Search This Blog

Thursday, 29 November 2018

“மாவீரர் தினம்” தமிழ் தேசியவாதத்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியல்

“Heroes Day” – Pro-imperialist politics of Tamil Nationalism

K.Nesan
28 November 2018
ன்று, இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ்மக்கள் உள்நாட்டுப்போரில் இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளை பொதுவிடங்களில் ஒன்றுகூடி நினைவுகூருகின்றனர்.
இளம் வயதில் கொல்லப்பட்ட இந்த உறவுகளின் சோகமயமான இழப்புகளை நினைவுகூரும் நிகழ்வுகளின் மத்தியிலும் தமிழ் தேசியவாதம் தொழிலாளர், உழைக்கும் மக்களை இன்று ஒரு முட்டுச்சந்திக்கு கொண்டு சென்றிருப்பதை குறிப்பிடுவது இன்றைய நிலைமைகளில் அவசியமாகின்றது.
இன்றைய சோகமயமான நிகழ்வுகளில் பங்குபற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்களும் இந்த நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியவர்களின் அரசியல் நோக்கங்களும் நேரடியாக முரண்பட்டவை. ஒழுங்கமைப்பளர்கள் அனைவரும், இந்த இளம் மனிதர்களின் மரணங்களை சுரண்டி ஒரு ஏகாதிபத்திய தலையீட்டிற்கு பாதை திறக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடியில் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கன்னையின் பிரதான பாதுகாவலனாக உருவெடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புக்களில் நேரடி பங்காளியாகியிருக்கின்றது.
கீழே பிரசுரமாகும் கட்டுரை முதலில் டிசம்பர் 122011 இல் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரமாகியது. இதன் ஆய்வுகளின் சரியான தன்மையினை கடந்த ஏழு வருடங்களின் நிகழ்வுகளும் முழுமையாக நிரூபித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------    
மிழீழ விடுதலைப் புலிகளின் மிஞ்சி இருக்கும் குழுக்களினால் "மாவீரர் தினம்" இந்த மாதம் 27 ம் திகதி ஒரு தொடர் மேற்கத்தைய நகரங்களில் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த சில கிழமைகளாக புலிகளின் இரண்டு பிரிவுகளினால் இந்த தினத்தினை கொண்டாடுவதற்கு தனி உரிமை கோரி இணைய தளங்கள் மூலம் போட்டி பிரசாரங்கள் நடத்தப்பட்டது. இந்த பிரசாரங்கள், முரண்பட்ட குழுக்களின் நிகழ்சிக்கான தயாரிப்புக்களை வன்முறையினால் நிறுத்துவதில் தொடங்கி பாரிஸில் ஒரு குழு மோதல் வரை வடிவமெடுத்தது. இலண்டலில் இந்த குழு மோதல்களை நிறுத்தி ஒன்றுபட்ட நிகழ்வினை நடாத்த வேண்டும் என உண்ணாவிரதம் நடாத்தப்பட்டது.
புலிகளின் தோல்வியுடன் முடிவிற்கு வந்த இனவாத யுத்தத்தின் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் புலிகள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். இந்த பிரிவுகளின் பிரதான அரசியல் தளம் தொடர்ந்தும் மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகள். புலிகள் மத்தியில் நிகழ்வுகளின் முன்னர் நடந்த இந்த குழு மோதல்கள் புலிகளின் தோல்வியிலிருந்து ஒரு பாடத்தினையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் புலிகளின் அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பத்தினையும், அவர்களது அரசியல் முன்னோக்கான தமிழ் தேசிய வாதத்தின் முட்டு சந்தியினையும் முன்னணிக்கு கொண்டு வந்திருக்கின்றது.
இந்த குழுக்களின் முரண்பாடுகள், இனவாத யுத்தத்திற்கு எதிரான போரில் இராணுவத்துடன் போரிட்டு கொல்லப்பட்ட போராளிகளின் தியாகங்களை முன்னிறுத்தி புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் தங்களது அரசியல் இருப்பினை நிறுத்துவதனை மையமாக கொண்டிருக்கின்றது. அனைத்து குழுக்களும் தங்களது அரசியல் நோக்கம் வடக்கு, கிழக்கில் ஒரு தனி முதலாளித்துவ அரசினை நிறுவுவது என பிரகடனப்படுத்துகின்றன. இவர்களது முரண்பாடுகள் எந்த சர்வதேச வல்லரசுகளிடம் இந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு கோரிக்கை விடுவது என்பதிலேயே இருக்கின்றது. அது மேற்கத்தைய நாடுகளுக்கு ஆதரவாக, இந்திய எதிர்ப்பு வாதங்கள் தொடர்பான முரண்பாடுகளை மத்தியில் கொண்டுள்ளது. ஒரு குழு இலங்கை அரசின் முகவராக மாறியுள்ள புலிகளின் முன்னாள் முக்கிய தலைவரான K.P என்னும் பத்மநாதனின் "தற்காலிக" கூட்டிற்கும் ஆதரவு வழங்குகின்றது.
புலிகளின் போராளிகளாக அணிதிரட்டப்பட்ட பெரும்பான்மையான இளைஞர்கள் தொழிலாளர்கள், விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகதட்டுகளின் குடும்பங்களிலில் இருந்து சேர்க்கப்பட்டவர்களாவர். பெரும்பான்மையான குடும்பங்கள் குறைந்தது ஒரு இளம் உறுப்பினரை தன்னும் இனவாத இராணுவத்தினுடனான போரில் இழந்திருக்கின்றன.
"மாவீரர் தினம்" முதல் முறையாக 1989 இன் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு போரின் இறுதிக்காலத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஏனைய போராளிகள் மத்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளினை நினைவு கூர்ந்து நிகழ்த்திய இராணுவ துணிவினை மேம்படுத்தும் ஒரு உரை இந்த நிகழ்வின் ஆரம்பமாகும். இந்திய துருப்புக்கள் 1987 இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தீவின் வடக்கு, கிழக்குக்கு புலிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்து 1990 இன் மத்தியில் வெளியேறியது. 1990 இல் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒரு வாரம் நீடிக்கும் பொது நிகழ்சியாக அது மாற்றப்பட்டது. பலவிடங்களில் நூற்றுக்கணக்கான கொல்லப்பட்ட போராளிகளின் கல்லறைகளைக் கொண்ட மயானங்கள் தொடர்சியாக நிறுவப்பட்டது. ஒழுங்காக அழகுபடுத்தப்பட்டு நிறுவப்பட்ட இந்த மயானங்கள் ஒரு பொது நிகழ்வுக்கான மண்டபத்தினையும் கொண்டிருந்தன.
மத்திய காலத்து திராவிட கலாச்சாரத்திற்கு சமாந்தரமான கல்லறைகளை வழிபடும் இந்த கலாச்சாரத்தினை புலிகளின் தலைமை அபிவிருத்தி செய்ததன் மூலம் இனவாத ரீதியில் தனது போராளிகளுக்கு உணர்மை ஊட்டியதுடன், புதிய போராளிகளை இயக்கத்திற்கு சேர்த்துக் கொண்டு, சமூகத்தின் மீது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியது. இதற்காக வருடம் தோறும் பொது நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. கொல்லப்பட்ட போராளிகளின் உறவினர்களுக்கு சமூக வாழ்கையில் தனியிடம் வழங்கி பொருளாதார உதவிகள் செய்யப்பட்டதுடன் இந்த நிகழ்வுகளில் விசேட கௌரவமும் வழங்கப்பட்டது. தியாகத்தின் பெயரால் அரசியல் எதிர்ப்பாளர்கள், போட்டி இயக்கங்கள் அவர்களது அங்கத்தவர்கள் அச்சுறுத்தி மௌனமாக்கப்பட்டனர்.
உலகின் பிரதானமான நகரங்களில் புலிகளின் பிரிவுகளினால் ஏட்டிக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முப்பது வருட போரில் கொல்லப்பட்ட இளம் தலைமுறைகளை நினைவுகூரும் சோகம் நிறைந்த ஒரு நாளாக கவனத்தில் எடுத்தனர். ஆனால் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியவர்கள் சொந்த நிகழ்சி நிரலை கொண்டிருந்தனர்.
பிற்போக்கு திராவிட இயக்கத்தின் தலைவர் சுவிஸ்லாந்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். லண்டனில் பிரித்தானிய தொழில் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்கள் உரையாற்றினர். லண்டன் கூட்டத்தில் தமிழ் நாட்டு இனவாத கட்சிகளான மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய இயக்கம் என்பவற்றின் தலைவர்களின் செய்திகள் விடியோவில் திரையிடப்பட்டன. இடது, வலது என்ற வித்தியாசமின்றி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வேறு பல நிகழ்வுகளில் உரையாற்றினார்கள். இது புலிகளின் பிரிவுகள், எந்த கன்னையிடம் இருந்து ஆதரவு திரட்ட முடியுமோ அதனை செய்வதற்கு முயலும் விரக்தியான செயல்பாடாக இருந்தது.
தனி நாட்டிற்கு ஆதரவு கேட்கும் ஒரே மாதிரியான அறிக்கைகளை இந்த குழுக்கள் வெளியிட்டிருந்தன.
"தலைமைச் செயலகம்" என்று தங்களை அழைக்கும் புலிகளின் பிரிவினர் இந்த நிகழ்வு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது, "அனைத்துலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கடந்த ஈராண்டுகளாக பல அழுத்தங்களை மேற்கொண்டுவருவதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அந்த அழுத்தங்களை மேற்கொள்ளும் நாடுகள், நாடுசாரா அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒத்திசைவற்ற தன்மை காணப்படுகின்றது."
"ஆனாலும், எம்மக்கள் மீதான இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தவேண்டும்; எம் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்; அனைத்துலகத்தின் பாதுகாப்புடன் கூடிய, எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் தீர்வு ஒன்றை நோக்கி நகரவேண்டும் என்பதே எமக்கு முன்னுரிமையாக உள்ளது."
புலிகளின் மற்றைய பிரிவான "அனைத்துலக செயலகம்" வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது, "தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்."
"இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்."
"சர்வதேச சமூகம்" என்ற மந்திரத்தின் மூலம் எஞ்சியிருக்கும் புலிகளின் மிச்ச சொச்சங்கள் தொடர்சியாக உலக, பிராந்திய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நாடுகள் மகிந்த இராஜபக்சவின் அரசாங்கம் நடாத்திய இனவாத யுத்ததிற்கு தங்கு தடையற்ற இராஜதந்திர, இராணுவ ஆதரவுகளை வழங்கியிருந்தன. யுத்தத்தின் இறுதிக்கால கட்டத்தில் நூறாயிரக் கணக்கானோர் லண்டன், பாரிஸ், டொரோண்டோ நகர தெருக்களில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிதிரண்டனர். சண்டையினை நிறுத்துமாறு புலிகளின் ஆதரவளர்கள் பிரித்தானிய, அமெரிக்க, பிரெஞ்சு, ஜேர்மன் அரச தலைவர்களின் படங்களின் பதாதைகளை தாங்கியவாறு விடுத்த பரிதாபகரமான கோரிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போரில் கொன்று குவிக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
தற்போது இந்த குழுக்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது போர்குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என, இனவாத யுத்ததிற்கு ஆதரவளித்த அதே நாடுகளிடமே வேண்டுகோள் விடுகின்றன. இந்த நாடுகள் இராஜபக்ஷவின் போர்குற்றங்களின் பங்காளிகள் என்பதுடன் ஒருபோதும் போர்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் கொண்டவை அல்ல. போர் குற்றங்கள், இலங்கை தீவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பின் மீது அழுத்தம் கொடுக்கும் தெரிவுகளில் ஒன்றாகும். இந்த வழியில் இணைந்தால், மனித உரிமைகள் துரும்பு சீட்டினை கைவிட தயார் என்று வாஷிங்டன் இராஜபக்ஷ அரசிற்கு தெரிவித்திருக்கின்றது.
புலிகளின் "தலைமைச் செயலகம்" அதன் அறிக்கையில், "நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நலன்களைப் பேணும் பூகோள அரசியலை தமிழ் மக்கள் நன்கு அறிவர். இப்பன்னாட்டு நலன்சார் அரசியற்போக்கை புறக்கணிக்கும் நோக்கமோ அல்லது அவற்றுடன் ஒத்திசையாமற் பயணிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது." என்கிறது. இது புலிகளின் வேலைத்திட்டத்தில் இருந்து ஊற்றெடுக்கும் பிற்போக்கு தேசியவாத வழிமுறையாகும். இது மீண்டும் மீண்டும் இந்த குழுக்கள் அனைத்தும், பிரதான வல்லரசுகளிடம் ஒரு சுற்றிவளைக்கப்பட்ட தனி தமிழ் பிரதேசம் உருவாகுவதற்கு உதவிகோருவதுடன் அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு சேவை செய்ய வழங்கும் உத்தரவாதமுமாகும்.
மாறிமாறி வந்த இலங்கை அரசாங்கங்கள், யுத்தத்தினை "புலிப் பயங்கரவாதம்" எனக் காட்டி மோசமான சமூக தாக்குதல்களை தெற்கில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விட்டது. போர் முடிந்த பின்னரும் தொடரும் இந்த தாக்குதல்கள், பரந்துபட்ட மக்கள் மத்தியில் இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் மீது பாரிய வெறுப்பினை உருவாக்கியிருக்கின்றது.
புலிகளின் வரலாறு முழுமையும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான ஆதரவினை சிங்கள, இந்திய உழைக்கும் மக்களிடம் பெறுவதினை நிராகரித்திருந்தது. "சிங்கள தேசம்" என பொதுமைப்படுத்தி, அப்பாவி சிங்கள மக்களை படுகொலை செய்த வலதுசாரி தமிழ் இனவாத அரசியலினூடாக, தெற்கில் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் செல்வாக்கினை மட்டுமே அது பலப்படுத்தியிருந்தது.
சிங்கள மொழி பேசும் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடும் அழைப்பினை விடுவதற்கு இயல்பிலேயே தகமையற்று இருப்பதானது அதனது முதலாளித்துவ வர்க்க குணாம்சத்தில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. அதனது முன்னோக்கு, தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதற்கான ஒரு தனி தமிழ் குட்டியரசினை அமைப்பதாகும். புலிகளும், ஏனைய அனைத்து தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கடமைகளை எவ்வாறு சாத்தியமாக்கப்பட முடியும் என்பது பற்றி சற்றும் கருத்தில் கொண்டதில்லை. புலிகள் அமெரிக்கா, இந்தியா உட்பட்ட பலம் மிக்க சக்திகளுக்கு அழைப்பு விடுத்தனரே தவிர, அவர்களது வர்க்க நிலைப்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விட இடம் கொடுக்கவில்லை.
புலிகள், புலம் பெயர் நாடுகளில் வளர்ச்சியடைந்ததற்கான அரசியல் பொறுப்பு சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுக்கள், உட்பட்ட ஐரோப்பிய “இடதுகள்” என அழைக்கப்படுபவர்களிடமே உள்ளது. இவர்கள் தலைமையில் இருந்த அல்லது கூட்டணியில் இருந்த அரசாங்கங்கள் அரசியல் அகதிகள் தொடர்பாக நடைமுறைப்படுத்திய சட்டங்கள், அரசியல் அடைக்கலம் கோரியோரை இரண்டாம்தர பிரஜைகளாக்கியது. நாடுகடத்தப்படுவதற்கும், அதிகரித்தவகையில் இனவெறி தாக்குதல்களுக்கும் உட்படுத்தியது. உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கள், தொழிற் கல்வி கற்கும் படிப்புக்களில் பங்கு கொள்வது போன்றவற்றினை கடினமாக்கியது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்கைத் தரத்தின் மீதும், ஜனநாயக உரிமைகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களோடு இணைந்த இந்த அரசியலால் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேற்கத்தைய அரசியல், சமூக, கலாச்சார வாழ்கையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தமிழ் தேசியவாதத்தின் பிடிக்குள் சிக்கினர்.
தொடர்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் கட்சிகளின் இனவெறி அரசியலினால், முதலாளித்துவ வளர்சியடைந்த நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய ஒரு தமிழ் தலைமுறையை சேர்ந்தவர்கள், அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களின் ஒரு பாகமாக உருவாகியுள்ளனர். அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் வேலையில்லா திண்டாட்டம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவர்கள் வென்றெடுத்த சமூக-நலன்புரி சேவைகள் மீதான தாக்குதல்களின் மத்தியில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு விதிவிலக்கான நிலைமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. உண்மையில் புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முதலாளித்துவத்தின் இனவெறி பிரச்சாரத்தினால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டாவது தலைமுறையினர் தாங்கள் பிறந்த நாடுகளில் இளம் தலைமுறை முகம் கொடுக்கும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் பாகமாக உள்ளனர்.
2008 க்கு பின்னரான உலகப் பொருளாதார நெருக்கடி, சமூக ரீதியாக மிகவும் பேரழிவுகளை உருவாக்க கூடிய ஒரு கட்டத்தினை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடியின் சுமையினை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கு ஆழும் வர்க்கம் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களினதும், இளம் தலைமுறையினரினதும் போராட்டங்கள் வளர்சியடைந்து வருகின்றன.
முப்பது வருட முபாரக் ஆட்சியினை எகிப்தில் முடிவுக்கு கொண்டு வந்த புரட்சி, அமெரிக்க சார்பு இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு புதிய கட்டத்திற்கு அபிவிருத்தி அடைகின்றது. முபாரக்கின் வீழ்ச்சி ஒரு ஆரம்பம், எகிப்திய தொழிலாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்திய உலக சோசலிச வலைத் தளம் எகிப்தின் புரட்சி பற்றி பின்வருமாறு எழுதியது:
“இந்த அசாதாரண நிகழ்வுகள் எகிப்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் திருப்புமுனையானவை ஆகும். இவை தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக சக்தியை எடுத்துக்காட்டியிருப்பதோடு, சோவியத் ஒன்றியத்தின் நிலைகுலைவு “வரலாற்றின் முடிவு'', மனித விவகாரங்களில் வர்க்கப் போராட்டம் ஒரு காரணி என்பதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதான கூற்றுக்களை பதிலளிக்க முடியாத வகையில் மறுத்துரைத்துள்ளன. சித்திரவதை, கைதுகள் மற்றும் அடக்குமுறைக்கு முன்னால் எகிப்தின் பரந்த மக்களின் எதற்கும் அஞ்சாத வீரமானது உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகத்திற்கான முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.”
முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய நாடுகளின் முதலாளி வர்க்கம், தீர்க்கப்படாத ஜனநாயக கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், ஏகாதிபத்தியதிற்கு எதிரான போராட்டத்தினை நடாத்துவதற்கும் இலாயக்கற்றது என்பது இலங்கை மற்றும் எகிப்திய நிகழ்வுகளில் மீண்டுமொருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினை முன்னிறுத்தி தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சி மட்டும்தான் இதை சாத்தியமாக்கும் என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் இலங்கை, எகிப்திய நிகழ்வுகளில் மீண்டும் ஒருமுறை பசுமையாக நிறுவிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ் மொழிபேசும் தொழிலாள வர்க்கத்தின் இணைந்த பாகமாக, தெற்காசியாவிலும் சர்வதேசரீதியாகவும் தனது வர்க்க சகோதரர்களை ஐக்கியப்படுத்தி ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசிற்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகள் நிலை நிறுத்தப்பட முடியும்.
ஏகாதிபத்திய நாடுகளில் வாழும் தமிழ் உழைக்கும் மக்களின் உண்மையான நட்பு சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். அவர்கள் அந்தந்த நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக உள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் இலங்கையில் ஏகாதிபத்திய சார்பு குட்டி தமிழ் அரசு அமைக்கும் முன்னோக்கினை நிராகரிக்க வேண்டும். தாம் வாழும் நாடுகளில் தமது நலன்களோடு இனங்காணக்கூடிய வகையிலான ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்கும் போராட்டத்தோடு தம்மை இணைத்து போராட முன்வரவேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிச புரட்சி முன்னோக்கில் ஐக்கியப்படுத்தும் இந்த முன்னோக்கிற்காக போராடுகின்றது. இலங்கையில், அதனது பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்த போராட்டத்தின் ஒரு நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கிறது.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/hero-n28.shtml

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts