Search This Blog

Sunday, 17 June 2018

இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஜூலியான் அசான்ஜை பாதுகாக்கின்றனர்

Sri Lankan workers and students defend Julian Assange

By our correspondents
7 June 2018
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துகான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஜூலியான் அசான்ஜை பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தும் ஆதரவை வென்றுள்ளன.
இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், விக்கிலீக்ஸ் ஆசிரியரின் விடுதலைக்காக ஜூன் 19 அன்று மத்திய கொழும்பில் உள்ள கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஒரு மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய நகரான சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரு மறியல் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய தொழிலாளர்களிடம் இருந்தும் பெறப்பட்ட பேட்டி மற்றும் அறிக்கைகளை இங்கு பிரசுரிக்கின்றோம்.

சசாங்க
நான்காண்டுகால சமூகவியல் மாணவரான சசாங்க கூறியதாவது: "ஜூலியான் அசான்ஜின் விடுதலைக்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரத்தை நான் உறுதியாக ஆதரிக்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியம் அசான்ஜ் போன்றவர்களை பிடிக்க முயற்சிப்பதற்கு காரணம், அதன் போர்க்குற்றங்கள் அம்பலத்துக்கு வருவது மக்களை தீவிரமயமாக்கும் என்று அது அஞ்சுவதே ஆகும்.
"முதலாளித்துவ அரசாங்கங்களின் ஜனநாயக விரோத வேலைத்திட்டங்களை அம்பலப்படுத்த முற்படும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே அசான்ஜ் வேட்டையாடப்படுகிறார். இலங்கை அரசாங்கமும் சமூக ஊடகங்களுக்கு எதிராக தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அதனால் இந்த பிரச்சாரம் இலங்கை மக்களுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது."
மூன்றாம் ஆண்டு விஞ்ஞான மாணவரான ஹெஷான்: "நான் யுத்தத்தை எதிர்த்து உலக அமைதிக்காக முன்நிற்கிறேன். போர் நம் வாழ்வுரிமையை அழிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னொரு உலக யுத்தத்தை நோக்கி செல்கிறது, அதனால் அது இது பற்றிய உண்மைகள் அம்பலப்படுவதை விரும்பவில்லை. எமது பேச்சு சுதந்திரத்தை மீற எந்த நாட்டையும் அனுமதிக்க கூடாது. அசான்ஜை விடுதலை செய்வதற்கான இந்த பிரச்சாரத்தையும் முதலாளித்துவத்திற்கும் அதன் அழிவுகரமான செயற்பட்டியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதையும் நான் வரவேற்கிறேன்."

தரிந்து
அசான்ஜ் துன்புறுத்தப்படுவது "ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதிலின்" ஒரு பகுதியாகும் என்று இறுதி ஆண்டு மாணவர் தரிந்து கூறினார். அரசாங்கத்தை விமர்சித்த பல இலங்கை ஊடகவியலாளர்களின் "காணாமற் போனது" பற்றி அவர் சுட்டிக்காட்டினார். "சமீபத்திய ஆண்டுகளில் காணாமல் போன ஒரு பத்திரிகையாளர் கடூ கண்டுபிடிக்கப்படவில்லை," என்று தரிந்து கூறினார்.
"இந்தத் தாக்குதல்கள் முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப் போராடும் பத்திரிகையாளர்களை பயமுறுத்தி, மௌனிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாகும். ஏகாதிபத்தியத்தின் சில குற்றங்களை அம்பலப்படுத்தியதால் தான் அசான்ஜ் துன்புறுத்தப்படுகிறார். அசான்ஜைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்துக்கு இலங்கை மாணவர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் பரந்தளவில் ஆதரிக்க வேண்டும்."

ஹசிதா
சோசலிச விஞ்ஞான மாணவியான ஹசிதா, "ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்" என்ற சுலோகத்தைக் கண்ட பின்னர் சோ.ச.க. பிரச்சாரகர்களிடம் பேசுவதற்கு முடிவு செய்தார்.
"அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளராகவும் விக்கிலீக்ஸின் நிறுவனராகவும் உள்ளார் என்று எனக்குத் தெரியும், ஆனால் லண்டனில் ஈக்குவடோர் தூதரகத்தில் அவர் கிட்டத்தட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கு எந்தவொரு வெளித் தொடர்பும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளார் என்றும் எனக்குத் தெரியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நான் எதிர்க்கிறேன்."
இலங்கையில் கொழும்பிற்கு வடக்கே பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் (சு.வ.வ.) உள்ள தொழிலாளர்களிடம் சோ.ச.க. பிரச்சாரகர்கள் பேசினர். கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்கள், பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வந்த பெண்கள், இந்த மலிவான உழைப்பு ஏற்றுமதி உற்பத்தி நிலையங்களில் வேலை செய்கின்றனர்.

வசந்த
இலங்கையின் வட மத்திய மாவட்டமான அனுராதபுரத்தில் இருந்து வந்த ஒரு ஆடைத் தொழிலாளி வசந்த தெரிவித்ததாவது: "அசான்ஜ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது வெறுமனே அவர் மீதான தாக்குதல் மட்டும் அல்ல என்பது தெளிவாக உள்ளது.
"உலகப் போரின் ஆபத்திற்கு எதிராகப் போராடுவது எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் முக்கியம், ஏனென்றால் அத்தகைய மோதலின் அழிவு மிகப்பெரியது. எனவே யுத்தத்திற்கான அரசாங்க தயாரிப்புக்களைப் பற்றி முடிந்தவரை அதிகமானளவு தகவல்களை வெளியிடுவது அவசியம்."
காலை 7.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை தான் தொழில் செய்வதாகவும் வேறு எதையும் பற்றி யோசிக்க சிறிது நேரம் தான் உள்ளதாகவும் வசந்த கூறினார். அவருடைய மாத சம்பளம் 35,000 ரூபாய்கள் (220 அமெரிக்க டாலர்) மற்றும் ஒரு மணித்தியால மேலதிக வேலை நேரத்திற்கு 150 ரூபாவும் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு அவரால் சமாளிக்க முடியாது. ஒரு ஊழியர் இரண்டு நாட்களுக்கு மேல் வேலைக்கு வராவிட்டால் 2,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு கிடைக்காது, என அவர் கூறினார்.
"உங்களிடம் பேசுவதன் மூலம் மட்டுமே சர்வதேச அரசியலைப் பற்றி நான் கற்றுக் கொள்ள முடிகிறது. சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற உங்களது பிரசுரத்தை படித்தேன், மேலும் இதைப் பற்றி கலந்துரையாட வேண்டும்."
மற்றொரு சு.வ.வ. தொழிலாளி மகேஷ், உலக யுத்தத்தின் ஆபத்தை பற்றி கருத்து தெரிவித்ததோடு அசான்ஜின் விடுதலைக்கு அழைப்பு விடுத்தார்.
"நான் போருக்கு எதிரானவன்," என்று அவர் கூறினார். "அமெரிக்கா பல ஆண்டுகளாக யுத்தம் செய்து வருகிறது, மத்திய கிழக்கில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உலகப் போரின் சாத்தியம் உள்ளது."
2017 ஏப்ரலில், 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட குப்பை மலை பேரழிவு நடந்த மீதொடமுல்ல பகுதியைச் சேர்ந்த பாதணி தொழிற்சாலை தொழிலாளியான கௌசல்யா, "அரசியல்வாதிகள் பகிரங்கமாக ஊழல் மற்றும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை அம்பலப்படுத்துவது சட்டவிரோதமானதாக இருக்கக் கூடாது,” எனத் தெரிவித்தார்.
"இந்த ஊழலை அம்பலப்படுத்துகின்ற எவரும் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் வழிமுறையானது இவற்றை அம்பலப்படுத்துவோரை வேட்டையாடி கொல்வதாகும்."
குப்பை மலை சரிந்தமை அரசாங்கம் மற்றும் ஆளும் ஸ்தாபனத்தின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. என கௌசல்யா தெரிவித்தார். சோசலிச சமத்துவக் கட்சி உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை மட்டுமே இந்த மைய அரசியல் பிரச்சினைகளை விளக்குவதற்கு தலையிட்டன.
"இது ஜூலியன் அசாஞ்ச் செய்ததைப் போல அரசாங்கத்தின் குற்றங்களுக்கு எதிராக நிற்கும் வெளிப்படையான பத்திரிகையாளர்களின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. அசான்ஜ் விடுதலை செய்யப்பட வேண்டும். நாங்கள் அவருடன் உடந்தையாக நிற்கிறோம். "
இளம் கணக்காளர் அமில கூறியதாவது: "பல ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியன் அசான்ஜ் தனது அடிப்படை மனித உரிமைகளை இழந்து லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரியபோது நான் மிகவும் கவலைப்பட்டேன். இப்போது அவர் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை பறிப்புடன் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
"அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசியதால் அசான்ஜ் ஏற்கனவே ஒரு அரசியல் கைதிதான். அவரது மனித உரிமைகளை அபகரிப்பதானது அமெரிக்கா அதன் பல்வேறு குற்றங்களைப் பற்றிய உண்மையை மறைப்பதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சியே ஆகும்."
ஒரு கட்டுமானத் தொழில் பொறியாளர் இன்துனி தெரிவித்ததாவது: "அமெரிக்க போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய ஜூலியான் அசானஜ் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் ஆவார். அவரது நடவடிக்கைகள் பென்டகன் ஆவணங்களை வெளியிட்டமைக்கு மிகவும் ஒப்பானது. ஏனைய அனைத்து தொழிலாளர்கள் போலவே, நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்க வேண்டும்."
அசான்ஜை தனிமைப்படுத்த, பார்வையாளர்களைத் தடுக்க அல்லது இணையத்தை அணுகுவதை தடுக்க ஈக்குவடோர் எடுத்துள்ள முடிவை அவர் எதிர்த்தார். "இது தொழிலாள வர்க்கம் மற்றும் சாதாரண மக்கள் நேர்மையான தகவலை அணுகுவதை தடுக்க முற்படும் முதலாளித்துவ முறையாகும்... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்தையும் அசான்ஜை விடுவிப்பதற்கு சிட்னியில் நடத்தப்படும் ஜூன் 17 பேரணியையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்."

ஜீவிதன்
கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் ஜீவிதன், அசான்ஜிற்கு எதிரான ஜனநாயக விரோத பிரச்சாரத்தை கண்டனம் செய்தார். நேர்மையான மற்றும் உண்மையான ஊடகவியலாளர்களை தாக்குவதில், அமெரிக்கா தனது சதித்திட்டங்களையும் குற்றங்களையும் மூடி மறைக்க முயற்சிக்கிறது, என தெரிவித்தார். "அமெரிக்கா மத்திய கிழக்கில் வளங்களுக்கான யுத்தங்ளை நடத்துவதுடன், இந்த உண்மையைச் சொல்லும் நபர்களை சிறையில் அடைக்கும் அல்லது கொல்லும். நாம் உறுதியாக அதை எதிர்க்க வேண்டும்."
இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரான ஜீவிதன், நாட்டின் உள்நாட்டுப் போரின்போது ஊடகங்களுக்கு எதிராக இதேபோன்ற தாக்குதல்களை அரசாங்கம் நடத்தியதாக தெரிவித்தார். "சர்வதேச செய்தியாளர்கள் யுத்த வலயத்திற்கு சென்று உண்மையை செய்தியாக்குவதில் இருந்து தடுக்கப்பட்டனர்," என அவர் தெரிவித்தார். "உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலான உள்ளூர் ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டன, சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அரசாங்கம் மாறியிருந்தாலும் இந்த பிரச்சினைகள் நிறுத்தப்படவில்லை."
http://www.wsws.org/tamil/articles/2018/06-Jun/assa-j16.shtml

Free Assange! Demand his return to Australia!

Free Assange! Demand his return to Australia!

Click the following link
Friday, 15 June 2018

ஜூலியான் அசான்ஜை விடுதலை செய்யக்கோரும் கூட்டங்களுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் அழைப்பு விடுத்துள்ளது

Free Julian Assange rallies called 

in Sri Lanka and India

7 June 2018

ஜூலியான் அசான்ஜை விடுவிப்பதற்காக தற்போது நடத்தப்பட்டு வரும் சர்வதேச பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜூன் 19 அன்று கொழும்பிலும், தமிழ்நாட்டில் சென்னை அருகிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளம், விக்கிலீக்ஸின் ஆசிரியருக்கு விடுதலை கோரி சர்வதேசரீதியாக  தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எக்குவடோர் அதன் லண்டன் தூதரகத்தில் அசாஞ்சுக்கு தஞ்சம் வழங்கிய அதேவேளை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளரை மௌனப்படுத்த அமெரிக்க அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிகிறது.
அசாஞ்ச் தூதரகத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டால், அவர் அமெரிக்க கைகளில் வீழ்கின்ற அபாயத்தை எதிர்கொள்கிறார் மற்றும் மரண தண்டனைக்கு இட்டு செல்லக்கூடிய தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் பேரிலான வழக்கு அவர் மீது தொடுக்கப்படும்.  அவருடைய ஒரே "குற்றம்" அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சட்டவிரோத போர்கள் மற்றும் இராணுவ சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியது தான்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள பிரதான கோட்டை இரயில் (புகையிரத) நிலையத்திற்கு வெளியே தனது ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.
அதே நாளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சர்வதேச வாகன மற்றும் மின்னணு உற்பத்தி மையமாக உள்ள ஸ்ரீபெரும்புதூரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
இந்த இரு பிரச்சார இயக்கங்களும், சிட்னியில் ஜூன் 17 ம் தேதி  ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு ஆதரவளிக்கின்றன.
பெரும் அதிகார சக்திகள் மற்றும் அவற்றிக்கு கீழ்ப்படிந்து இயங்கும் அரசாங்கங்கள்,  சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் தகவல்கள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவதை தடுக்க முயல்கின்றன. அசாஞ்ச் மீதான அமெரிக்கத் தலைமையிலான தாக்குதலின் வழியில், கூகுள் மற்றும் முகநூல், உலக சோசலிச வலைத் தளத்தையும், ஏனைய இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு வலைத் தளங்களையும் தணிக்கை செய்கின்றன. இணையம் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க,  இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களும் தங்கள் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளன.
ஜூலியான் அசான்ஜை பாதுகாப்பது என்பது பேச்சு மற்றும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் பாகமாகும்.
இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும்  இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இணையும்படியும்  தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கை ஆர்ப்பாட்டம்
மத்திய கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்
செவ்வாய் ஜூன் 19, 4.00 மணி.

இந்திய ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம்
தமிழ்நாடு
செவ்வாய் ஜூன் 19, 5.00 மணி.
http://www.wsws.org/tamil/articles/2018/06-Jun/assa-j14.shtml

NLC ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள்

India: Slave labour working conditions and unions abandonment lead to attempted suicide by NLC contract workers

இந்தியா: அடிமை உழைப்பு வேலை நிலைமைகளும் தொழிற்சங்கங்களினால் கைவிடப்பட்ட நிலையும் NLC ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்கொலை முயற்சிக்கு வழிவகுத்தன

By Sasi Kumar and Moses RajKumar,
15 June 2018
ந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்.எல்.சி.) வேலை செய்யும் சுமார் 25 வறிய ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களினால் கைவிடப்பட்டு மற்றும் அவை அனைத்தின்மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்கள் உட்படுத்தப்பட்ட தாங்க முடியாத அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே மாத இறுதியில் ஒரு தீவிர நடவடிக்கையாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நெய்வேலியை தளமாகக் கொண்ட பழுப்புக்கரி சுரங்க மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான, என்.எல்.சி, ஒப்பந்த தொழிலாளர்களைப் பயன்படுத்தி கொழுத்த இலாபத்தை ஈட்டும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நிறுவனம், இரண்டு அடுக்கு தொழிலாளர் முறையை பராமரித்து வருகிறது - ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தர தொழிலாளர்களையும் அதே வேலையை செய்வதற்கு பணியில் அமர்த்தியுள்ளது, ஆனால் நிறுவனத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் பின்னையதற்கு (நிரந்தர) வழங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டுமே முன்னையதற்கு (ஒப்பந்த) வழங்குகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். நிரந்தர வேலை, சமமான வேலைக்கு சமமான ஊதியங்கள் மற்றும் அவர்களது சக நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கும் நலன்களையும் வழங்கவேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டன.
25 ஒப்பந்தத் தொழிலாளர்களை அவ்வாறான ஒரு ஆற்றொணா நிலைக்கு தூண்டியது எது என்றால், மாதத்திற்கு 26 நாட்களாக இருந்து வந்த வேலைநாட்களை, 18 முதல் 20 ஆக குறைக்கவும் மற்றும் அவர்கள் முன்பு வேலை செய்து வந்த பணியிடத்திலிருந்து வேறொரு பணியிடத்துக்கு அவர்களை மாற்றுவதற்குமாக என்.எல்.சி நிர்வாகம் எடுத்த கடும் கோபத்தை ஏற்படுத்தும் அந்த முடிவு தான். அவர்களது சக ஊழியர்களின் தலையீட்டின் விளைவாக, என்.எல்.சி வாயில் முன்னால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற 25 ஒப்பந்த தொழிலாளர்களில் பலர் தடுக்கப்பட்டனர். அவர்களில் சுமார் ஆறு பேர் விஷம் குடித்ததனால் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஒரு நாள் வேலைக்கு, ஒரு ஒப்பந்த தொழிலாளிக்கு மிகக் குறைந்த தொகையாக 530 ரூபாய் ($ US8) மட்டுமே வழங்கப்படுகிறது, அது மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாய்க்கு சற்று அதிகமானதாகும். எனினும், PF (எதிர்கால சேமிப்பு நிதியளிப்பு) மற்றும் ESI (மருத்துவ காப்பீடு) தொகை வெட்டப்பட்ட பின்னர், ஒரு ஒப்பந்த தொழிலாளிக்கு கையில் சுமார் 7,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதாவது ஒரு நிரந்தர தொழிலாளிக்கு கிடைக்கும் தொகையில் பத்தில் ஒரு பங்கு.
என்.எல்.சி, அதிக இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன், அதன் முதலீடுகளை மேலும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது, அதற்கு காரணமாக இருப்பது மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் மலிந்த கூலிகளாக குரூரமாக சுரண்டப்படுவது தான். ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான காலத்தில் அதன் நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கையை 11,000 இலிருந்து சுமார் 4,000 ஆகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை 11,000 இலிருந்து கிட்டத்தட்ட 7,000 ஆகவும் குறைத்துள்ளது. மேலும் 'சொசைட்டி' இல் சுமார் 3,900 தொழிலாளர்கள், உள்ளனர், (சொசைட்டி என்றழைக்கப்படும் இந்த இடைநிலை அமைப்பானது, இந்த வகை அமைப்புக்குள் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் விரைவில் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று ஏமாற்றுவதற்கும் மற்றும் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்குமாக என்.எல்.சி. இனால் உருவாக்கப்பட்டது.)
உச்சநீதிமன்றத்திற்கு NLC வாக்குறுதி அளித்தது போல் நிரந்தர ஊழியர்கள் ஓய்வு பெறுவதன் மூலம் உருவாக்கப்பட்ட காலியிடங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களால் நிரப்பப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிராக போராட அனைத்து NLC நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் அணிதிரட்ட மறுத்து, தொழிற்சங்கங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவ நீதிமன்ற அமைப்பின் மீது பிரமைகளை உருவாக்கும் முயற்சியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றன. ஏப்ரல் 2013 இல், உச்ச நீதிமன்றம் ஒரு திட்டவட்டமான காலவரையை வரையறுக்காமல்,  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு தெளிவற்ற தீர்ப்பை வழங்கியது. எனவே, இவ்வாறாக உண்மையில் நீதிமன்ற தீர்ப்பு, அந்த  நிறுவனத்தின் மீது எந்தவிதமான சட்டரீதியான கட்டுப்பாட்டையும் உருவாக்கவில்லை.
இரண்டு பிரதான தமிழ்நாடு சார்ந்த போட்டி முதலாளித்துவக் கட்சிகள் - ஆளும் அஇஅதிமுக மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் இரண்டு பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை - என்.எல்.சி. தொழிலாளர்கள் மத்தியில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தி வைத்திருப்பதற்கான என்.எல்.சி. நிர்வாகத்தின் கொள்கையின்படி, அந்தக் கட்சிகளும் தனித் தனியாக தொழிற்சங்கங்களை வைத்திருக்கின்றன. மேலும் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் காரணமாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த தொழிற்சங்கங்கள் அந்த நடவடிக்கைகளுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கின்றன, நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக அல்ல.
சில ஒப்பந்த தொழிலாளர்களின் சமீபத்திய தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து, WSWS நிருபர்கள் நெய்வேலிக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசினர்.
ஜகநாதன்
சொசைட்டி உறுப்பினரான, 39 வயதான ஜகநாதன் இவ்வாறு கூறினார்: "நான் 29 வருடங்கள் பணிபுரிந்து வருகிறேன். என் சம்பளம் 13,500 ரூபாய். ஆனால் PF மற்றும் ESI பங்களிப்புகளுக்கு 3,500 ரூபாய் கழிக்கப்படுகிறது. சமீபத்தில் தான் எனக்கு தொழிலாளர் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனக்கு வேறு எந்த நலன்திட்டங்களும் கிடையாது. சொசைட்டி தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, என்.எல்.சி. அவர்களுக்கு பணிக்கொடையாக 2,25,000 ரூபாயும் இறப்பு உதவிப்படியாக 50,000 ரூபாயும் வழங்குகிறது!"
அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில்; "தொழிற்சங்கங்கள் எதுவுமே தொழிலாளர்களுக்காக போராடவில்லை. ஆளும் அஇஅதிமுக மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே கம்யூனிச தொழிற்சங்கங்கள், சிஐடியு மற்றும் ஏஐடியுசி [சிபிஎம் மற்றும் சிபிஐ உடன் முறையே இணைந்தவை] ஆகியவை தங்களுக்காக போராடும் என்று தொழிலாளர்கள் ஆரம்பத்தில் நம்பினார்கள். ஆனால் அவர்கள் தொழிற்சங்கங்களின் தலைமை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்தனர். இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாள வர்க்க விரோத சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் முன்னெடுத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுத்தன என்று நீங்கள் கூறுவதுடன் நான் உடன்படுகிறேன்.
“மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளரும் என்று பா.ஜ.க. கூறியது, ஆனால் வேலையின்மைதான் வளர்ந்து வருகிறது. பெரும் முதலாளிகள்  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முடிந்தவரை அதிகபட்சமாக கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாப்பாக வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர், அத்துடன் அவர்கள் பாதுகாப்பாக வெளிநாட்டிலும் கூட தங்குகின்றனர். ஆனால், விஜய் மல்லையா மற்றும் நிராவ் மோடி போன்ற (கொள்ளைக்கார) மனிதர்களுக்கு எதிராக மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அத்தியாவசியமான  பொருட்களின் விலைகளும் வானுயர அதிகரித்துள்ளன. ஆனால் உழைக்கும் மக்கள் சொல்லொணா துயரத்துக்குள் தள்ளப்பட்ட நிலையில், மோடி, அம்பானி போன்ற செல்வந்தர்களை ஆதரிக்கிறார்."
ஜெயராமன்
ஒரு ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர், 58 வயதான ஜெயராமன் இவ்வாறு கூறினார்: "ஒவ்வொரு சொசைட்டி உறுப்பினரையும் நிரந்தர தொழிலாளியாக்குவதாக என்.எல்.சி. வாக்குறுதி அளித்தது. ஆனால் தொழிலாளர்கள் எவரும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை."
பல ஆண்டுகளாக என்.எல்.சி. தொழிலாளர்கள் பற்றிய உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டை அறிந்திருந்த ஜெயராமன் கூறினார்: "உங்கள் நிலைப்பாடு ஊர்ஜிதமாகி உள்ளது. அதாவது தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடவில்லை மற்றும் என்.எல்.சி, முடிந்தவரை ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கும்."
"என்.எல்.சி.யில் ஓய்வு பெற்ற ஒவ்வொரு ஒப்பந்த ஊழியரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கின்றார். ஆனாலும் அவர்கள் ஒரு நிரந்தர ஊழியராக இல்லாமல் ஒரு ஒப்பந்த ஊழியராகவே ஓய்வு பெறுகின்றார். அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 1500 ரூபாய் அற்ப ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது!"
அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்: "சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், தொழிலாளர்களின் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி அதுதான்!
"எங்கள் குடும்பம் என் வருமானத்தை சார்ந்திருக்கிறது. இப்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். என் மகன் என்.எல்.சி.இல் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்கிறார். முன்னதாக எங்கள் குடும்பத்தை என் மகன் மற்றும் எனது  வருமானத்தின் மூலம் நிர்வகிக்க முடிந்தது. ஆனால் இப்போது என் வருமானம் நிறுத்தப்பட்டு விட்டது, எனவே என் மனைவி விவசாய வேலைக்கு செல்கிறார் அதற்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இது போதாது. ஆனால் என்ன செய்வது? நான் ஒரு இதய நோயாளியாக இருக்கிறேன். மற்றொரு கடின உழைப்பு செய்ய முடியவில்லை. சூடான கோடை காலத்தில், மோசமான நிலைமைகளால் எங்களது வீட்டில் வாழ முடியாது.
"நான் சொசைட்டி உறுப்பினராக ஓய்வு பெற்றபோது, ​​எனக்கு 200,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது, இதில் பணிக்கொடையும் இறப்புப்படியும் உள்ளடங்கும். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் 30 வருடங்கள் பணியில் செலவிட்டேன், ஆனால் எனக்கு மிகக் குறைந்த அற்ப தொகைதான் கிடைத்துள்ளது."
அவரது பெயரை வெளியிட விரும்பாத ஒரு ஒப்பந்தத் தொழிலாளி கூறியதாவது: "தனது தொழிற்சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகத்தான், என்.எல்.சி. 5,000 பேரை சொசைட்டி உறுப்பினர்களாக்கி உள்ளது என்று ஏ.ஐ.டி.யு..சி தொழிற்சங்க தலைவர் சேகர் பெருமிதமாக கூறுகிறார், ஆனால் தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.”
அவர் மேலும் கூறினார்: "பல தொழிலாளர்கள் எந்த நன்மையையும் பெறாமலேயே ஓய்வு பெற்றனர். தொழிற்சங்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.”
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கல் செய்ய அவர்கள் போராட மாட்டார்கள். அவர்கள் தொழிலாளர்களை விட என்.எல்.சி. நிர்வாகத்துடன்தான் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் சந்தாப் பணத்திற்காகவும் இதர நலன்களுக்காகவும் மட்டுமே தொழிலாளர்களை பயன்படுத்தப்படுகின்றன."
புரூஸ் மார்க்
52 வயதான புரூஸ் மார்க் கூறினார்: "நான் 34 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். எடப்பாடி [முதலமைச்சர்] தலைமையிலான தமிழ்நாடு அரசு என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை. இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் அவர்கள் தலையிட முடியாது என்று வாதிடுகின்றனர். எடப்பாடி, மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாக தொடர்பில் உள்ளார். அவர்களது பொலிசார் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுவதையும் விரும்பவில்லை. அவர்கள் மக்களின் எதிர்ப்பை கொடூரமாக நசுக்கி மௌனப்படுத்த விரும்புகின்றனர்."
ஒரு நிரந்தர தொழிலாளி கூறினார்: "என் சம்பளம் 60,000 ரூபாய்கள் ஆகும், ஆனால் நான் 30 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஆனால் நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 200,000 முதல் 300,000 ரூபாய் வரை இருக்கும், மேலும் அவர்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்போது ஒவ்வொரு துறையிலும், 4 நபர்களின் வேலை ஒரு நிரந்தர ஊழியரால் செய்யப்படுகிறது. இப்போது பணிச்சுமை கனமாக உள்ளது. ஓய்வு நேரம் கிடையாது. நிரந்தர வேலை மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கான சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஆனால் தொழிற்சங்கங்கள் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பிரிக்கின்றன. உங்கள் உலகக் கட்சியை நான் ஆதரிக்கிறேன், உங்கள் உலக சோசலிச வலைத் தளத்தை படிப்பேன்.
http://www.wsws.org/tamil/articles/2018/06-Jun/inde-j15.shtml

Thursday, 14 June 2018

ஜி7 உச்சிமாநாடு தோல்வியடைந்தது

The G7 summit collapses

Alex Lantier
11 June 2018
Image source from Internet
லக பொருளாதாரத்தின் மிகமுக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் நடவடிக்கைகள் மற்றும் கடுமையான பரஸ்பர குற்றஞ்சுமத்தல்களுக்கு இடையே, முன்னொருபோதும் இல்லாத சம்பவமாக, கியூபெக்கின் சார்லுவுவா இல் சனியன்று நடந்த ஜி7 பேச்சுவார்த்தைகள் முறிந்தன. ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான பில்லியன் கணக்கான டாலர்கள் வரிகளைத் திணிக்க வாஷிங்டன் அச்சுறுத்தியதன் மீது தீர்க்கவியலாத மோதல்கள் வெடித்தன.
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு "6 நாடுகள் உடன்படிக்கை" ஒன்றை கையெழுத்திட வீராவேசத்துடன் முன்மொழிந்த நிலையில், அம்மாநாட்டிற்கான முன்நாட்களிலேயே கசப்புணர்வுகள் கலந்திருந்தன. அந்த உச்சிமாநாட்டில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ட்ரம்பை நோக்கி மேசையில் கையூன்றியபடி முறைத்து பார்த்த புகைப்படங்கள் வெளியாயின, ட்ரம்ப் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து விட்டு, அம்மாநாட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட்டு சென்றார்.
பாதுகாப்புவாதத்தைக் கண்டித்து, ஆனால் அமெரிக்க குறைகூறல்களுக்கு ஒத்த விதத்தில் உலக வர்த்தக அமைப்பின் மீது ஒருசில விமர்சனங்களை வைத்து, ஜி7 உச்சிமாநாட்டில் வழமையாக செய்யப்படுவதைப் போல, அந்த உச்சிமாநாடு இந்த மோதல்கள் மீது ஓர் இறுதி அறிக்கையை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அமெரிக்கா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ட்ரம்ப், வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன் உடனான சந்திப்புக்கு சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டீன் ட்ரூடோவின் உச்சிமாநாட்டுக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் பேச்சுக்களைச் செவிமடுத்து, சரமாரியாக ட்வீட் செய்திகளை வீசினார், அவை ஜி7 பேச்சுவார்த்தைகள் உணர்வுபூர்வமாக முறிந்துவிட்டதை சமிக்ஞை செய்தன.
அந்த அறிக்கை பாதுகாப்புவாதத்தை விமர்சித்திருப்பதாகவும், கனடா பதிலடி நடவடிக்கையாக, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இறக்குமதி மீதான அதிகபட்ச கனேடிய வரியாக அமெரிக்க பண்டங்கள் மீது 16 பில்லியன் டாலர் இறக்குமதி வரிகள் விதிக்கப்படுமென ட்ரூடோ தெரிவித்ததும், ட்ரம்ப் "பிற நாடுகள்" இறக்குமதி வரி விதிப்பதை "அனுமதிக்க முடியாது" என்று எச்சரித்து, ட்ரூடோ மீது கடுஞ்சொற்களை வீசினார். அமெரிக்காவின் பெயரளவிலான நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்காவை இலக்கில் வைத்ததற்காக, "பல தசாப்த கால வர்த்தக துஷ்பிரயோகம் இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தளவுக்கு நீண்டகாலம் இருந்தே போதும்” என்றார்.
மற்றொரு ட்வீட் செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி, வாகன இறக்குமதிகள் மீதான தீர்வை வரிகளுடன் வர்த்த போர் நடவடிக்கைகளைப் பெரிதும் தீவிரப்படுத்த அச்சுறுத்தி, பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாக அறிவித்தார்: “ஜஸ்டீன் அவரின் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பொய்யான தகவல்கள் அடிப்படையிலும், கனடா நமது அமெரிக்க விவசாயிகள் மீது பாரிய தீர்வை வரிகளை விதித்து வருகின்றது என்ற உண்மையின் அடிப்படையிலும், அந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டாமென நான் நமது அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன், அதேவேளையில் அமெரிக்க சந்தைக்குள் வெள்ளமென பாய்ந்து வரும் வாகனங்கள் மீது இறக்குமதி வரிவிதிக்க நாம் பரிசீலித்து வருகிறோம்!” என்றார்.
1975 இல் ஜி7 உச்சி மாநாடு தொடங்கியதில் இருந்து—ஆரம்பத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஜி5 என்றிருந்தது—முதல்முறையாக அனைத்து அரசு தலைவர்களும் ஓர் அறிக்கையில் உடன்பட முடியாமல் ஆகியுள்ளது.
இங்கு என்ன கட்டவிழ்ந்து வருகிறது என்றால் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான இராஜாங்க மற்றும் பொருளாதார உறவுகள் ஒரு வரலாற்றுரீதியில் தோல்வியடைந்து வருகின்றன. இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒரு நூற்றாண்டில் மூன்று கால்பகுதியில், சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்திடையே, 1930 களின் பெருமந்தநிலையின் வர்த்தக போர்கள் போரைத் தூண்டுவதில் ஒரு மிக முக்கிய பாத்திரம் வகித்தன என்பதிலும், என்ன விலை கொடுத்தாவது வர்த்தக போர்களைத் தடுக்க வேண்டுமென்றும் பரந்த கருத்தொற்றுமை இருந்தது. இந்த கருத்தொற்றுமை இப்போது முறிந்துள்ளது.
வெடிப்பார்ந்த மோதலும் நிச்சயமற்றத்தன்மையும் உலக பொருளாதாரத்தில் மேலாளுமை கொண்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவும் குறிப்பிட்டு கூறமுடியாதளவுக்கு இறக்குமதி பண்டங்களில் பில்லியன் கணக்கான டாலர் தாக்கம் ஏற்படுத்தும் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன, இது உலகளவில் பத்து மில்லியன் கணக்கான வேலைகளை அச்சுறுத்துகிறது. ட்ரூடோ மற்றும் ட்ரம்பின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சுழற்சியான வரிவிதிப்புகளையும் எதிர்-வரிவிதிப்புகளையும் தீவிரப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
ஜி7 பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட குணநலன்களால் ஏற்பட்டதென விவரிக்க முடியாது. அதற்கு பதிலாக, இந்த வரலாற்று மைல்கல் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரும்பிரயத்தன முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகும். ட்ரம்ப் மட்டுமல்ல, மாறாக பிரதான ஜனநாயக கட்சியாளர்களும் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கின் மிகப் பெரிய பிரிவுகளும் அனைவருமே அவர்களது போட்டியாளர்களுக்கு எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பின்றி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பெருமந்தநிலை வெடிப்பதற்கு ஓராண்டு முந்தைய 1929 இல் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையைப் பகுத்தாராய்ந்து ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: “வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும். அமெரிக்கா அதன் சிரமங்கள் மற்றும் துன்பங்களிலிருந்தும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவற்றைக் கடந்து வர, ஐரோப்பாவை விலை கொடுக்க முயலும், இது ஆசியாவிலோ, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலோ எங்கே வேண்டுமானாலும் ஏற்படலாம், அமைதியான வழியிலோ அல்லது போர் மூலமாகவோ நடத்தப்படலாம்.”
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மற்றும் 1971 இல் தங்கத்தை டாலருக்கு மாற்றீடு செய்வதை வாஷிங்டன் நிறுத்திக் கொண்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸ்தாபித்த தொழில்துறை மற்றும் பொருளாதார மேலாதிக்கம் வேகமாக தேய்ந்து போனதும், பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்களைக் கையாள ஜி7 உச்சிமாநாடுகள் தொடங்கப்பட்டன. அதன் ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டியாளர்களை இன்னமும் எட்டிப்பிடிக்க முடியாதளவுக்கு, அமெரிக்கா பல தசாப்தங்களாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் போட்டியாளர்களுடன் முன்பினும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ போர்களுக்கு பிரதான தடையை நீக்கும் வகையில், 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், வாஷிங்டன் அதன் பொருளாதார பலவீனத்தை எதிரீடு செய்ய அதன் மிகப்பெரும் இராணுவ பலத்தைச் சார்ந்திருக்க முயன்றது.
ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட தசாப்தகால இரத்தந்தோய்ந்த நவ-காலனித்துவ போர்களின் மூலமாக, அமெரிக்கா எண்ணெய் வளமிக்க மத்தியக் கிழக்கில் ஒரு பலமான இராணுவ இடத்தை ஸ்தாபிக்க முயன்றுள்ளது. இந்த போர்கள், அதன் பிரதான பொருளாதார போட்டியாளர்களின் முக்கிய வர்த்தக மற்றும் எரிசக்தி வினியோக பாதைகளைத் தடுக்க அதன் படைகளை குறுக்கில் நிறுத்தியது.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடாவினால் அமெரிக்காவின் மீது "வர்த்தக துஷ்பிரயோகம்" நடப்பதாக அவரது குற்றச்சாட்டுக்களும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தகத்தின் மீது மட்டுமே கடுமையான பிளவுகள் அதிகரித்து வரவில்லை, மாறாக ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை முறித்துக் கொண்டு ஈரானை போர் கொண்டு அச்சுறுத்தி வரும் அமெரிக்க கொள்கை மீதான ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பின் மீதும் பிளவுகள் அதிகரித்து வருகிறது. தசாப்த கால பொருளாதார நெருக்கடி மற்றும் நவ-காலனித்துவ போர்களுக்குப் பின்னர், உலக பொருளாதாரம் போட்டி வர்த்தக அணிகளாக 1930 களின் பாணியில் சிதைந்து வரும் அபாயமும், அந்த தசாப்தத்தில், அவற்றிற்கு இடையே இராணுவ மோதல் வெடித்ததைப் போன்ற அபாயமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
20 ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகளால் உலக போருக்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்ட உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள்—அதாவது பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் தனிநபர்களின் இலாப திரட்சிக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள்—இன்று பகிரங்கமாக வெடிக்கின்றன.
ஐரோப்பிய சக்திகள் பதிலடி நடவடிக்கைகளை அதிகரிக்கும் அச்சுறுத்தல்களைக் கொண்டு ட்ரம்புக்கு விடையிறுத்துள்ளன. இந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், தங்களின் "நலன்களை இன்னும் அதிக ஆக்ரோஷமாக" பாதுகாப்பதற்காக, ஐரோப்பிய சக்திகள் "ஒருங்கிணைந்து" விடையிறுக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
வரலாற்றுரீதியில், வர்த்தக போர் இராணுவ மோதலுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்துள்ளது. இந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்ரம்பின் அச்சுறுத்தலான தடையாணைகளுக்கு கோபமாக விடையிறுக்கையில், “இந்த முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல மாறாக பல அம்சங்களில் இது தவறாக உள்ளது. பொருளாதார தேசியவாதம் போருக்கு இட்டுச் செல்கிறது. இது தான் துல்லியமாக 1930 களில் நடந்தது,” என்றார்.
அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே, ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் வேகமாக மீள்ஆயுதமேந்தி வருகின்றன. ஜி7 உச்சி மாநாட்டுக்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு படையை உருவாக்கவும், பிரிட்டன் அதில் பங்கெடுப்பதற்கு திறந்துவிடவும், நேட்டோவிலிருந்து அது சுதந்திரமாக இருப்பதற்கும் மக்ரோன் முன்வைத்த முன்மொழிவுகள் மீது அவரது ஆதரவை சமிக்ஞை செய்தார்.
அதிகரித்து வரும் வர்த்தக போர் மற்றும் இராணுவ போர் அச்சுறுத்தலுக்கு ஒரே நம்பகமான விடையிறுப்பு, முதலாளித்துவம் மற்றும் போர் அபாயத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதாகும். அமெரிக்காவில் ஆசிரியர்களிடையே, ஜேர்மனி மற்றும் துருக்கியில் உலோக தொழிலாளர்களிடையே மற்றும் பிரான்சில் மக்ரோனின் சமூக செலவின குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த இயக்கம் என உலகெங்கிலும் வேலைநிறுத்தங்களும் வர்க்க போராட்டமும் வெடித்து வருகையில், இந்த எதிர்ப்புக்குத் தலைமை கொடுக்கக்கூடிய சமூக சக்தி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச, சோசலிச, போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது தான் இப்போது செய்ய வேண்டியதாகும்.
http://www.wsws.org/tamil/articles/2018/06-Jun/summ-j13.shtml

Wednesday, 13 June 2018

அமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன

US and North Korea strike a deal in Singapore

By Ben McGrath
12 June 2018
மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக சிங்கப்பூரில் இன்று காலை சந்தித்துக் கொண்டனர். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நோக்கிய நடவடிக்கையாக இது புகழப்படுகின்ற அதேவேளையில், இவர்களுக்கு இடையில் எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படும் உடன்பாடு என்னவாய் இருந்தபோதிலும், ஆசிய-பசிபிக்கின் கீழமைந்த பதட்டங்கள் கூர்மையடைய மட்டுமே இருக்கின்றன.
ஒரு “மிகநேர்த்தியான திறம்பட்ட” ஆவணம் என்று அமெரிக்க ஜனாதிபதி அழைத்த ஒன்றில் கிம் மற்றும் ட்ரம்ப் கையெழுத்திட்டதன் பின்னர், ட்ரம்ப், வட கொரியத் தலைவர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய நிச்சயமாக “அழைப்பு விடுக்க”ப் போவதாக தெரிவித்தார். இந்த ஆவணம் விரைவில் வெளியிடப்படவிருந்தது.
ட்ரம்ப்பும் கிம்மும் செந்தோஸா தீவில் உள்ள ஆடம்பர Capella ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு சந்தித்தனர். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த இடத்தை கிட்டத்தட்ட ஒரு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் போல் மாற்றியிருந்தது. இருவரும், அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருக்க, ஒருவருக்கொருவர் நேரடியாக, கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசிக் கொண்டனர்.
முன்னதாக ட்ரம்ப், விடயங்கள் உடனடியாக அமெரிக்கா நினைத்ததிசையில் நடக்காது போகுமாயின் முதல் நிமிடத்திலேயே பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு மிரட்டல் விடுத்திருந்தார். ஆயினும், ட்ரம்ப்பும் கிம்மும் சந்தித்து கைகளைக் குலுக்கிக் கொண்டதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்: “நாம் ஒரு மகத்தான பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறோம், அது பெரும் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அது என் கவுரவம். நாம் ஒரு மிக அருமையான உறவை ஏற்படுத்திக் கொள்ளவிருக்கிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை.”
கிம்மும் இதேபோன்ற வீறுகொண்ட மொழியில் பதிலளித்தார்: “பழைய சங்கிலிகளும் நடைமுறைகளும் நமது முன்னோக்கிய பாதையில் முட்டுக்கட்டைகளாக வேலை செய்தன, ஆனால் அவற்றை நாம் வெற்றி கண்டு இன்று இங்கே வந்திருக்கிறோம்.”
ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர்களது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெரிந்தது, இருவரும் “அருமையான உறவு உணர்வு” கொண்டிருந்ததாக ட்ரம்ப் அறிவித்தார். அவரவரது ஆலோசகர்களும் பங்குபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் முன்நகர்ந்தனர்.
அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் மற்றும் ட்ரம்ப்பின் அலுவலர் தலைவரான ஜோன் கெல்லி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். உச்சிமாநாட்டிற்கு முன்வந்த பேச்சுவார்த்தைகளில் கெல்லி ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்ததாகக் கூறப்படுகிறது.
கிம் உடன் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சரான ரி யோங்-ஹோ, சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ரி சு-யோங், மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் மையக் கமிட்டியின் துணைத் தலைவரான கிங் யோங்-சோல் —இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ட்ரம்ப்பை வாஷிங்டனில் சந்தித்திருந்தார்— ஆகியோர் இருந்தனர்.
பின்னதாக, இரண்டு தரப்பும் ஒரு வேலைநேர மதிய உணவு முழுவதுமாக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தன. இரவு 8 மணிக்கு அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு முன்பாக மாலை சுமார் 4 மணியளவில் ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசவிருந்தார், கிம் பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்ததாக அமெரிக்க ஊடங்கள் தெரிவித்தன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு சிறு அறிக்கையின் பகுதி ஒன்று இவ்வாறு தெரிவித்தது: “அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, அவை எதிர்பார்த்ததை விடவும் துரித வேகத்தில் முன்னேறியிருக்கின்றன.”
திட்டமிடப்பட்ட ஒரு கூட்டு செய்திக்குறிப்பிற்கான மொழியை இறுதி செய்வதற்காக, நேற்று, தென் கொரியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இப்போது பிலிப்பைன்ஸுக்கான தூதராக இருப்பவருமான அமெரிக்காவின் சுங் கிம், அமெரிக்க விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமையில் இருக்கும் வட கொரியாவின் சான்-ஹூய் உடன் சந்தித்துப் பேசியிருந்தார். பேச்சுவார்த்தைகளுக்குப் பரிச்சயமான அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்திருந்த தகவலின் படி, அணுஆயுதமய அகற்றம், வட கொரியாவுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள், மற்றும் இரண்டு தரப்புகளும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஆகிய மூன்று பகுதிகளை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.
இந்த சந்திப்பு குறித்த ஒரு சாதகமான கருத்து அலையை சுழல விடுவதற்காக இரண்டு தரப்புகளும் நேற்று வேலை செய்தன. சிங்கப்பூரின் பிரதமரான லீ ஹீசியன் லூங் -இடம் ட்ரம்ப் தெரிவித்தார்: “நாளை குறிப்பாக நாங்கள் ஒரு மிக முக்கியமான சந்திப்பைக் கொண்டிருக்கிறோம். விடயங்கள் மிக நல்ல முறையில் செல்லும் என்று நான் நினைக்கிறேன்.” இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்ற கவலையில் இருந்து வந்திருக்கின்ற ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே, மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
பொம்பியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதற்கு முன்னர் அமெரிக்கா அளிக்க விரும்பியிருந்தவற்றில் இருந்து ..... மாறுபட்டதும் தனித்துவமானதுமான பாதுகாப்பு உத்தரவாதங்களை மேற்கொள்வதற்கு” அமெரிக்கா ஆயத்தமாயிருப்பதாக தெரிவித்தார். அவர் அதற்கு மேல் எதனையும் விளக்கிக் கூறவில்லை.
வட கொரியாவின் கொரிய மைய செய்தி முகமை கூறுகையில், ”மாறிய சகாப்தத்திற்கு ஏற்ப” தீபகற்பத்தின் அணுஆயுதஅகற்றம் மற்றும் “பரஸ்பர கவலைக்குரிய” ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக “கொரிய தீபகற்பத்தில் ஒரு நிரந்தரமான மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைதிகாக்கும் பொறிமுறை” ஒன்றை கட்டியெழுப்புவது சம்பந்தமான “விரிந்து பரந்த மற்றும் ஆழமான கண்ணோட்டங்களை” இந்த உச்சிமாநாடு பரிவர்த்தனை செய்து கொள்ளும், என்று தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சீனா சம்பிரதாயமான ஆதரவை நேற்று தெரிவித்தது. அதன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான ஜெங் ஷுவாங் தெரிவித்தார்: “இந்த சந்திப்பு சாதகமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்றும் கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கும் ஒரு அரசியல் தீர்வுக்கும் பங்களிப்பு செய்யும் என்றும் சீனா உண்மையாக நம்புகிறது.”
ஆயினும், இவை எதுவொன்றுமே, ஒரு அமைதியான முடிவு தொடுதூரத்தில் இருப்பதன் அர்த்தமாக இல்லை. அனைத்து தரப்புகளுமே “கொரிய தீபகற்பத்தின் அணுமயமாக்கல் அகற்றத்திற்கு” அழைப்பு விடுத்தபோதிலும், அவற்றின் அர்த்தம் வெவ்வேறாய் இருக்கிறது. வடகொரியாவும் சீனாவும் தென் கொரியாவில் அமெரிக்க துருப்புகள் மற்றும் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் ஒரு குறைப்பை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, போருக்கான தயாரிப்பில் சீனாவைத் தனிமைப்படுத்துவதே அதன் நோக்கமாய் இருக்கிறது.
பல தசாப்தங்களாய், வட கொரிய அச்சுறுத்தலாக சொல்லப்பட்டதை, ஆசிய-பசிபிக்கில் தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகப்படுத்துவதற்கே அமெரிக்கா, பயன்படுத்தி வந்திருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” மற்றும் இப்போது ட்ரம்ப்பின் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக, சீனா மீது —ஒரு பொருளாதார சக்தியாக அதன் வளர்ச்சி அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது— நிதிரீதியான மற்றும் இராணுவரீதியான அழுத்தத்தை அமெரிக்கா செலுத்தி வந்திருக்கிறது.
ஒன்று அமெரிக்காவின் சுற்றுவட்டத்திற்குள் நகர்ந்து விட வேண்டும், இல்லையேல், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்பில் முதல் பலியாக முற்றுமுதல் அழிவை சந்திக்க வேண்டும் என்ற தெரிவை வட கொரியாவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
“கொரிய தீபகற்பத்தின் முழுமையான மற்றும் சரிபார்க்கத்தக்க அணுஆயுதமயமாக்கல் அகற்றமே அமெரிக்கா இறுதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரே முடிவாக இருக்கும்” என்பதை பொம்பியோ மீண்டும் வலியுறுத்தினார். முழுமையான, சரிபார்க்கத்தக்க, திரும்பவியலாத அணுமய அகற்றம் என்பதன் சுருக்கமான CVID என்பதைக் குறிப்பிட்டு அதில் 'V' [சரிபார்க்கத்தக்க என்பது] முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். “ஒரே ஒருமுறை தான் அது [சரிபார்ப்பு] நடக்கும், அது துரிதமாக மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்த அவர், அது நடைபெறும் வரையில் வட கொரியா மீதான முடக்கும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
சியோலில் இருந்து பேசிய தென் கொரியாவின் மூன் ஜே-இன் கருத்து கூறினார்: “இரண்டு தலைவர்களும் ஒரு மிகப்பெரும் விதத்தில் பேச்சுவார்த்தைக்கு துவக்கமளித்திருக்கிறார்கள் என்ற போதிலும் கூட, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முழுமையாகத் தீர்ப்பதற்கு, ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ, அல்லது அதற்கும் அதிகமாகவும் கூட பிடிக்கக் கூடிய ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கு நமக்கு தேவைப்படக் கூடும்.”
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வாஷிங்டனின் மாறும் இராணுவ மற்றும் புவியரசியல் தேவைகளுக்கு ஏற்ப, ஒரு நீண்ட காலத்திற்கு, அது காட்டும் வளையங்களுக்குள் எல்லாம் குதித்து வெளிவர வட கொரியா நிர்ப்பந்திக்கப்படும். பியோங்கியாங் உடனான 2007 ஆறு-தரப்பு உடன்பாட்டினைத் தொடர்ந்து, வாஷிங்டன், கூடுதலான சரிபார்ப்பு நடவடிக்கைகளை ஒருதலைப்பட்சமாகக் கோரி, அந்த உடன்பாட்டிற்குக் குழிபறித்தது. ஒபாமா நிர்வாகம் சீனாவைச் சுற்றிவளைக்கும் அதன் பிரச்சாரத்தை தொடங்கிய சமயத்தில் இந்த உடன்பாட்டை முற்றிலுமாகக் கைவிட்டது. எந்த புதிய ஒப்பந்தத்திலும் இருந்து விலகி ஓடுவதற்கு அமெரிக்கா இதேபோன்றதொரு தந்திரத்தைப் பயன்படுத்தக் கூடும்.
இறுதியாக, வட கொரியா வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு முழுமையாக அடியொற்றி நடக்கத் தவறுமானால், அமெரிக்காவினால் முற்றிலுமாய் அழித்தொழிக்கப்படுகின்ற அபாயத்திற்கு அது முகம்கொடுக்கும். ஒரு உடன்பாடு எட்டப்படுமானால், நேரடியாக சீனாவின் எல்லையில் ஒரு அமெரிக்க-ஆதரவு ஏவல் அரசின் சாத்தியத்தை —இன்னும் அமெரிக்க துருப்புகளின் சாத்தியத்தையும்— அது எழுப்புகிறது. இரண்டில் எதுவாயிருப்பினும் அது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவி-மூலோபாய மோதலை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.
http://www.wsws.org/tamil/articles/2018/06-Jun/usnk-j13.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts