Search This Blog

Sunday, 23 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-1)

மொன்றியாலில் பெப்ரவரி 3,1993 இல் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரான டேவிட் நோர்த் பின்வரும் சொற்பொழிவை நிகழ்த்தினார். இச் சொற்பொழிவு (அப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்று அழைக்கப்பட்ட) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் நீண்ட காலத் தலைவராக இருந்துவந்த கீர்த்தி பாலசூரியாவின் வாழ்வை மற்றும் அவரின் அரசியல் பங்களிப்பை நினைவு கூருவதற்காக ஆற்றப்பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரிய அவரது முப்பத்தி ஒன்பதாவது வயதில், டிசம்பர் 18, 1987 இல் மாரடைப்பால் அகால மரணத்துக்கு ஆளானார்.
தோழர் கீர்த்தி பாலசூரிய மரணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்து சென்று விட்டன என்று நம்புவது கடினமாக உள்ளது. அவர் உயிருடன் இன்று இருப்பாராயின், அவர் தனது நாற்பத்தி நான்காவது பிறந்தநாளைத் தாண்டி ஒரு சில மாதங்கள்தான் சென்றிருக்கக் கூடிய ஒரு தோழரின் வாழ்வையே நாம் இன்று எல்லாவற்றிக்கும் முதலாக நினைவு கூருகின்றோம். கீர்த்தி, அவரின் வயதைக்காட்டிலும் இளமையாய் இருந்தார். அவருக்கு அளப்பரிய அறிவு மற்றும் அரசியல் அனுபவம் என்பன இருந்த பொழுதும், அவரின் ஆர்வம் மற்றும் நகைச்சுவை என்பன ஒரு பையனின் பாங்கை கொண்டிருந்தன. என்றாலும் அவரைப் பொறுத்தவரை முதிர்ச்சியின்மையோ அல்லது அக்கறையின்மையோ அடியோடு இருந்ததில்லை. அவர் ஊடுருவிச் செல்லும் ஆழ்ந்த அறிவுத்திறம் படைத்த மனிதர். அவரின் அரசியல் பற்றுறுதி பல்லாண்டுகாலமாக நெறிமுறைப்படுத்தப்பட்ட படிப்பின் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டு, பலம் சேர்க்கப்பட்டதாக இருந்தது.
நான் கீர்த்தியை முதலில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தினால் (Socialist Labour League) இங்கிலாந்தில் 1972 கோடைக்காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலையில் சந்தித்தேன். அவர் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய ஒரு விரிவுரைத் தொடரில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அவர் கருச்சிதைவுற்ற 1923ம் ஆண்டு ஜேர்மன் புரட்சிபற்றி ஒரு நீண்ட பங்களிப்புச் செய்ததை என்னால் இன்னமும் நினைவு கூரமுடியும். கீர்த்தி இப்பாடசாலையில் சிங்களத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால் முழுச் சபையினரும் அவரின் உணர்ச்சிமிக்க பேச்சினால் வசீகரிக்கப்பட்டிருந்தனர். வார்த்தைகள் அக்கினிக் குழம்பாக அவரிடமிருந்து பெருக்கெடுத்தன. அவரின் மொழிபெயர்ப்பாளர்- தோழர் விஜே டயஸ் என்று நான் நினைக்கின்றேன்- பெரும் முயற்சி எடுத்த பொழுதும், அவரால் கீர்த்தியின் பெருக்கெடுக்கும் பேச்சுடன் ஈடுகொடுக்க முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தனது மொழிபெயர்ப்பாளர் ஒன்றில் சில வசனங்களை விட்டுவிட்டு தடுமாறுகின்றார் அல்லது ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை வேண்டியளவு சரியான நுட்பத்துடன் எடுத்துக்கூறத் தவறிவிட்டார் எனக் கீர்த்தி உணர்ந்ததும், அவர் திடீரென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துத் தனது கருத்தினை தம்மால் முடிந்தமட்டும் எடுத்து முன்வைக்க முற்படுவார்.
அப்பொழுது கீர்த்தி ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் அன்றைய (விரைவில் வங்காள தேசமாக மாற இருந்த) கிழக்குப் பாகிஸ்தான் மீது நடந்த இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பாக சோசலிச தொழிலாளர் கழகம் கடைப்பிடித்த அரசியல் நிலைப்பாட்டை உக்கிரமாக எதிர்த்திருந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்பினை சோசலிச தொழிலாளர் கழகம் அங்கீகரித்ததை எதிர்த்து கீர்த்தி 1971 டிசம்பரிலும், மற்றும் 1972 ஜனவரியிலும் எழுதிய கடிதங்களை அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகள் மேலுமொரு பதினான்கு ஆண்டுகளுக்கு- தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுவரை- பார்க்கக் கிடைக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு பின்னரே கீர்த்தியுடன் விரிவாகப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நாம் இருவரும் 1975 மே மாதத்தில் லண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் ஆறாவது அகல் பேரவையில் (Congress) கலந்துகொண்டோம். அந்த அகல் பேரவை, ரிம் வொல்ஃபோர்த், வேர்க்கஸ் லீக்கில் இருந்து விட்டோடிய பின்னர் நடந்தது. கீர்த்திக்கு வொல்ஃபோர்த்தை தெரிந்திருந்ததால் அவர் வேர்க்கஸ் லீக்கினுள் வெடித்த நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்திருந்த அரசியல் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிதீவிர அக்கறை காட்டினார். உண்மையில் கீர்த்தி ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது அகல் பேரவையில் வொல்ஃபோர்த்தைக் கடைசியாக பார்த்திருந்தார். அந்த அகல் பேரவையில், வொல்ஃபோர்த்தின் அறிக்கை, கவலையுடன் கவனிக்க வேண்டியளவு இழப்புக்களை —பெரும் எண்ணிக்கையில் முன்னணி உறுப்பினர்களின் இராஜினாமாக்கள் உட்பட— வேர்க்கஸ் லீக் கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இத் தகவல் கீர்த்தியை கவலைப்படச் செய்தது. வேர்க்கஸ் லீக்கினுள் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கான திட்டவட்டமான அரசியல் விளக்கத்தினை வொல்ஃபோர்த்தினிடம் இருந்து பெறக் கீர்த்தி முயற்சித்தார். இருந்தபொழுதும், கீர்த்தி வொல்ஃபோர்த்தை கேள்வி கேட்க எடுத்த முயற்சி ஹீலி மற்றும் பண்டாவின் குறுக்கீட்டால் துண்டிக்கப்பட்டது. அவர்கள் இளைஞர்களிடையே ''பரந்தளவில் உறுப்பினர் திரட்டும்'' வொல்ஃபோர்த்தின் அறிக்கைகளால் கவரப்பட்டிருந்தார்களேயன்றி, பெறுமதி மிக்க மற்றும் அனுபவம் நிறைந்த உறுப்பினர்களின் இழப்புகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
அடுத்த பத்து ஆண்டுகளில் நான் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே கீர்த்தியை பார்க்க முடிந்ததோடு, பொதுவில் அவை அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள முடியாத நிலமைகளின் கீழேதான் ஏற்பட்டன. அக்டோபர் 1985 வந்த பின்னரே நாம் இறுதியில் நெருக்கமாக மற்றும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் இணைந்து தொழிற்பட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் நெருக்கடி வெடித்தது. அக்டோபர் மூன்றாம் வாரத்தின் முடிவில் கீர்த்தி லண்டன் வந்தடைந்தார். நான் தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) மற்றும் நான்காம் அகிலம் ஆகியவற்றுள்ளான நிலைமைகளை வேர்க்கஸ் லீக்குக்கு மீள் அறிக்கை (Report back) சமர்ப்பிக்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குத் திரும்பினேன். எனக்கு நல்ல ஞாபகம் உண்டு அக்டோபர் 20 காலையில் யாரிடமிருந்தல்ல -மைக் பண்டாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பண்டா, கீர்த்தி லண்டனுக்கு வந்துவிட்டதாகவும்—உண்மையில் கீர்த்தி தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கட்சி வளவில் (Premises) இருப்பதாகவும் என்னிடம் கூறினார். பண்டாவுடன் தொலைபேசி பேச்சு முடிந்த மறுகணமே நான் மற்றொரு தொடுவையில் (line) தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கீர்த்தியுடன் பேச விரும்புவதாக வேண்டினேன். தொலைபேசியில் அவர் வந்ததும் அவரின் முதல் வார்த்தை; ''தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் போக்குப் பற்றிய உங்களது விமர்சனங்களை நான் வாசித்தேன், நான் அவற்றுடன் உடன்படுகின்றேன்''. இந்த அணுகுமுறை தோழர் கீர்த்தியின் தனிச்சிறப்பியல்பாகும். அவர் எப்பொழுதும் அரசியல் ரீதியில் விவாதத்துக்கு உட்பட்டுள்ள விடயங்களுடன்தான் ஆரம்பிப்பார். அவர் லண்டனை வந்தடைந்த பின், முந்தைய நாளில் பண்டா கீர்த்திக்கு, ஹீலியின் ''பாலுறவு ஊழல்" பற்றிய காம விபரங்கள் பற்றிப் பேசி மகிழ்விக்க முயன்றார். இறுதியில் பண்டா மூச்செடுக்க தனது பேச்சை நிறுத்தியதும், கீர்த்தி சாதாரணமாக அவரைப் பார்த்து, ''ஜெரி ஹீலியுடனான உங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்ன?'', எனக் கேட்டார். இக் கேள்வி, பண்டாவை அதிர்ச்சியுறச் செய்தது. கூறுவதற்கு அவருக்கு எதுவுமே இருக்கவில்லை. ஒரு கணிசமான அளவு அரசியல் தள்ளாட்டத்தின் பின்னர், இந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளியேற வழியைத் தேடிய பண்டா, நான் 1982 மற்றும் 1984க்கும் இடையில் எழுதிய அரசியல் பத்திரங்களின் பிரதிகளை கீர்த்தியிடம் கையளித்தார்.
(தொடரும்...)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts