Search This Blog

Wednesday, 16 May 2018

ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்ததை ஐரோப்பிய சக்திகள் கண்டிக்கின்றன

European powers condemn Trump’s cancellation of Iran nuclear treaty

By Alex Lantier and Johannes Stern
10 May 2018
Image source from Internet
2015 ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் விலகிக் கொண்டது வாஷிங்டனுக்கும் ஐரோப்பாவிலுள்ள அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் வெடிப்பான பிளவுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்களும் முக்கிய ஊடகங்களும் கிட்டத்தட்ட ஏகமனதாக ட்ரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டனம் செய்தன, இந்த ஒப்பந்தம் பாதுகாக்கப்படுவதற்கு அவை அழைப்பு விடுத்ததோடு, “ஈரானுக்கு எதிரான மிக உயர்ந்த மட்டத்திலான தடைகளை” விதிக்கும் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு எதிராய் அவற்றின் வணிக நலன்களைத் பாதுகாத்துக் கொள்வதற்கு சூளுரைத்தன.
ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோர் விடுத்த ஒரு கூட்டான அறிக்கை, ட்ரம்புக்கு எதிராய் திறம்பட்ட கூட்டு நடவடிக்கைத் திட்டத்தை (JCPoA) - ஈரானிய ஒப்பந்தத்தின் உத்தியோகபூர்வ பெயர்- பாதுகாத்தது. அந்த அறிக்கையில் அந்த மூன்று தலைவர்களும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதை “வருத்தத்துடனும் கவலையுடனும்” குறிப்பிட்டதோடு ”JCPoAவுக்கான எங்களது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை” வலியுறுத்தினர். ஈரான் JCPoA ஆல் அதன் அணுத் திட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடப்பது தொடர்கின்ற வரையில், “நாங்கள், E3, JCPoA இன் பங்குதாரர்களாகத் தொடர்வோம்” என்று அவர்கள் மேலும் சேர்த்துக் கொண்டனர்.
ஈரான் தொடர்ந்தும் அதன் அணு ஆயுதத் திட்டத்தின் மீதான சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்புக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கோரிய பேர்லின், இலண்டன் மற்றும் பாரிஸ் அதேவேளையில், புதிய தடைகளை விதிக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவிற்கும் அழைப்பு விடுத்தன. “ஈரான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்கின்ற வரையில் அது தகுதிபடைத்திருக்கும் தடைநிவாரணங்களை அது தொடர்ந்தும் பெற்று வர வேண்டும்.”
ஈரானிய ஆட்சி மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைக்கு அடிமைத்தனமான விதத்தில் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதில் பிரதானமாய் கவனம் குவிப்பதாக இருக்கின்ற அமெரிக்காவால் எழுப்பப்பட்ட ‘முக்கியமான கவலைக்குரிய பகுதிகளை” நிவர்த்தி செய்வதற்கும் அவை வாக்குறுதியளித்தன. “ஈரானின் வெடிப்பு ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்திலான, குறிப்பாக சிரியா, ஈராக் மற்றும் ஏமனிலான, அதன் ஸ்திரம்குலைப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்படுகின்ற கவலைகள்” இந்தக் கவலைகளில் அடங்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவியான ஃபெடரிகா மொகேரினி இந்த நிலைப்பாடுகளை எதிரொலித்தார், அமெரிக்கா “எங்களது நெருங்கிய பங்காளி மற்றும் நண்பன்” என்று பாராட்டிய அவர், ஆயினும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் அதற்கு இணங்கி நடக்கின்ற வரையில் அதனைத் தொடர்ந்தும் ஆதரிக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். அவர் அறிவித்தார், “நாங்கள் எப்போதும் கூறி வந்திருப்பதைப் போல, அணு சக்தி ஒப்பந்தமானது இருதரப்பு ஒப்பந்தமன்று, ஆகவே அது எந்தவொரு தனிநாட்டினாலும் ஒருதரப்பாக இரத்து செய்யப்பட முடியாது.”
அமெரிக்கத் தடைகள் ஈரானில் ஐரோப்பிய வணிக நலன்களுக்குக் குறுக்கே வரலாம் என்ற அச்சுறுத்தலில் மோகிரினி கவனம் குவித்தார்: “அணுசக்தி தொடர்பான தடைகளை அகற்றுவது உடன்பாட்டின் அத்தியாவசியமான பகுதியாகும்... புதிய தடைகள் குறித்த அறிவிப்புத்தான் குறிப்பாக கவலையளிப்பதாக இருக்கிறது. அவற்றின் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து எதிர்வரும் மணித்தியாலங்களில் மற்றும் நாட்களில் எங்களது கூட்டாளிகளுடன் நான் ஆலோசிக்க இருக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்பவும் அதன் பொருளாதார முதலீடுகளைப் பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட தீர்மானத்துடன் இருக்கிறது.”
ஆயினும், ஈரானிலும் மற்றும் அகன்ற மத்திய கிழக்கிலும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வணிக நலன்களை ஊக்குவிப்பதானது வாஷிங்டனில் இருக்கும் அதன் கூட்டாளியாகக் கூறப்படுவதுடன் ஒரு மோதல் பாதையில் அதனை நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பது முன்னெப்போதினும் இப்போது மிகத் தெளிவாக இருக்கிறது. ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகிக் கொண்டதும், சிரியாவில் -நேட்டோ சக்திகளுக்கு எதிராக ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சியைப் பாதுகாத்து நிற்கின்ற- ஈரானிய படைகளின் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு அவர் ஓசையெழுப்பாமல் அளிக்கின்ற ஆதரவும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் முழுவீச்சிலான ஒரு போரின் விளிம்பில் நிறுத்தியிருக்கின்ற நிலையில், இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்தகையதொரு போர் ஒரு அணுஆயுத சக்தியான ரஷ்யாவால் இந்த பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் துருப்புகளும் சம்பந்தப்பட்டதாக துரிதமாக வளர்ச்சி காணக் கூடும்.
ஐரோப்பிய முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒரு அழிவுகரமான பிராந்தியப் போரின் அபாயம் குறித்து பரவலாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். உக்ரேனில் நேட்டோ ரஷ்யாவுடன் ஒரு “முழுமையான போரின்” விளிம்பில் நிற்பதாக, மின்ஸ்க் அமைதி உடன்பாட்டை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விமானத்தில் பறந்து செல்வதற்கு முன்பாக, பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் கூறிய மூன்று ஆண்டுகளின் பின்னர், அவருக்கு அடுத்துவந்த இமானுவல் மக்ரோன், மீண்டும் பெரிய அளவிலான மோதல் குறித்து எச்சரிக்கும் விதமாக இந்த வார இறுதியில் Der Spiegel இடம் பேசினார். “நாம் ஒரு மர்மப் பெட்டியைத் திறந்து கொண்டிருக்கிறோம். போரும் இருக்கக் கூடும்” என்றார் அவர்.
தமது கொள்கைகள் ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்றன என்று ஒத்துக் கொள்கின்ற போதிலும், ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவும் எண்ணெய் வளம் செறிந்த மத்திய கிழக்கில் தமது பெருநிறுவனங்களது மோதலுறும் நலன்கள் தொடர்பாக முன்னெப்போதினும் வன்முறையான விதத்தில் தொடர்ந்து மோதி வருகின்றன.
அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ட்ரம்ப் அறிவித்த அதேதினத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுடன் அதன் வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற வரிசையான கோரிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் விடுத்தனர். தேசிய பாதுகாப்புச் செயலரான ஜோன் போல்டான் கூறினார், “எந்த புதிய ஒப்பந்தங்களுக்கும் அனுமதியில்லை”, அத்துடன் எண்ணெய், எரிசக்தி, வாகன உற்பத்தி, சரக்கு போக்குவரத்து போன்ற இலக்கு வைக்கப்பட்ட துறைகளிலான நடவடிக்கைகளை மூடுவதற்கு ஐரோப்பிய வணிகங்களுக்கு அவர் 90 முதல் 180 நாட்கள் வரை அவகாசம் வழங்கினார்.
ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக பதவியேற்று சில மணி நேரங்களின் பின்னர், ரிச்சார்ட் கிரேனல், ஈரானுடனான ஜேர்மனியின் பொருளாதார உறவுகளை பேர்லின் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்தார். அவர் எழுதினார், “டொனால்ட் ட்ரம்ப் கூறியதைப் போன்று, அமெரிக்கத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தின் இன்றியமையாத துறைகளை இலக்காகக் கொள்ளும். ஈரானில் வணிகம் செய்யும் ஜேர்மன் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக மூட வேண்டும்.”
இந்த வசனங்கள் ஐரோப்பாவின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கோபமான பதிலடிகளைப் பெற்றது. அமெரிக்கா “உலகின் பொருளாதார போலிஸ்காரராக” செயல்படுவது “ஏற்றுக்கொள்ள முடியாததாகும்” என்று பிரெஞ்சு பொருளாதார அமைச்சரான புரூனோ லு மேர் கூறினார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் ஜேர்மன் தூதரான வூல்ஃப்காங் இஸ்சிங்கர் கிரேனல்லை பகிரங்கமாகத் தாக்கினார்: “ரிச்சார்ட், நீண்டகாலம் தூதராய் வாழ்ந்த அனுபவத்தில் எனது அறிவுரை, உங்கள் நாட்டின் கொள்கைகளை விளக்குங்கள் ஒழுங்கமைக்கும் நாட்டிடம் செல்வாக்குப்பெற முயற்சி செய்யுங்கள்- ஆனால், பிரச்சினையில் இருந்து நீங்கள் விலகியிருக்க விரும்பினால், ஒருபோதும் ஒழுங்கமைக்கும் நாடு என்ன செய்ய வேண்டும் என்று  நீங்கள் சொல்லாதீர்கள். ஜேர்மானியர்கள் காதுகொடுக்க ஆர்வமாயிருப்பார்கள், ஆனால் கட்டளைகள் அளிக்கப்படுவதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள்.”
கிரேனல்லின் கருத்துக்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான கூட்டணி பொறிந்து விட்டிருந்ததன் அறிகுறியா என்று ட்விட்டரில் இஸ்சிங்கர் பட்டவர்த்தனமாக வினவினார்: “அட்லாண்டிக்-கடந்த கூட்டணி மரித்து விட்டதா? ஒரு தரப்பு இன்னொரு தரப்பினால் முன்வைக்கப்படுகின்ற வாதங்களைப் பரிசீலிக்கவும் கூட மறுக்குமேயானால், நமது பகிர்ந்த பாதுகாப்பு நலன்களுக்கான சவால்களை சமாளிக்க நாம் முயலுகையில், நாம் இன்னும் ஒன்றாகத்தான் நிற்கிறோமோ? அல்லது நன்மைக்காக நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோமா? சோகமான கேள்விகள்.”
கிரேனல் தனது மிரட்டல்கள் அமெரிக்கக் கொள்கையே என்பதை மறுவலியுறுத்தம் செய்கின்ற ஒரு கருத்தினைக் கொண்டு பதிலடி அளித்தார், தனது ட்வீட், “புள்ளிகளையும் உண்மை விவரப்பட்டியல் தாளையும் பேசுகின்ற வெள்ளை மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட துல்லியமான அதே மொழி”யாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதலில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், ட்ரம்ப்பினால் முன்வைக்கப்படுவதற்கு சளைக்காத அளவு பிற்போக்குத்தனமான தமது ஏகாதிபத்திய நலன்களை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முனைந்து கொண்டிருக்கின்றன. இந்த நலன்களை, சென்ற மாதத்தில் சிரியா மீது வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரிஸ் குண்டுவீசியதில் போல, மத்திய கிழக்கிலான மக்கள்விரோத மற்றும் சட்டவிரோதத் தலையீடுகளின் மூலமாக அவை பாதுகாக்கின்றன. வாஷிங்டனில் இருந்து சுயாதீனமான ஒரு வர்த்தக மற்றும் இராணுவக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அவை முயற்சி செய்வதால், அவற்றின் இராணுவங்களை பென்டகனுக்கான ஒரு பலமிக்க போட்டியாகக் கட்டியெழுப்ப அவசியமான நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைத் திரட்டும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை அவை தீவிரப்படுத்தவிருக்கின்றன.
“ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளால் வீணாகும் நிலையில் பில்லியன் கணக்கான ஒப்பந்தங்கள்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் Le Monde,ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பெருநிறுவனங்கள் ஈரானில் இழக்கும் நிலையில் உள்ள ஒப்பந்தங்களது ஒரு பட்டியலை வரிசையிட்டிருந்தது. ஈரானுக்கான பயணிகள் ஜெட் விமானத்திற்கான 10 பில்லியன் யூரோ ஏர்பஸ் ஒப்பந்தம்;  South Pars எரிவாயு வயலை சுரண்டுவதற்கான பிரெஞ்சு எண்ணெய் பெருநிறுவனமான டோட்டல் இன் 5 பில்லியன் யூரோ ஒப்பந்தம்; ஈரானில் கார்களை விற்கத் தொடங்குவதற்கான வோல்க்ஸ்வாகனின் திட்டங்கள், அத்துடன் ஈரானிய கார் சந்தையில் 30 சதவீதத்தைக் கொண்டிருக்கின்ற PSA Peugeot-Citroën மற்றும் ஈரானில் வருடத்திற்கு 170,000 கார்களை விற்பனை செய்து வருகின்ற ரெனால்ட்-நிசான் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்களது செயல்பாடுகள் ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.
ஈரானுடனான வர்த்தகத்தை 2015 ஆம் ஆண்டுற்குப் பிந்தைய காலத்தில் 42 சதவீதம் அதிகரித்து வருடத்திற்கு 3.4 பில்லியன் யூரோக்களாகக் கொண்டிருக்கும் ஜேர்மனியில், ஜேர்மன் தொழிற்துறைக் கூட்டமைப்பின் (BDI) தலைவரான Dieter Kempf, ஒரு சந்தையாக ஈரானைக் கைவிடுவதற்கு பேர்லின் தயாரிப்புடன் இல்லை என்று குறிப்பிட்டார். “பொருளாதாரத் தடைகளை அகற்றியதால் விளைந்த சந்தை திறப்புகளில் எங்களது நிறுவனங்கள் பெரும் நம்பிக்கையை முதலீடு செய்திருக்கின்றன” என்றார் அவர்.
வெளியுறவு விவகாரங்களுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற ஆணையத்தின் முன்னாள் தலைவரான எல்மார் புரோக், Deutschlandfunk என்ற ஜேர்மன் வானொலியிடம் பேசுகையில், அமெரிக்கக் கொள்கையைக் கண்டனம் செய்தார். “ட்ரம்ப்பின் வார்த்தைகள் ஐரோப்பாவுக்கு எதிரான ஒரு தெளிவான மிரட்டலாக புரிந்து கொள்ளப்பட வேண்டுமா” என்று கேட்கப்பட்டதற்கு புரோக் பதிலளித்தார்: “ஆம்! அதாவது, உதாரணமாக கியூப பிரச்சினையில் மற்றும் அதுபோன்ற மற்ற பிரச்சினைகளில், அமெரிக்கக் கொள்கையை பின்பற்றாத நிறுவனங்கள் அதற்காக தண்டிக்கப்படும் என்று அமெரிக்காவிடம் இருந்து கூறப்படுவதை நாம் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறோம். இது இனியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பிராந்தியம் தாண்டிய சட்டஉரிமை கோரலாகும்.”
அட்லாண்டிக்-கடந்த கூட்டு நொருங்கிப் போய், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளது மத்தியில் ஒரு பகிரங்கமான மோதல் எழும் சாத்தியத்தை ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. “டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொள்ளிவைப்பவராக செயல்படுகிறார், பேர்லின், பாரிஸ், மற்றும் இலண்டனில் இருக்கும் அரசாங்கங்கள் மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் தெஹ்ரானில் புதிய கூட்டாளிகளை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்று Deutschlandfunk இல் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை விடயத்திலான தலைமை வருணனையாளராக இருக்கின்ற கிளாஸ் ரெமி அறிவித்தார். “இனியும் இது, (ஐரோப்பா) தன் தலைவிதியை தன் சொந்தக் கைகளில் எடுத்துக்கொண்டாக வேண்டும் என்று, வாஷிங்டனுடனான கருத்துவேறுபாடுகளை மனதில் கொண்டு, 2017 இல் சான்சலர் சொன்ன விதத்துடன் மட்டும் முடிந்து விடுவதாய் இல்லை. ஐரோப்பியர்கள் சுயாதீனத்தை எடுத்துக்காட்டினால் மட்டும் போதாது. டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பையும் அவர்கள் ஒழுங்கமைக்க வேண்டியிருக்கும்.”

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts