்பி விடுகிறது.” மறுபக்கத்தில், “பாட்டாளி வர்க்கப் பெண்களின் விடுதலைப் போராட்டமென்பது, முதலாளித்துவப் பெண்களுடையதைப் போல, தனது சொந்த வர்க்கத்து ஆண்களுக்கு எதிரானதொரு போராட்டமாக இருக்க முடியாது.” அவள் “தனது சொந்த வர்க்கத்தின் ஆண்களுடன் கைகோர்த்துப் போராடுகிறாள்.”
மிருகத்தனமாக நடந்து கொள்பவர்களாக அல்லது வேட்டையாடும் மனிதர்களாக சொல்லப்படுபவர்களைப் பலிகொடுத்து தாம் முன்னேறுவதை நியாயப்படுத்துவதற்கும் அதற்கு வழியமைப்பதற்கும், #MeToo பெண்ணியவாதிகள் தமது சொந்த அறநெறி விதிகளை திணிக்க முயன்று வந்திருக்கின்றனர். இதற்கும் பொதுவாக பெண்களை பாதுகாப்பதற்கும் குறிப்பாக வேலையிட பாதுகாப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இரண்டு பாலினங்களுக்குமே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தை அதிகமாக நினைவுக்குக் கொண்டுவரும் விதமான கொடுமையான நிலைமைகள் நிலவுகின்ற அமெரிக்காவின் வேலையிடங்களில் இது எந்தவிதமான நேர்மறையான தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருப்பதை போல, “மனித இடைத்தொடர்புகளின் குழப்பங்கள் மற்றும் சிக்கல்களைப் பிரதிபலிக்கின்ற” உள்ளிட்ட ஒரு பரந்த அளவிலான பாலியல் செயல்பாடுகளையும் கூட துஷ்டமானதாக்குவதற்கான முயற்சி இந்த பாலியல் சூனிய-வேட்டையின் மிக தீங்கான அம்சங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
அமெரிக்க தூய்மைவாதத்தின் அல்லது விக்டோரியன்வாதத்தின் ஒருவகையான திருப்தியற்ற மற்றும் சுயநலமான மறுமலர்ச்சியில், புகழ்பெற்ற மனிதர்கள் வரைமுறையற்ற தொடர்புகளுக்காகவும் (உதாரணமாக, “வரிசையான டேட்டிங்”), பலருடன் உறவு வைத்துக் கொள்வதற்காகவும், ஒரு தேசிய அளவில் விளம்பரம் பெற்ற ஒரு வழக்கில் போல, “பாலியல் பகுதிக்குள், தேவையில்லாத பாலியல் முன்செல்லல்களுக்குள் மற்றும் திடீரென முடிந்து போகின்ற (அதாவது, போதுமான எச்சரிக்கை கொடுக்காமல் ஒரு உறவை முறித்துக் கொள்வது!) பரஸ்பர சம்மதத்துடனான பாலியல் உறவுகளுக்குள் திசைமாறிச் செல்கின்ற ஒரு நெருங்கியபழக்க”த்திற்காகவும் கண்டனம் செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.
அதனுடன் சேர்த்து இது “தெளிவற்றதான பகுதி பாலியல்” அனுபவங்களை —உதாரணமாக, தனிமனிதர்கள் பாலியல் உறவுக்கு உடன்படுகிறார்கள், பின் அதில் ஒருவர் ஏமாற்றம் காண்கிறார்— குற்றமாக்குவதற்கான ஜனநாயக-விரோத மற்றும் மோசடியானதொரு முயற்சியாகவும் இருக்கிறது. இவ்வாறே, நகைச்சுவை நடிகரான ஆசிஸ் அன்சாரி (Aziz Ansari) மீது, அவருடனான பாலுறவில் திருப்தியடைந்திராத ஒரு பெண் அதன்பின் ஒரு பத்திரிகையாளரிடம் இதைக் குறித்து புகாரிட்டு —அட்லாண்டிக் பத்தியாளர் கெய்ட்லின் ஃபிளானகன் (Caitlin Flanagan) வார்த்தைகளில் கூறுவதானால், “ஆபாசப் பழிவாங்கலின் 3,000 வார்த்தைகள்”— வெறுப்பூட்டத்தக்க ஒரு தாக்குதலை நடத்தக் கண்டோம். “அந்த சம்பவம் விவரிக்கப்பட்ட விதமானது அவர் கூறியதை நிரூபிக்கக் கூறப்பட்டிருந்ததை விடவும் அதிகமாக அன்சாரியை புண்படுத்துவதற்காகவும் அவரை அவமதிப்பதற்காகவுமே கூறப்பட்டதாய் இருந்தது” என்று ஃபிளனகான் எழுதினார். “அந்த இரண்டு பெண்களுமாய் (அந்த பத்திரிகையாளர் உள்ளிட) சேர்ந்து அன்சாரியின் தொழில்வாழ்க்கையை அழித்திருக்கலாம், ஆண்களது மோசமான மற்றும் ஏமாற்றமான ஒவ்வொரு வகையான தவறான நடத்தைக்கான தண்டனையாக அதுவே இப்போது இருக்கிறது,”.
இந்த அழிப்பு முயற்சியின் உத்வேகத்துடன், ஜூலியான் எஸ்கோபீடோ ஷெப்பேர்ட் Jezebel வலைத் தளத்தில் இல் எழுதியிருக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய கட்டுரை நமக்கு சொல்கிறது, “#MeToo இயக்கத்தின் அடுத்த திசை மிகப் பொதுவானதும் வரையறுக்கக் கடினமானதுமான சில அனுபவங்களை உற்றுநோக்குவதை நோக்கியதாகும். தெளிவில்லாத பகுதிகளுக்குள் இன்னும் ஆழமாய் தோண்டிச் செல்வதன் மூலமும் அவை உருவாக்குகின்ற தீங்குகள் குறித்து நம் அனைவருக்கும் கற்பித்துக் கொள்வதன் மூலமும் பெண்களும் பிற ஒதுக்கப்பட்ட பாலினங்களும் அச்சம் குறைந்து வாழத்தக்கதான ஒரு கூடுதல் சமத்துவமான உலகத்தை அது எதிர்நோக்குகிறது... தீங்கான சமத்துவமற்றதாக இருக்கின்ற ஆனால் சட்டவிரோதமில்லை என்பதாய் இருக்கின்ற நடத்தையை நாம் எவ்வாறு பேசுவது? அதனால் பாதிக்கப்படுகின்ற பெண்களைக் குறித்து நாம் எவ்வாறு பேசுவது? ஒரு கூட்டாளியாக இருக்க வேண்டிய ஒருவருக்கு எதிராக இத்தகைய நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோது என்ன நடக்கிறது?”
இது, WSWS வாதிட்டு வந்திருப்பதைப் போல, “பொது அவமதிப்பு மற்றும் பரிகசிப்பின் வழியாக தண்டனை அளிக்கப்படுகின்ற”தும் “அகநிலையான, தனிமனித மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகள் குற்றவியல் பொறுப்பை ஸ்தாபிப்பதற்கான ஒரு மாற்று அடிப்படையாக முன்தள்ளப்படுகின்ற”துமான “சட்டமற்ற எல்லைப்பகுதி”யாக இருக்கிறது.
“வரவேற்கப்படாத” அல்லது தேவையில்லாத முன்செல்லல்களை செய்வது உள்ளிட —இவை தடை செய்யப்பட்டால் அது எந்த வகையான புதிய பாலியல் உறவுகளும் உருவாவதற்கே கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துவிடும்— பாலியல் தடுமாற்றங்கள் மற்றும் தவறானதொடர்புகளின் பல்வேறு வடிவங்களும் கூட இந்த “தெளிவற்ற பகுதி”யில் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
ஒவ்வொரு தவறான அடியெடுப்பை அல்லது தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையையும் துஷ்பிரயோக வடிவமாக வகைப்படுத்துவதென்பது மனிதத்தன்மையற்றதும் பிற்போக்குத்தனமான அபத்தமுமாகும், அவை அத்தனையும் முக்கியத்துவத்துடன் எடுத்துக் கொள்ளப்படுமாயின், அது குறிப்பாக எண்ணற்ற இளம் ஆண் பெண்களின் உளவியலில் பெரும் தீங்கை விளைவிக்கும்.
இதனிடையே, உயிர் வாழ்வதற்கும், உடையை சம்பாதிப்பதற்கும் ஒரு குடும்பத்தை உண்டாக்குவதற்கும் ஒரு ஸ்திரமற்ற சமூக மற்றும் அரசியல் சூழலில் வாழ்க்கையை ஓட்டுவதற்குமான அன்றாட போராட்டம் தான் உழைக்கும் வர்க்க மக்களின் —ஆண்கள் மற்றும் பெண்கள்— மிகப் பெரும்பான்மையினரின் சிந்தனைகளை ஆக்கிரமித்திருப்பதாகும். அதன் உச்சமாக, இன்னும் அதிகத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலானோர் ஒட்டுமொத்த சமூக ஒழுங்கிலும் ஒரு தீவிரமான மாற்றம் அவசியமாயிருக்கிறது என உணரும்நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
#MeToo சூனிய-வேட்டையினர் அந்தப் போராட்டத்தின் பகுதியாக இல்லை என்பதுடன் அதற்கு ஆவேசமான குரோதம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
By David Walsh
19 October 2018
மேலதிக வாசிப்புக்களுக்கு,
“பாலியல் துன்புறுத்தலுக்கு” எதிரான பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அடக்குமுறை அரசியல் நோக்கங்கள் பகிரங்கமாக வெளிவருகின்றன
[28 Novmber 2017]
அமெரிக்காவின் சமீபத்திய ‘ஸ்கார்லெட் லெட்டர்’ தருணம்
[09 December 2017]
கான் திரைப்பட விழாவில் #MeToo: அனைத்தும் பணம் மற்றும் அதிகாரத்திற்காக
[21 May 2018]

http://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/meto-n01.shtml

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts