Search This Blog

Monday, 17 December 2018

ஐரோப்பிய ஒன்றியம், சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் போர் வேண்டாம்!

European elections 2019

No to the EU, social inequality, fascism and war! For socialism and the unity of the European working class!

ஐரோப்பியத் தேர்தல் 2019

ஐரோப்பிய ஒன்றியம், சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் போர் வேண்டாம்!
சோசலிசத்திற்கும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் ஆதரவளிப்போம்!

By the Sozialistische Gleichheitspartei (SGP)
23 November 2018
அக்டோபர் 20-21 இல் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) காங்கிரஸ் 2019 மே 26 அன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பியத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்ததுஅத்துடன் தேசிய வேட்பாளர் பட்டியலுக்கான வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்ததுகாங்கிரசினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் தீர்மானம், SGP இன் இலக்குகளையும் பணிகளையும் விளக்குகிறது.
2019 மே தேர்தலில், அதிவலதுகளின் எழுச்சி, பெருகும் இராணுவவாதம், ஒரு போலிஸ் அரசின் கட்டியெழுப்பல் மற்றும் அதிகரித்துச் செல்லும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நாடு தழுவிய வேட்பாளர்கள் பட்டியலுடன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஐரோப்பியத் தேர்தலில் போட்டியிடும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்து, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதுமட்டுமே இக்கண்டம் மீண்டும் பாசிச காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளும் போருக்குள்ளும் மூழ்குவதை தடுப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வழி ஆகும்.

1. வலது-சாரி அபாயத்திற்கு எதிரான போராட்டம்

75 ஆண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அந்த சமயத்தில், 1945 இல், ஐரோப்பா முழுமையும் சின்னாபின்னமாகிக் கிடந்தது. கொலைக்களங்களிலும், நாஜி விசவாயு அறைகளிலும், மற்றும் குண்டுவீச்சுகளிலுமாய் 60 மில்லியனுக்கும் (60,000,000) அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தகைய குற்றங்கள் இனியொரு முறை எப்போதும் நடக்கக் கூடாது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் ஜனநாயகம், செழுமை அல்லது அமைதிக்கு இணக்கமற்றது என்பது இன்று முன்னெப்போதினும் மிகவும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.
மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் தலைமையில் ஒரு அதி-வலது ஜனாதிபதி நின்று கொண்டு வட கொரியா, ஈரான், அணு-ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை போரைக் கொண்டு அச்சுறுத்துகிறார். ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகள் மேலெழுச்சி காண்கின்றன. இத்தாலி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா மற்றும் கிரீஸ் ஆகிய ஒன்பது நாடுகளில் அவை அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ளன; பிரான்சில் இரண்டாவது வலிமைமிக்க கட்சியாக உள்ளது.
ஹிட்லரின் கீழ் உலக வரலாற்றின் மாபெரும் குற்றங்களை இழைத்த ஜேர்மனியிலும் கூட, நாஜிக்கள் மீண்டும் திரும்புகிறார்கள். நாஜிக்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு, ”ஆயிரக்கணக்கான ஆண்டுகளது வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில்” விழுந்த “பறவையெச்சம்” என்று மூடிமறைத்த அலெக்ஸாண்டர் கௌலாண்ட் தலைவராக இருக்கும் AfD, நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்ற முதல் வலது-சாரி தீவிரவாதக் கட்சியாக இருக்கிறது. செப்டம்பரின் முடிவின் சமயத்தில், ஆயிரக்கணக்கான ஒரு நவ-நாஜி கூட்டம், கெம்னிஸ்ட் நகரில் அட்டூழியங்களை நடத்தி, வெளிநாட்டினர் வெறுப்பு சுலோகங்களை முழங்கி, ஹிட்லர் வணக்கம் செய்து, ஒரு யூத உணவகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது.
1930களின் நாஜிக்கள் போலன்றி, இன்றைய பாசிஸ்டுகள் ஒரு பாரிய இயக்கமாக இல்லை. ஆனால் அதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆபத்து எவ்வகையிலும் குறைவானது என்று அர்த்தப்படவில்லை. 1933 ஜனவரியில், ஜனாதிபதி வொன் ஹின்டன்பேர்க் இனை சுற்றிய ஒரு சதி, ஹிட்லரை குடியரசின் சான்சலராக நியமனம் செய்த சமயத்தில், அவரது இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் முதலாளிகளும், பெரும் நிலச்சுவாந்தர்களும் இராணுவமும்  நின்றிருந்தனர். ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தை நாஜிக்கள் அடித்து நொருக்கி இரண்டாம் உலகப் போருக்கு தயாரிப்பு செய்ய வேண்டும் என்பது  இந்த சக்திகளுக்கு அவசியமாய் இருந்தது. இன்றைய வலது-சாரி தீவிரவாதிகள் தமது வலிமையை பிரதானமாக மேலிருந்து பெறுகின்றனர் —அரசு எந்திரம், உளவு சேவைகள் மற்றும் போலிசிடம் இருந்து மட்டுமன்றி, அரசாங்கத்திடம் இருந்தும் ஸ்தாபக கட்சிகளிடம் இருந்தும் பெறுகின்றனர். AfD இன் எழுச்சியானது அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்திலான ஒரு உண்மையான சதியின் விளைபொருளாக இருக்கிறது.
AfD இன் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக அரச பாதுகாப்பு எந்திரம் இருக்கிறது. உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் சீகோவரும் அப்போது  உள்நாட்டு உளவு முகமையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டரசாங்க அலுவலகம் (Verfassungsschutz) இன் தலைவராக இருந்த ஹான்ஸ்-கியோர்க் மாஸனும், கெம்னிட்ஸிலான நவ-நாஜி பேரணியை பகிரங்கமாக பாதுகாத்துப் பேசினர். அரசியயமைப்பு பாதுகாப்புக்கான கூட்டரசாங்க அலுவலகம், நவ-நாஜி சூழலுடன் நெருக்கமாக பிணைந்திருக்கிறது, அதனை உளவாளிகளின் உதவியுடன் கட்டுப்படுத்துகிறது மற்றும் நிதியாதாரம் அளிக்கிறது. AfD இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளில் பலர் ஒரு இராணுவ அல்லது போலிஸ் பின்புலத்தை கொண்டுள்ளனர்.
ஆயினும் AfDக்கான ஆதரவு இன்னும் ஆழமாய் செல்கிறது. ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியுமே சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அதன் மேலெழுச்சிக்கு பாதை திறந்து விட்டிருக்கின்றன. இந்த ஏனைய கட்சிகள் AfD ஐ திறந்த கரங்களுடன் வரவேற்றுள்ளன. அவை சட்ட விவகாரம், வரவு-செலவுத் திட்டம் மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று முக்கியமான குழுவிற்கான பாராளுமன்றத் தலைமையை அதனிடம் நம்பி ஒப்படைத்திருக்கின்றன. மகா கூட்டணியானது அகதிகள் தொடர்பான கொள்கையிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்திலும் AfD இன் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. AfD வெறும் 12.6 சதவீத வாக்குகளையே பெற்ற போதிலும், அதுவே இப்போது கூட்டரசாங்க அரசியலின் தொனியை நிர்ணயிக்கின்ற இடத்தில் உள்ளது.
இதற்கான எதிர்ப்பு அதிகரித்து செல்கிறது. அக்டோபர் 13 அன்று பேர்லினில் நடந்த ஆர்ப்பாட்டம் ஜேர்மனி பாசிசத்திற்கும் இராணுவவாதத்திற்கும் திரும்புவதற்கு நிலவுகின்ற பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக, ஈராக் போருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் நடந்திருக்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். இனவாதம், AfD இன் மேலெழுச்சி மற்றும் கூட்டரசாங்கத்தின் மற்றும் ஸ்தாபக கட்சிகளின் வலது-சாரிக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேர்லினில் கிட்டத்தட்ட கால் மில்லியன் மக்கள் பேரணியில் பங்குபெற்றனர். மற்ற ஜேர்மன் நகரங்களிலும், சமீப வாரங்களில் பத்தாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் பலமுறை இறங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) பகுப்பாய்வுகளையும் முன்னோக்குகளையும் ஊர்ஜிதம் செய்கின்றன. AfDயானது மக்களிடையே பரவலான வலது-சாரி மனோநிலை பரவுவதன் வெளிப்பாடு அல்ல; அது ஆளும் வர்க்கத்தினால் நனவுடன் ஊக்குவிக்கப்படுகிறது. பரவலான எதிர்ப்புக்கு எதிராக தனது சமூக-விரோத மற்றும் இராணுவவாதக் கொள்கைகளைத் திணிப்பதற்கு இதுவே இந்த வலதுசாரி தீவிரவாதக் கட்சிக்கு அவசியமாய் இருக்கிறது.
அரசியல் சீற்றமும் வெகுஜனப் போராட்டங்களும் முக்கியமானவை. ஆயினும், ஆளும் வர்க்கமானது, 1930களில் போலவே, பாசிச வழிவகைகளைக் கொண்டு தனது பிற்போக்குத்தனமான இலக்குகளைப் பின்பற்றுவதற்கு மறுபடியும் செல்வதில் இருந்து தடுப்பதற்கு அவை மட்டுமே போதுமானவையல்ல. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகும் பாரிய எதிர்ப்புக்கு ஆளும் வர்க்கம் அதிகரித்துச் செல்லும் மூர்க்கத்தனத்துடன் பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது: தனது அணிக்குள் நெருக்கத்தை பெருக்குகிறது, ஜனநாயக எதிர்ப்பை ஒடுக்குகிறது, மக்களுக்கு எதிரான அதன் அரசியல் சதிவேலைகளை தீவிரப்படுத்துகிறது.
போலிஸ் மற்றும் உளவு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவற்றின் கண்காணிப்பு அதிகாரங்கள் பாரிய அளவில் விரிவுபடுத்தப்படுகின்றன. வலைப்பின்னல் அமுலாக்கச் சட்டமானது சமூக வலைத் தளங்கள் உள்ளடக்கங்களை தணிக்கை செய்ய இல்லையேல் கடுமையான அபராதங்களுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கிறது. ஐரோப்பியத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “போலிச் செய்தி”களை அதாவது, உத்தியோகபூர்வ “விவரிப்பு”களுடன் (“NewSpeak”) முரண்படுகின்ற உண்மைகளை பரப்பும் கட்சிகள் மீது அரக்கத்தனமான அபராதங்களை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த தணிக்கையானது பிரதானமாக இடதுசாரி மற்றும் சோசலிச விமர்சனத்திற்கு எதிராக செலுத்தப்படுவதாகும். உலக சோசலிச வலைத் தளம் கூகுளின் தணிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்டது; விக்கிலீக்ஸ் அமெரிக்க அரசாங்கம் இழைத்த போர்க் குற்றங்களை வெளிக்கொணர்ந்த காரணத்தால் ஜூலியான் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்படும் அபாயத்திற்கும், இன்னும் மரண தண்டனையின் சாத்தியத்திற்கும் கூட முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பேர்லினில் ஒரு வெளிப்படையான வலது-சாரி தீவிரவாத அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக அரசியல், ஊடகங்கள், உளவு சேவைகள் மற்றும் இராணுவத்தில் உள்ள செல்வாக்கான வட்டாரங்கள் திரைமறைவில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. AfD நாடாளுமன்றத்தில் நுழைகின்றதையடுத்து, “ஏதோவொன்று நல்லதற்காக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது” என்று நாடாளுமன்றத்தின் தலைவரான வொல்வ்காங் ஷொய்பிள Bild am Sonntagபத்திரிகையிடம் கூறினார். “அரசாங்கத்தில் AfDயின் சொல்லுக்கு மதிப்பிருக்க வேண்டும்” என்று Spiegel இன் பத்தியாளரான ஜாக்கோப் அவுக்ஸ்ரைன் கோரினார்.
பாசிசம், இராணுவவாதம் மற்றும் போர் மீண்டும் திரும்புவதற்கு எதிரான தனது போராட்டத்தில், SGP வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியை  அடித்தளமாகக் கொள்கிறது. உலகெங்கும் ஆளும் வர்க்கம் கூர்மையாக வலது நோக்கி நகர்கையில், தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரும்பான்மை இடது நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதுடன் சமூக ஜனநாயகக் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலும் அதன்மீது திணிக்கப்பட்டிருந்த அரசியல் தளைகளையும் உதறியெறியத் தொடங்குகிறது. அதிகரித்துச் செல்லும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும், சோசலிசத்தில் ஆர்வம் வளர்ந்து செல்வதிலும் இது பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவில், அவர்களது வலதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஆசிரியர்கள், UPS தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின்  வேலைநிறுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் சென்ற ஆண்டில் ஏராளமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன, றையன் ஏர், லுப்தான்ஸா, ஏர் பிரான்ஸ் மற்றும் அமசன் வேலைநிறுத்தங்கள், பிரான்சில் தொழிலாளர் சந்தை சீர்திருத்தத்திற்கு எதிரான, கிரீசில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான, மற்றும் ஜேர்மன் உலோகத் தயாரிப்பு துறையிலும் பொதுத் துறையிலும் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் ஆகியவை அவற்றில் பெயர் குறிப்பிடத்தக்க சிலவாகும்.
வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது SGPயின் மீது பிரம்மாண்டமான பொறுப்புகளை சுமத்துகிறது. “ஆளும் வர்க்கத்தை போருக்கு உந்தித்தள்ளுகின்ற அதே காரணிகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகளையும் உருவாக்குகின்றன” என்று ‘ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்’ என்ற 2014 செப்டம்பர் தீர்மானத்தில் SGP அறிவித்தது. அது வலியுறுத்தியது: “ஆனால் சோசலிசப் புரட்சி என்பது சுயமாகவே நிகழ்க்கூடிய ஒரு நிகழ்ச்சிப்போக்கல்ல. அதன் வேகம் மற்றும் வெற்றி மீதான முடிவுகள் அரசியல் வட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரையொட்டி ட்ரொட்ஸ்கி எழுதியவாறாக, மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகின்றது. இந்த நெருக்கடிக்கான தீர்வு நமது கட்சியின் முடிவுகள், நடவடிக்கைகள் மற்றும் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது.”


(தொடரும்...)

இலங்கை பெருந்தோட்டத் கம்பனிகள் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையை நிராகரிக்கின்றன

Sri Lankan plantation companies reject workers’ wage demand

By W.A. Sunil
11 December 2018
லங்கையில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 100 வீத சம்பள அதிகரிப்பைக் கோரி டிசம்பர் 4 அன்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். அவர்கள் நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் மிக வறிய பகுதியினர் ஆவர். தற்போது அவர்களின் அடிப்படை தினசரி சம்பளம் 500 ரூபாய்கள் (2.80 டாலர்). அவர்கள் 1,000 ரூபா கோரி வருகின்றனர்.
தொழிலாளர்களுடன் நேரடி மோதலை சமிக்ஞை செய்துள்ள பெருந்தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையை மீண்டும் மீண்டும் நிராகரிக்கின்றனர். இந்த கோரிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் வருவாயையும் “மீறியது" என கடந்த வெள்ளியன்று இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்தது. "தோட்டங்களை மட்டுமன்றி, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முழு மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த தொழிற்துறையையும் பாதிக்கும் ஒரு கோரிக்கையை" அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது.
யடியந்தொட்ட சபுமல்கந்த தோட்ட தொழிற்சாலை முன்னால் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்.

தொழிலாளர் செலவினங்கள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், தேயிலை உற்பத்தி செலவினம் அதிகம் எனவும் கூறிக்கொள்ளும், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளும், கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஊதிய மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுச் செலவு மேலும் 20 பில்லியன் ரூபா அதிகரிக்கும் என அறிவிக்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களை கொடூரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம், தங்கள் இலாபங்களையும் தமது சர்வதேச கொள்வனவாளர்களையும் பாதுகாக்க வேண்டும், என்று தோட்ட உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், தினசரி அடிப்படை ஊதியத்தை 20 சதவிகிதம் அல்லது 100 ரூபாயாலும், வருகைக்கான கொடுப்பனவை 33 சதவிகிதம், அதாவது 80 ரூபா வரையும் அதிகரித்து, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு மற்றும் விலை பங்கையும் சேர்த்த ஒரு ஊதிய அதிகரிப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
தொழிலாளர்கள் இதன் மூலம் 940 ரூபாவை மொத்தமாக சம்பாதிக்க முடியும் என்று முதலாளிகள் வாதிடுகின்றனர். இருப்பினும், ஊக்கக் கொடுப்பனவுகள் என அழைக்கப்படுபவை ஒரு வித்தை மட்டுமே. உடல்நல குறைவு, மோசமான வானிலை, நோய்கள் போன்ற பிற பிரச்சினைகளால், அந்த தொகையை சம்பாதிப்பது தொழிலாளர்களுக்கு கடினமாக உள்ளது.
முதலாளிகள் உண்மையில் கோரி வருவது என்னவென்றால், தற்போதைய தினசரி ஊதிய முறையை ஒழித்து, தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் நவீன குத்தகை-விவசாயிகளாக மாற்றியமைக்கும் "வருவாய் பங்கீட்டு" முறையை நடைமுறைப்படுத்துவதையே ஆகும்.
அந்த முறையின் கீழ் ஒவ்வொரு தொழிலாளி குடும்பத்துக்கும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகளை பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒரு நிலப்பகுதி ஒதுக்கீடு செய்யப்படும். நிறுவனத்தால் வழங்கப்படும் உரங்கள் மற்றும் வேளாண்-இரசாயனங்களுக்கான செலவினங்களையும் கம்பனியின் இலாபத்தையும் கழித்துக்கொண்ட பின்னர், குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு உட்பட தங்கள் குறைந்தபட்ச சமூக நலன்களையும் தொழிலாளர்கள் இழக்க நேரிடும்.
இந்த புதிய முறையின் கீழ் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு 80,000 ரூபாய்களை சம்பாதிக்கலாம் என்று கம்பனிகள் கூறுகின்றன. இது ஏற்கனவே ஒரு பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ள மாதுரட்டா மற்றும் களனி வெளி போன்ற பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், இந்த கூற்றுக்களை மறுத்துள்ளனர். பிள்ளைகள் உட்பட முழு குடும்பங்களும் கட்டாயத் தொழிலாளர்கள் போல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையிலும், தமது வாழ்க்கை செலவினங்களை சமாளிப்பதற்குப் போதுமான வருமானத்தை தம்மால் சம்பாதிக்க முடியவில்லை என்று அவர்கள் புகார் செய்துள்ளனர்.
உலகளாவிய தேயிலை நிறுவனங்களின் ஒரு சங்கிலிக்கு இலாபத்தை வழங்கும் தேயிலை தொழிற்துறை, உலகில் மிக மோசமாக உழைப்பைச் சுரண்டும் ஒரு தொழிற்துறையாகும். டாட்டா குளோபல் பீவரேஜஸ், யூனிலீவர், ட்வினிங்ஸ், நெஸ்ட்லே, ஐடிஓ இஎன் ஐஎன்சி, பாரி'ஸ் டீ, டில்மா, செலஸ்டியல் சீசனிங்ஸ், ஹார்னிஸ் அன்ட் சன்ஸ், ரிபப்லிக் ஒஃப் டீ ஆகியவை முதல் பத்து நிறுவனங்கள் ஆகும்.
மே மாதம் வெளியிடப்பட்ட ஷெஃபீல்ட் பல்கலைக்கழக ஆய்வுத் தாளின் படி, "உலகளாவிய தேயிலை மற்றும் கொகோ விநியோக சங்கிலிகளின் அடித்தளத்தில், பலாத்கார உழைப்பு உட்பட சுரண்டல் பரவலாகக் காணப்படுகிறது". இந்த ஆய்வின்படி, முதலாளிகள் "குறைவான ஊதியங்கள்" மற்றும் "குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளை வழங்காமல்," இலாபங்களைச் சுரண்டுகின்றன என அந்த கற்கை கூறுகின்றது.
ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜெனீவ் லெபரோன், ஊடகங்களுக்கு கூறியதாவது: "நாங்கள் ஆவணப்படுத்திய சுரண்டல் நிலைமை ஒரு சில ’மோசமான நபர்களால்’ எப்போதாவது நடப்பவை அல்ல. மாறாக, இது உலகளாவிய விவசாய விநியோக சங்கிலிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு இயக்கத்தின் விளைவே ஆகும்.
"இந்த விநியோக சங்கிலிகளின் தலைமையில் உள்ள உச்ச இலாபம் கொண்ட நிறுவனங்கள், விநியோகத்தர்கள் மீது விலைகுறைப்புக்காக அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இது தேயிலை மற்றும் கொக்கோ தயாரிப்பாளர்களுக்கு செலவுகளை குறைக்க தீவிரமாக நெருக்குவதோடு, மலிவான மற்றும் சில நேரங்களில் பலாத்கார உழைப்புக்கான ஒரு வணிக 'கோரிக்கையை' உருவாக்குகிறது."
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது "முழு மதிப்புச் சங்கிலியை" பாதிக்கும் என்று பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை வலியுறுத்துகின்ற போது, ​​தொழிலாளர்களை அதிகபட்ச சுரண்டலுக்கு உள்ளாக்கும் "இந்த விநியோக சங்கிலிகளின் தலைமையில் உள்ள உச்ச இலாபம் பெறும் நிறுவனங்களையே" குறிக்கின்றது.
இலங்கையிலுள்ள தேயிலைத் தொழிற்துறையானது கென்யா, சீனா, இந்தியா மற்றும் பங்களாதேசம் போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்தும் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. உலக தேயிலை உற்பத்தியில் இலங்கையின் பங்கு 2000ல் 10.5 சதவிகிதத்திலிருந்து கடந்த ஆண்டு 5.4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் அல்லது நாணயப் பிரச்சினைகள் காரணமாக ஈரான், துருக்கி மற்றும் ரஷ்யா உட்பட முக்கிய சந்தைகளின் வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சராசரியாக ஏற்றுமதி விலை 4 சதவிகிதம் சற்றே அதிகரித்திருந்தாலும், கொழும்பில் உள்ள தேயிலை சந்தையில் 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சராசரி விலை 2.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி விலையானது 2014ல் இருந்து 23 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை, தொழிற்சங்கங்களை "தொழில்துறையின் சிறந்த நலனுக்காக வேலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியது. அதாவது, இலாப நலன்களுக்காக தொழிலாளர்களின் நலன்களை அடிபணியச் செய்வதாகும். தொழிற்சங்கங்கள் தங்கள் உண்மையான நடைமுறை மூலம் அதை செய்ய தங்கள் உறுதிப்பாட்டை காட்டியுள்ளன. ஏனைய துறைகளில் போலவே, தோட்டத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் மீது தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன. உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊதிய முறையை செயல்படுத்த தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
ருவன்வெல்ல தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்.

ஆறுமுகம் தொண்டமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தற்போதைய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதன் நோக்கம், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வருவது சம்பந்தமாக நியாயமாக கோபமடைந்துள்ள தொழிலாளர்களின் சீற்றத்தை ஆவியாக்கி விடுவதே ஆகும்.
ரணில் விக்கிரமசிங்கவை அகற்றி விட்டு அக்டோபர் 26 அன்று பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா. தலைவர்கள் அணிசேர்ந்து கொண்டனர். இராஜபக்ஷவின் கீழ் ஒரு முக்கிய அமைச்சுப் பதவியை தொண்டமான் பெற்றார்.
விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் (ஐ.தே.மு), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை பங்காளிகளாக உள்ளன. அந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களான முறையே ப. திகாம்பரம், மோனோ கணேசன் மற்றும் பி. ராதகிருஷ்ணன் ஆகியோர், ஐ.தே.மு. அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். 1,000 ரூபாய் கோரிக்கை சாத்தியமற்றது என்று கூறி, இந்த தொழிற்சங்கங்கள் தற்போதைய வேலைநிறுத்தத்தில் சேர மறுத்துவிட்டன. இருப்பினும், அந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்துகொண்டனர்.
தோட்டத் தொழிலின் நெருக்கடி முதலாளித்துவ நெருக்கடியின் நேரடி விளைவு ஆகும். தொழிலாளர்கள் அது பொறுப்பல்ல. யார் தோட்டங்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும், யாருடைய நலன்களுக்காக தோட்டங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்? போன்றவை வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் முன்னுள்ள முக்கியமான பிரச்சினைகளாகும். பெருந்தோட்டங்கள் அனைத்தும், தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதே இதற்கான ஒரே பதில் ஆகும்.
முக்கிய தொழில்கள், வங்கிகள் மற்றும் பிற பொருளாதார நரம்பு மையங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம், சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் மட்டுமே இதை இட்டு நிரப்ப முடியும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து முறித்துக் கொண்டு, தங்கள் சொந்த சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பதோடு ஏனைய நாடுகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன் தங்கள் போராட்டத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்.
https://www.wsws.org/tamil/articles/2018/12-Dec/plan-d15.shtml

Thursday, 13 December 2018

பாரிஸில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

High school students protest in Paris against French government’s education reforms

பாரிஸில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

மூக சமத்துவமின்மையை எதிர்த்தும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை இராஜினாமா செய்யக் கோரியும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் எங்கிலும் தொடர்கின்ற நிலையில், நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் ஆர்ப்பாட்டங்களின் காரணத்தால் மூடப்பட்டுள்ளன, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களையும் கட்டாய இராணுவ சேவையை மக்ரோன் மீண்டும் திணிப்பதையும் கண்டனம் செய்த அவர்கள் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுடனான தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தினர்.

பாரிசில் செயின்ட் மிஷேல் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்
Olympe de Gouges உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காப்ரியல் லாக்கால்மெட் (Gabriel Lacalmette) ஐ உலக சோசலிச வலைத் தளம் பேட்டி கண்டது. “நாங்கள் 93வது மாவட்டம் மற்றும் தொழிலாள-வர்க்கப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்” என்றார் அவர். “உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக நுழைவு சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக் கட்டண அதிகரிப்புகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் இங்கே வந்திருக்கிறோம், அவை சமத்துவமின்மையையும் ஏற்கனவே இருக்கும் பாகுபாட்டையும் அதிகரிக்கின்றன.”
பிரான்சில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கட்டணங்களை மக்ரோன் அதிகரித்திருக்கும் உதாரணத்தைக் காட்டி அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை காப்ரியல் விளக்கினார். “இன்று நிதிரீதியாக ஒவ்வொருவருக்குமே அணுகல் கிடைக்கத்தக்க ஒரு கல்வி அமைப்பு முறை இருக்குமளவுக்காவது நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம். இந்த கட்டண அதிகரிப்பு, வசதியான வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு வர முடியும் என்றே உண்மையில் அர்த்தம் கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அனைவருக்குமான கல்வியையே ஆதரிக்கிறோம். நாட்டில் எவ்வளவு அதிகமாக கற்றவர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அந்நாடு மேம்பட்டதாக இருக்கும்.”

காப்ரியல் லாக்கால்மெட்
மக்ரோனின் பள்ளிச் சீர்திருத்தங்களால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மையையும் அவர் வெளிச்சம்போட்டுக் காட்டினார். “புதிய நுழைவு விதிமுறைகளின் படி, நாங்கள் ஒரு பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தால், பாரிஸ்காரர்களை விடவும் எங்களுக்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும். காத்திருப்போர் பட்டியல்களது முறையானது பாரிஸைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில் எங்களை அனுகூலம் குறைந்தவர்களாக ஆக்குகிறது. 2000 இல் ஒரு பிறப்பு அதிகரிப்பு நிலை இருந்தது, ஆகவே இப்போது அதிகமான பேர் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகிறார்கள். ஆனால் புதிய இடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் தேர்வுகளைக் கடுமையாக்குகிறார்கள். சோர்போன் போன்ற கவுரவமிக்க பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறார்கள், பக்கத்திலேயே புறநகர்ப் பகுதிகளிலான மாணவர்கள் அனைவருக்குமான குப்பைப் பள்ளிகளை உருவாக்குகிறார்கள்.”
கட்டாய இராணுவ சேவை மீண்டும்கொண்டுவரப்படுவதற்கு காப்ரியல் தனது குரோதத்தை வெளிப்படுத்தினார். “மில்லியன் கணக்கான மக்கள் இதனால் சூழப்பட்டிருப்பார்கள், ஆனால் பல்கலைக்கழகங்களில் கூடுதல் இடங்களை உருவாக்குவதும், கூடுதலாக பணி நியமனங்களை செய்வதுமே உண்மையில் தேவையாக இருக்கிறது. ஒருபக்கத்தில் 2,600 வேலையிடங்களை வெட்டுகிறார்கள், மறுபக்கத்தில் இளைஞர்களுக்கு தவறாகக் கற்பித்து அவர்களை இராணுவ சேவைக்குள் தள்ளுகிறார்கள்.”
இளைஞர்கள் மத்திய கிழக்கிலான ஒரு போருக்கு அனுப்பப்பட முடியும் என்பதான ஒரு யோசனையையும் அவர் எதிர்த்தார். “பிரான்ஸ் மறுபடியும் ஒரு நவ-காலனித்துவ நிலையை எடுக்கிறது, அதற்காக போருக்குச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. அனைத்து மக்களின் இறையாண்மைக்கு ஆதரவளிக்கிறேன், இந்த மோசடியில் பங்குகொள்ளும் விதமாய் எதையும் செய்ய நான் விரும்பவில்லை.”
“மஞ்சள் சீருடைகளை நான் ஆதரிக்கிறேன் ஏனென்றால் அது இதுவரை முற்றிலுமாய் ஒருபோதும் அணிதிரட்டப்பட்டிராத, அரசியல்சாராதவர்களாக இருந்த மக்களை ஈடுபடுத்தும், தொழிலாளர்களது ஒரு பாரிய இயக்கமாக இருக்கிறது. இதுவே நாம் போராடக் கூடிய வழியாகும். இந்த உலகின் சமத்துவமின்மைக்கும் அநீதிக்கும் முடிவுகட்ட மாணவர்களின், இரயில்வே தொழிலாளர்களின், மஞ்சள் சீருடைகளின், மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் இயக்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

கோபமும் ஒற்றுமையும், சமத்துவமான கல்விக்காக
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மெக்சிகோவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களையும் WSWS சந்தித்துப் பேசியது. “வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அதிகரித்ததற்கு அனைவருமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்று அவர்கள் கூறினர். கட்டண உயர்வுகளைத் தவிர்க்க சில வெளிநாட்டு மாணவர்கள் பிரான்சில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டு இப்போது ஜேர்மனியில் படித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இப்போது மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நேரத்தில், “இந்த சகிக்க முடியாத சமத்துவமின்மைக்கு எதிராக மக்களின் ஒரு மிகப்பெரும் பகுதி நடவடிக்கையில் இறங்குவதற்கு இதுவே சமயமாகும்.”
கிட்டத்தட்ட கட்டணமற்ற பல்கலைக்கழகங்கள் போன்ற, பிரான்சில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சமூக உரிமைகள் உலகெங்கிலும் “ஒவ்வொருக்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

M. Blondel
Guy Maupassant உயர்நிலைப் பள்ளியில் மெய்யியல் ஆசிரியராக இருக்கும் M. Blondel உடனும் WSWS கலந்துரையாடியது. அவர் தெரிவித்தார், “எனது மாணவர்களுக்கு ஆதரவாய் நான் வந்தேன். அரைவருட காலமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தனிப்பட்ட மன உறுதியுடன் என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழியிலும் பள்ளிகளை அவர்கள் மறித்து வருகின்றனர்.”
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கும் மறியல்களுக்கும் முகம்கொடுக்கும் நிலையில் மக்ரோனின் சீர்திருத்தங்களது முறையான தன்மையை அவர் சவால் செய்தார். “உயர்நிலைப் பள்ளி சீர்திருத்தங்கள் பயனற்றவை என்பதுடன் அவை முன்னோக்கிய வழியுமல்ல. அவற்றின் நோக்கம் நல்லவையல்ல. தேர்வுப் பரீட்சைகளிலான மாற்றங்கள் சென்ற ஆண்டில் ஏற்படுத்திய சேதத்தை நாம் கண்டிருக்கிறோம். நாங்கள் வறுமைப்பட்ட புறநகர்ப்பகுதிகளில் இருக்கிறோம். உயர்நிலைப் பள்ளிகள் முன்னுரிமைக் கல்வி மண்டல அந்தஸ்தை இழந்து விட்டன. எங்களது மாணவர்கள் பாரிஸ் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியாது. அவர்கள் நாந்தேர் (Nanterre) பல்கலைக்கழகத்திற்குள் அடைபடுகின்றனர்.”
“மஞ்சள் சீருடையாளர்களுக்கும்” உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இடையில் “அடிப்படையான சில பொதுவான அம்சங்கள்” இருப்பதாக அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். “வயதுவந்தவர்களைப் போலவே, இளைஞர்களும், முறையான வாழ்க்கை வாழ்வதற்கு விரும்புகின்றனர்” என்றார் அவர். “அவர்கள் மிதமிஞ்சிய கோரிக்கைகள் எதனையும் வைக்கவில்லை. உயரடுக்கினராக வேண்டுமென்றோ மில்லியனர்கள் ஆக வேண்டும் என்றோ அவர்கள் விரும்பவில்லை. மஞ்சள் சீருடையாளர்கள் தமது சொந்த உழைப்பில் கண்ணியமாக வாழ முடிய வேண்டும் என்றே விரும்புகின்றனர். எங்களது மாணவர்களும் தங்களது படிப்பைத் தொடர இயல வேண்டும், கண்ணியமாக ஊதியமளிக்கக் கூடிய ஒரு வேலை கிடைக்க இயல வேண்டும் என்றே விரும்புவார்கள்.”

நாளை வீதியில் நிற்காமல் இருப்பதற்காக இன்று வீதியில் நிற்கிறோம்
மக்ரோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு இளைஞர்கள் காட்டும் எதிர்ப்பை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். “மாணவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இது அவர்களது படிப்புகளில் எடுத்துக் கொண்டு விடக்கூடிய காலத்தைக் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர், இந்த முன்னோக்கைத் தான் அரசாங்கம் தங்களுக்காக உருவாக்கியிருக்கிறது என்பதைக் கண்டு அவர்கள் ஒரு இதனை ஒரு இழிவான செயலாக காண்கின்றனர்.”

4 செப்டெம்பர் 2018ல் 49,523 மாணவர்கள் பல்கலைக்கழகம் இன்றி உள்ளனர். இது நல்லதுதானா ??
வருங்காலத்தில் சிரியா அல்லது மாலியில் சண்டையிடுவதற்கும் உயிரிழப்பதற்கும் இளைஞர்கள் அனுப்பப்படக் கூடிய அபாயம் குறித்து கேட்டதற்கு அவர் பதிலளித்தார்: “நமது மாணவர்களை அங்கே அனுப்புவதா? கூடவே கூடாது. நாம் கொண்டிருக்கக் கூடிய வர்த்தக மற்றும் எரிசக்தி நலன்கள் நாம் தலையிடும் இடங்களில் ஒழுங்கின்மைகளை உருவாக்குகின்றன, சொல்லப் போனால் அவை இங்கும் கூட அதற்குச் சளைக்காத ஒழுங்கின்மையை உருவாக்குகின்றன. சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து வேறெவருக்கும் இதில் ஆதாயமில்லை, ஆனால் மக்களுக்கு: இதில் ஒன்றுமேயில்லை.”
“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை ஒட்டி சர்வதேசியவாதத்திற்கு ஆதரவு பெருகுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். “சர்வதேச சிந்தனை வளர்கிறது. உலகெங்கிலும் ஏராளமான மக்கள் ஒரே நலன்களையே கொண்டிருக்கின்றனர் என்பதைக் கவனிக்கிறோம், அதை உணர்ந்து கொள்ளவும் தொடங்குகிறோம். ஐரோப்பிய மட்டத்தில், ஒரு ஜனாதிபதியின் இராஜினாமா மட்டுமே கோரிக்கையாக இருக்காது, மாறாக உயரிய ஆளும் அமைப்புகளுக்கான கோரிக்கையும் இருக்கும் என்றே ஒருவர் எண்ண முடியும். மக்களின் துன்பங்கள் ஒன்றுதான். அவர்களது நலன்களும் ஒன்றுதான்.”
By WSWS reporters
12 December 2018
https://www.wsws.org/tamil/articles/2018/12-Dec/pari-d13.shtml

எகிப்து மஞ்சள் சீருடை விற்பனைக்கு தடைவிதிக்கிறது

Egypt bans yellow vest sales as French protesters reject Macron’s concessions

மக்ரோனின் சலுகைகளை பிரெஞ்சு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரிக்கும் வேளையில் எகிப்து மஞ்சள் சீருடை விற்பனைக்கு தடைவிதிக்கிறது

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவாக சர்வதேச அளவில் போராட்டங்கள் பரவுகின்ற நிலையில், எகிப்தின் இரத்தவெறி தளபதி அப்துல் ஃபத்தா அல் சிசியின் சர்வாதிகாரம் மஞ்சள் சீருடைகள் விற்பனைக்கு தடை விதித்துக் கொண்டிருக்கிறது. பிரான்சில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தணிக்கின்றதொரு முயற்சியில் மக்ரோன் வழங்க முன்வருகின்ற சலுகைகளை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்த வேளையில் இது வந்திருக்கிறது.
பிரான்சில் போலவே எகிப்து மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும், பெருகிவரும் தொழிலாள வர்க்கக் கோபமானது “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களைச் சூழ்ந்து வெடிக்கக் கூடும் என்று சிசியின் சர்வாதிகாரம் மிரட்சி கண்டிருக்கிறது. வெறுக்கப்பட்ட சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்த 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினமான அடுத்த ஆண்டு ஜனவரி 25 இன் போராட்டங்கள் நடந்து முடிகின்ற வரையில் மஞ்சள் சீருடைகளை விற்கக் கூடாது என போலிஸ் உத்தரவிட்டிருப்பதாக AP செய்தி நிறுவனத்தால் தொடர்பு கொள்ளப்பட்ட கெய்ரோவின் சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர். சிசியின் ஆட்சியானது ஒரு குருதிகொட்டும் இராணுவக் கவிழ்ப்பின் மூலமாக 2013 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இத்தகைய போராட்டங்களை தடைசெய்து வந்திருப்பதோடு தடையை மீறும் எவரையும் அடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு கலகத் தடுப்பு போலிசாரை அனுப்பி வந்திருக்கிறது.
“சில நாட்களுக்கு முன்னால் போலிஸ் இங்கே வந்து அவற்றை விற்பதை நிறுத்தும்படி எங்களிடம் தெரிவித்தது. ஏன் என்று நாங்கள் கேட்டபோது, எங்களுக்கு வந்த உத்தரவின் படி நாங்கள் நடந்து கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்” என்று ஒரு சில்லறை வியாபாரி APயிடம் தெரிவித்தார். “பிரான்சில் செய்வது போல யாரும் இங்கு செய்து விடக் கூடாது என அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது” என்றார் இன்னொருவர்.
தொழிற்துறை பாதுகாப்பு சாதன விநியோகஸ்தர்கள், முகம் தெரியாத வாடிக்கையாளர்களுக்கு மஞ்சள் சீருடைகளை விற்கக் கூடாது எனவும், போலிஸ் அனுமதி கொண்ட சரிபார்க்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. மஞ்சள் சீருடைக்கான தடை குறித்து கருத்து கூற விடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு எகிப்தின் உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை என பல செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
சிசி முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் ஒரு நெருக்கமான நண்பர் எனக் கூறப்படுகிறது, அத்துடன் எகிப்தின் மக்கள் கண்காணிக்கப்படுவதிலும் கைது செய்வதற்கும் சித்திரவதை செய்யப்படுவதற்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தனிமனிதர்கள் அடையாளம் காணப்படுவதிலும் பிரான்சின் இணைய வேவு நிறுவனங்கள் ஆழ்ந்த சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், அவர்களது ஆகக்கூடிய முயற்சிகளைத் தாண்டியும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரொட்டிக் கலகங்கள், ஆடை தயாரிப்புத் துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் சிசியின் தனியார்மயமாக்கங்களுக்கும் உணவு மானிய வெட்டுக்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை எகிப்தை அடுத்தடுத்து உலுக்கி வந்திருக்கின்றன.
எகிப்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அவை நடைபெறுவதற்கு முன்கூட்டியே தாக்குவதற்கு சிசி செய்திருக்கும் முயற்சியானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலில் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அடைந்துள்ள பீதியை சுட்டிக்காட்டுகிறது. சமூக சமத்துவம், ஊதிய அதிகரிப்புகள், இராணுவவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டுவது மற்றும் மக்கள்விரோத அரசாங்கங்களை அகற்றுவது ஆகிய பிரான்சில் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்களை செலுத்துகின்ற கோரிக்கைகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற கோரிக்கைகளாய் இருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் எகிப்துக்கு பரவி விடாமல் தடுக்க சிசி பெரும்பிரயத்தனத்துடன் முயலுகின்ற வேளையில், அடுத்தடுத்து பல நாடுகளில் பல்வேறு சக்திகளும் இத்தகைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவில், வெள்ளிக்கிழமையன்று புரூசெல்ஸில் நடந்த “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தை பெல்ஜிய போலிஸ் வன்முறையாக ஒடுக்கியது, நெதர்லாந்து, பல்கேரியா மற்றும் ஈராக்கிலும் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்ரா நகரில் நேட்டோ ஆதரவு நவ-காலனித்துவ ஆட்சியின் அசுத்தமான குடிநீர் மற்றும் மோசமான நகர சேவைகளுக்கு எதிராக ஒரு “மஞ்சள் சீருடை” போராட்டம் நடைபெற்றதற்குப் பின்னர், டிசம்பர் 7 அன்று பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாஸ்ரா ஆர்ப்பாட்டங்களுடன் ஐக்கியத்தைக் காட்டுகின்ற விதத்தில் மஞ்சள் சீருடைகள் அணிந்திருந்தனர்.
குறிப்பாக புரூசெல்ஸிலும் பாரிஸில் சனிக்கிழமையன்றும் நடந்த போலிஸ் ஒடுக்குமுறைகளுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டங்கள் ஆபிரிக்கா எங்கிலும் பரவிக் கொண்டிருக்கின்றன. Burkina Faso இல், டிசம்பர் 13 அன்று இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முகநூல் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தெரிவிக்கிறது: “ஆகவே, டிசம்பர் 13, 2018 அன்று Burkina Faso எங்கிலும், நாடு முழுக்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் நமது குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெரு முனைகள் மற்றும் சந்திகளிலும் வன்முறையின்றி அமைதியாகத் திரண்டு கூறுவோம்: எரிபொருள் விலையேற்றம் கூடாது; அநீதி எந்த வடிவத்திலும் கூடாது”.
துனிசியாவில், “சிவப்பு சீருடைகள்” என்ற சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு டிசம்பர் 7 அன்று அதன் முதல் அறிக்கையை விடுத்தது. துனிசிய அரசியல் அமைப்புமுறையின் “தோல்வி மற்றும் ஊழல்நிலை”யையும் மக்களை “கொஞ்சம் கொஞ்சமாக வறுமைக்குள் தள்ளும்” அரசாங்கத்தின் கொள்கையையும் கண்டனம் செய்தது. ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக துனிசிய ஆசிரியர்கள் சென்ற வாரத்தில் வேலைநிறுத்தங்கள் நடத்தியதைப் பின்தொடர்ந்து இது வந்திருக்கிறது.
எகிப்தில் போலவே, துனிசியாவிலும், ஐரோப்பிய-ஆதரவு சர்வாதிகாரி ஸைன் எல் அபீதின் பென் அலியை விரட்டிய 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினமான  வரும் ஜனவரி 14 அன்று கோபம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென் அலி சர்வாதிகாரத்தின் ஒரு நெருங்கிய ஆதரவாளராய் இருந்திருந்த துனிசிய பொதுத் தொழிலாளர் சங்கம் (UGTT), சென்ற மாதத்தில், பொதுத்துறையில் இரண்டு ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விட நிர்ப்பந்திக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் துனிசியாவில் ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்புகள் சுற்றிவருகின்றன.
அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடைகள் அணிந்து நேற்று Béjaïa இல் ஒரு பேரணியில் பங்கேற்றது, முதலாளித்துவ ஊடகங்களில் கவலையைத் தூண்டியிருந்தது. “அல்ஜீரிய மக்களின் வாங்கும் சக்தியிலான ஒரேயடியான வீழ்ச்சியின் காரணத்திலான மகிழ்ச்சியற்ற சமூக சூழலை” குறிப்பிட்டு, Mondafrique,“ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் ஒரு முழுவீச்சிலான நெருக்கடிக்கு காரணமாகியுள்ளன. அது ஒரு சாத்தியமான பெரும்பாலும் உண்மையாக தொற்றும் நிலையில் இருந்து, அல்ஜீரியா பாதுகாப்புடன் இருக்கிறதா?”
ஆபிரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு பெருகும் ஐக்கியமும், சர்வதேசத் தொழிலாள வர்க்கமே பிரான்சில் மக்ரோனுக்கு எதிராக அணிதிரளுகின்ற தொழிலாளர்களது மிகப்பெரும் கூட்டாளியாகும் என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இருபதியொன்றாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் முதல் மிகப்பெரும் புரட்சிகர அணிதிரள்வு வட ஆபிரிக்காவில் இரண்டு சர்வாதிகாரிகளை வீழ்த்தி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகின்றன. இப்போது, பிரான்ஸ், துனிசியா மற்றும் பிராந்தியமெங்கிலும் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் பெருகுகின்ற நிலையில், வர்க்கப் போராட்டமானது புறநிலையாக ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தம் வெடிப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அத்தகைய ஒரு போராட்டத்திற்கு தயாரிப்பு செய்கின்ற மற்றும் ஒழுங்கமைக்கின்ற பணி தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் விடப்பட முடியாது. அவை பிற்போக்கான தேசிய அரசாங்கங்களை ஆதரிக்கின்றன, தொழிலாள வர்க்கத்தை தேசியரீதியாய் பிளவுபடுத்துகின்றன, அத்துடன் பிரான்சில் ஆரம்பத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு கடும் குரோதம் காட்டின. தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து விடுவிப்பதோடு, தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் 2011 புரட்சிகளைத் தொடர்ந்துவந்த காலத்தில் லிபியா, சிரியா மற்றும் மாலியில் இரத்தம்தோய்ந்த ஏகாதிபத்தியப் போர்களை வழிமொழிந்த அவற்றுடன் தொடர்புடைய நடுத்தர வர்க்கக் கட்சிகளுக்கும் எதிராய் தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகரத் தலைமையை வழங்க அதில் ஒரு மார்க்சிச அரசியல் முன்னணிப்படையை கட்டியெழுப்புவதே இதற்கு முதலாகவும் முதன்மையாகவும் அவசியமானதாய் உள்ளது.
வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது பிரான்சில் பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற நடுத்தர வர்க்க சக்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. பின்தொடர்ந்து ஆபிரிக்கா மீதான நேட்டோ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற 2011 லிபியப் போரை ”மனிதாபிமான” முயற்சி என வழிமொழிந்திருந்த அவை, சென்ற ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது இறுதிச் சுற்றில் மக்ரோனுக்கு எதிரான எந்த முன்னோக்கையும் வழங்குவதற்கு மறுத்து விட்டன. இப்போது, அவை “மஞ்சள் சீருடை” இயக்கத்தின் பரந்த அடுக்குகளால் நிராகரிக்கப்படுகின்றன, இயக்கத்தின் சில உறுப்பினர்கள் மெலோன்சோன் நீட்டிய உதவிக்கரத்தை, போய் “அவரது நண்பர் மக்ரோனை” பார்க்குமாறு கூறி நிராகரித்தனர்.
பிரான்சின் ஆர்ப்பாட்டக்காரர்களை சில வகையான தொழிற்சங்க பேச்சுவார்த்தைகள் மற்றும் மக்ரோனுடனான உடன்பாடுகளின் முன்னோக்குடன் —இந்த முன்னோக்கு ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது— கட்டிப்போடுகின்ற அவர்களது நோக்கமானது தொழிலாளர்களுக்கான ஒரு சிக்குபொறியாகும். மக்ரோன் நேற்று இரவு, ஆர்ப்பாட்டக்காரர்களை போராட்டத்தை கைவிடச் செய்ய முயற்சி செய்து வழங்கிய பயனற்ற ஒரு 13-நிமிட உரையை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்ததில் இது முன்னுக்கு வந்தது.
செல்வந்தர்களுக்கான வரிவெட்டுகளை திரும்பப் பெறப் போவதில்லை, வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களிலான ஆழமான வெட்டுக்களுக்கான திட்டங்களை கைவிடப் போவதில்லை, அல்லது ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒரு ஒடுக்குமுறைக்கு தான் பிறப்பித்திருக்கும் உத்தரவையும் தளர்த்தப் போவதில்லை என்பதை மக்ரோன் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னர் அவர், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் மாதம் 100 யூரோக்கள் (6.7 சதவீதம்) அதிகரிக்கவும், ஓய்வூதியதாரர்கள் மீதான வரி அதிகரிப்புகளை பகுதியாக திரும்பிப் பெறவும், மேலதிக வேலைநேர ஊதியங்களில் வரி வெட்டுகளை வழங்கவும் முன்வந்தார். இறுதியாக, புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாதத்திற்கும் அவர் விண்ணப்பித்தார், தேசிய அடையாளம் மற்றும் “மதச்சார்பின்மை” —இப்போது முஸ்லீம் பர்தாக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு குறியீட்டு வார்த்தையாக பயன்படுத்தப்படுகின்றது— ஆகியவை மீது ஒரு “முன்கண்டிராத” பொது விவாதத்திற்கு அவர் அழைப்புவிடுத்தார்.
முஸ்லீம்-விரோத இனவெறியை தூண்டும் ஒரு உத்தியோகபூர்வ கொள்கைக்கான இந்த ஆலோசனை பிரதானமாக போலிஸ் மற்றும் இராணுவரீதியான பரிசீலனைகளில் இருந்து உத்தரவிடப்படுகிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம், அதன் போர்களுக்குக் குறுக்கே வரக் கூடிய விதமாய் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க தொழிலாளர்களது ஒரு கூட்டுப் போராட்டத்தையோ, அல்லது சொந்த நாட்டில் அதன் போலிஸ் ஒடுக்குமுறைக்கு இடைஞ்சலாய் அமையும் விதத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஐக்கியப்படுவதையோ விரும்பவில்லை. மக்ரோனின் நவ-பாசிச விவாதத்தை உதாசீனம் செய்து நிராகரித்து விட்டு, அத்தனை இன மற்றும் மதங்களையும் சேர்ந்த தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்திற்கு விழைவதே தொழிலாளர்களுக்கு இருக்கின்ற முன்னோக்கிய பாதையாகும்.
“yellow vest” முகநூல் பக்கங்களில் கருத்துரைத்தவர்கள் பெரும்பாலும் மக்ரோனின் ஆலோசனையை நிராகரித்தனர், ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தபட்ச ஊதிய வேலைகளில் இருக்கிறார்களா, ஓய்வூதியதாரர்களா மற்றும் இன்னபிறவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களைப் பிளவுபடுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினர். மக்ரோனின்  உரைக்கு பெருவாரியான எதிர்ப்பு காட்டும் France en colère பக்கத்திலான ஒரு பதிவு, “பொறியில் சிக்க வேண்டாம்! இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர நம்மை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்துவதே அவரின் நோக்கமாய் இருக்கிறது! ஆகவே நம்மில் ஒவ்வொருவருக்கும் வெற்றி கிட்டும் வகையில் ஒன்றாய் நிற்போம் ஒன்றாய் தொடர்வோம்” என்று தெரிவித்தது.
பாரிஸ் நகர்மையப் பகுதியில் அடுத்த சனிக்கிழமையன்று ஒரு புதிய “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
By Alex Lantier
11 December 2018
https://www.wsws.org/tamil/articles/2018/12-Dec/vest-d12.shtml

Wednesday, 12 December 2018

பிரான்சின் “மஞ்சள் சீருடை” போராட்டங்களுக்கு முன்னோக்கிய பாதை எது?

Which way forward for France’s “yellow vest” protests?

Image source from Internet
னாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக நான்காவது சனிக்கிழமையாக “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பாரிய இயக்கம் எழுவது தெளிவாக புலப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத் தூண்டலாய் இருந்த பிற்போக்கான எரிபொருள் வரியேற்றத்தை மக்ரோன் திரும்பப் பெற்றமையானது எதனையும் தீர்க்க முடியவில்லை. “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்கள் மத்தியில், சமூக சமத்துவத்திற்கு, பெரும் ஊதிய அதிகரிப்புகளுக்கு, மக்ரோன் வெளியேற்றப்படுவதற்கு, பெரும் செல்வந்தர்களுக்கு தனிச்சலுகைகள் அகற்றப்படுவதற்கு, இராணுவவாதத்திற்கு ஒரு முடிவுகட்டுவதற்கு மற்றும் பொது வேலைநிறுத்தங்களுக்கும் ஒரு புரட்சிக்குமான கோரிக்கைகள் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டமையானது வர்க்கப் போராட்டத்தின் முடிவை, முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதியான வெற்றியை அல்லது வரலாற்றின் முடிவைக் குறித்ததாக கூறிய கூற்றுக்கள் எல்லாம் சுக்குநூறாகிக் கிடக்கின்றன. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் முதல் பெல்ஜியம், நெதர்லாந்து, பல்கேரியா மற்றும் பாஸ்ரா நகரத் தொழிலாளர்கள் நேட்டோவின் நவகாலனித்துவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக மஞ்சள் சீருடைகளை அணிந்து கொண்ட ஈராக் வரையிலும் பரவுகின்ற நிலையில், சர்வதேசத் தொழிலாள வர்க்கமானது வங்கிகளின் கட்டளைக்கு எதிரான போராட்டத்தில் மேலெழுந்து கொண்டிருக்கிறது.
சனிக்கிழமையன்றான பாரிய ஒடுக்குமுறையானது முதலாளித்துவ ஜனநாயகத்தின் குணாம்சத்தை எடுத்துக்காட்டும் ஒரு ஆழப்பதிகின்ற படிப்பினையாக இருந்தது: உண்மையான வெகுஜன எதிர்ப்பின் வெளிப்பாடு ஏதேனும் தோன்றி விட்டவுடனேயே, துப்பாக்கிகள் வெளிவருகின்றன. இராணுவ ஆயுதங்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் சகிதமாய் கலகத் தடுப்பு போலிஸ் நாளின் ஆரம்பத்தில் திரளத் தொடங்கியிருந்த அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அடைத்து நிறுத்தியதற்கும் தாக்குதல் நடத்தியதற்கும் பின்னர், பிரான்சின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே வன்முறையான மோதல்கள் வெடித்தன. முன்கண்டிராத அளவாக 1,385 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஒரு அதிமுக்கியமான கட்டத்தில் இருக்கின்றன. இந்த இயக்கம் செல்வந்தர்களது ஜனாதிபதியுடன் மட்டுமல்ல,  செல்வந்தர்களின் ஒட்டுமொத்த ஆட்சியுடனும் ஒரு மோதலைத் தூண்டியிருக்கிறது. மக்ரோனின் அடையாள விட்டுக்கொடுப்புகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களது மத்தியஸ்தத்திற்கான வாய்ப்பு, அல்லது ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியிடம் இருந்து ஒரு கூட்டணிக்கான ஆலோசனைகள் என அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்து பேச்சுவார்த்தைகளுக்கு வரும் தூதுகளை “மஞ்சள் சீருடை” இயக்கத்தின் முக்கிய தலைமை ஆளுமைகள் தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகப்பெருவாரியாக மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளனர்.
ஆயினும், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கோ மக்ரோனுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தினை நோக்கிய நோக்குநிலையோ இல்லாதபட்சத்தில், இந்த இயக்கம் பயனற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளாக சிதறிப் போகின்ற, அல்லது ஆளும் உயரடுக்கின் சூழ்ச்சிகளுக்கு கீழ்ப்படியச் செய்யப்படுகின்றதான அபாயம் இருக்கிறது.
அரசியல் தலைமை குறித்த பிரச்சினை மையமானதாகும். Commercy இல் இருப்பதைப் போன்ற சில “மஞ்சள் சீருடை” குழுக்கள், இயக்கத்தின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் மக்கள் குழுக்களை கட்டுவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது முக்கியமானதாகும். உருவாகிக் கொண்டிருப்பது, மிகவும் கரு வடிவில், ஒரு இரட்டை அதிகாரமாகும். பெரும் எண்ணிக்கையிலான கலகத் தடுப்பு போலிசின் பாதுகாப்புடன் நின்றுகொண்டிருக்கும் வங்கியாளர்களது’ அரசாங்கத்திற்கு எதிராக, போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் ஒழுங்கமைக்கின்ற தனித்தனியான மற்றும் எதிர்ப்பான ஸ்தாபனங்களின் ஒரு நிழலுரு தோன்றத் தொடங்குகிறது.
1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு சற்றுமுன்பாக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கு லியோன் ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பின் இன்றைய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இத்தகைய அமைப்புகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெவ்வேறு பிரிவுகளது வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஐக்கியப்படுத்த முடியும், அவை தனிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் விலைபேசப்படுவதில் இருந்தும் பாதுகாக்க முடியும், அத்துடன் தொழிலாளர்களது பரந்த எண்ணிக்கையினர் மத்தியிலான விரிந்த எதிர்ப்பு அணிதிரள்வதற்கான ஒரு புள்ளியை வழங்க முடியும். மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை முனைப்பிற்கு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாய் நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான ஒரு அடிப்படையை இது வழங்குகிறது.
இத்தகைய குழுக்கள் மட்டுமே “தொழிற்சங்கம் மற்றும் கட்சி எந்திரத்தின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிவகையாகும்” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். இது இன்று, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வசதியான நடுத்தர வர்க்கத்து அரசியல் கட்சிளது நச்சுத்தனமான குரோதத்திற்கு தொழிலாளர்கள் முகம்கொடுக்கிற நிலையில், மிக அத்தியாவசியமானதாகும். மக்ரோனுக்கும் அவரது செல்வந்தர்களது அரசாங்கத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தை முடக்குவதன் மூலமாக தமது தனிச்சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நப்பாசையுடன் இந்த சக்திகள் இருக்கின்றன.
பிரான்சில் இருக்கும் எந்தவொரு ஸ்தாபக அரசியல் போக்கும், புறநிலையாக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு சவாலை முன்நிறுத்தக் கூடிய இந்த “மஞ்சள் சீருடை” இயக்கத்திற்கு ஒரு முற்போக்கான விதத்தில் பதிலிறுக்கவில்லை. 1968 மேயில் நடுத்தர-வர்க்க மாணவர் தலைவராய் இருந்த டானியல் கோன்-பென்டிட் வெட்கமில்லாமல் இதனை பாசிசரீதியான இயக்கம் என்று அவதூறு செய்தார், ஜேர்மனியின் taz செய்தித்தாளிடம் அவர், “மஞ்சள் சீருடை இயக்கத்தின் மிகப்பெரும் பெரும்பான்மை பகுதி தேசிய முன்னணியில் இருந்து, அதிவலதுகளின் களஞ்சியத்தில் இருந்து வருகிறது” என்றார்.
ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் தலைவரான பிலிப் மார்ட்டினேசும் இதே விடயத்தையே மறைமுகமாகத் தெரிவித்தார், அவர் “மஞ்சள் சீருடையாளர்கள், நாங்கள் சகவாசம் கொள்ள முடியாதவர்கள்” என்றார். CGT, டிரக் ஓட்டுநர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை கைவிட்ட பின்னர், இப்போது டிசம்பர் 14 அன்று ஒருநாள் அடையாள இரயில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது.
நடுத்தர வர்க்க புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) "மஞ்சள் சீருடையாளர்களை” தொழிற்சங்கங்களின் பிடிக்குள் செலுத்துவதற்கு இந்த சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியைப் பயன்படுத்த நோக்கம் கொண்டிருக்கிறது. CGT கட்டுப்பாட்டின் கீழான ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்ள “மஞ்சள் சீருடையாளர்கள்” மார்ட்டினேசிடம் கேட்க அது அழைப்புவிடுத்தது: “போர்க்குணமுடைய சங்கங்களும் மஞ்சள் சீருடையாளர்களும் இந்த முன்னோக்கினை தேசிய தொழிற்சங்கத் தலைமைகளிடம் கேட்க வேண்டும் அல்லது இன்னும் திணிக்கவும் கூட செய்யலாம், டிசம்பர் 14 அன்று “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்திற்கான ஒரு உண்மையான பொது வேலைநிறுத்தத்துடன் இதனை ஆரம்பிக்கலாம்.”
ஆளும் வர்க்கம், இத்தகைய உத்திகளின் போர்வையின் கீழ், ஆர்ப்பாட்டக்காரர்களை தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறது. “ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் உலுக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதிய Journal du dimanche, ஆனால் சனிக்கிழமையன்றான போலிஸ் ஒடுக்குமுறை, “அரசாங்கத்திற்கு உத்திகளைக் கையாளுவதற்கான இடத்தை, ஒரு புதிய காற்றின் சுவாசத்தை அளித்திருக்கிறது” என்றது. பிரதமர் எட்வார்ட் பிலிப் சனிக்கிழமை இரவு அன்றான தனது சுருக்கமான உரையை “இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம்!” என்று கூறி நிறைவு செய்தார் என்ற உண்மையை அது பாராட்டியது.
மக்ரோனுடன் பயனற்ற, பிற்போக்கான உடன்பாடுகளை எட்டுவதை நோக்கி தங்களை கட்டிப்போட முயலுகின்றவர்கள் அனைவரின் மீதும் ”மஞ்சள் சீருடையாளர்கள்” கொண்டிருக்கும் முழுமையான அவநம்பிக்கை முழுக்க நியாயமானதாகும். வங்கிகளின் தாட்சண்யமற்ற பிரதிநிதியான மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுமில்லை; அதேபோல தேசிய நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் மக்களுக்காக சேவை செய்யக் கெஞ்சிக் கொண்டிருப்பது வெறும் ஏமாற்றத்தையே கொண்டுவரும்.
மக்ரோன் அரசாங்கத்திற்கும் வங்கிகளின் அதிகாரத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமே இன்றியமையாத பணியாகும். இந்த உலகளாவிய முதலாளித்துவம் மற்றும் சர்வதேச நிதி, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சகாப்தத்தில் இது, நிதிப் பிரபுத்துவத்தின் ஆபாசமான செல்வங்களை பறிமுதல் செய்வது, மற்றும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்ற ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு சர்வதேசப் போராட்டத்தை முக்கியப்படுத்துகிறது.
வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியால் முன்வைக்கப்படுகின்ற புறநிலைக் கடமைகளில் இருந்து பிறக்கும் வேலைத்திட்டம் இதுதான்: ஐரோப்பாவெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் பெருகும் சமூகக் கோபமும் வேலைநிறுத்த நடவடிக்கையும் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் வெடிப்பை நோக்கி நகர்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், மக்ரோனுக்கும், ஐரோப்பாவெங்கிலுமான இதேபோன்ற அரசாங்கங்களுக்கும் எதிரான ஒரு பொதுவேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் பணி, இத்தகைய இயக்கத்திற்கு குரோதமானதும் அதனை நடத்தி முடிக்கப் போவதில்லை என்னும் திண்ணமுடையவையுமான தொழிற்சங்கங்களின் பொறுப்பில் விடப்பட முடியாது. பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளது சூழ்ச்சிகளுக்கு எதிராய் ஒரு உண்மையான பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தில் அதற்கான அடிப்படையை உருவாக்கித் தருவதற்கும் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதே முன்னோக்கிய பாதை ஆகும்.
தொழிலாளர்களால் உருவாக்கப்படுகின்ற சுயாதீனமான அரசியல் அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதன் அவசியத்திற்காக வாதிடுவதே இந்த இயக்கத்தில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிற ஐரோப்பியப் பிரிவுகளது பாத்திரமாக இருக்கும். இந்த முன்னோக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிற்சாலைகளில், வேலையிடங்களில், பல்கலைக்கழகங்களில் மற்றும் பள்ளிகளில் சாத்தியமான அளவுக்கு விரிவாய் விவாதிக்கப்படுவதை PES ஊக்குவிக்கிறது.
Alex Lantier
10 December 2018

ஹூவாய் நிறுவன அதிகாரி மென்ங் வான்சொவ் கடத்தல்

The kidnapping of Huawei executive Meng Wanzhou

ரானுக்கு எதிரான அமெரிக்க தடையாணைகளை மீறியதாக அமெரிக்க வழக்குதொடுனர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மீது, சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஹூவாய் இன் துணை தலைவர் மென்ங் வான்சொவ், கனடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது புதனன்று தெரிய வந்த போது உலகம் அதிர்ந்து போனது. வாஷிங்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு கோரி வருகிறது.
இந்நகர்வுக்கும் "வர்த்தகப் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவது அப்பட்டமான பொய்களாகும், இந்நடவடிக்கையைப் பாதுகாக்கும் ஊடகங்களாலேயே கூட அவை நிராகரிக்கப்பட்டன. டிசம்பர் 1 அன்று மென்ங் கைது செய்யப்பட்டு, 60 ஆண்டுகளுக்கான தண்டனைகள் சாத்தியமாகக்கூடிய ஒருதலைபட்சமான மற்றும் மறைமுகமான குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டமை ஒரு கடத்தல் நடவடிக்கைக்கும் சற்று அதிகமானதொரு சம்பவத்திற்கு ஒத்திருக்கிறது.
அதன் கூட்டாளியின் நடவடிக்கையால் வெளிப்படையாகவே பதட்டமடைந்த பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ், அந்நகர்வை "ஆத்திரமூட்டலாக" குறிப்பிட்டதுடன், "நியாயமான சட்ட அமலாக்கம் இல்லாமல், அதன் அரசியல் பொருளாதார முனைகளைப் பின்தொடர்வதற்காக அமெரிக்க அதிகாரத்தினது பயன்பாடு" என்று அதை வர்ணித்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஓர் அடாவடித்தன நடவடிக்கையான அது, “கூட்டாளிகளுக்கும்" மற்றும் "எதிரிகளுக்கும்" ஒரு சேதியை அனுப்ப உள்நோக்கம் கொண்டுள்ளது: அதாவது, அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு செயல்படுங்கள் அல்லது உங்களுக்கும் மென்ங் இற்கு ஏற்பட்டதைப் போல அல்லது அதை விட மோசமானது ஏற்படும் என்பதாகும். அமெரிக்கா, அதன் புவிசார்அரசியல் நோக்கங்களைப் பின்தொடர்வதில், பொறுப்புகளைக் கைவிட்டு சர்வதேச சட்டத்தை மீறி, ஒரு தான்தோன்றித்தனமான அரசாக செயல்படுகிறது.
சர்வதேச கண்ணியத்தை சட்டமீறலை நோக்கி வழிநடத்தும் தலைமை வழிகாட்டியாக அது விளங்குகிறது, இது இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற வல்லரசு மோதல் மற்றும் குற்றகர நிலைமைகளை நினைவூட்டுகிறது. அமெரிக்கா அதன் மேலாதிக்க திட்டநிரலுக்கு ஒரு தடையாக கருதும் எந்தவொரு நாட்டின் மீதும் தன்னிச்சையாக மற்றும் சட்டவிரோதமாக தடையாணைகளை விதிப்பதுடன், பின்னர் அதன் கட்டளைகளை மீறும் நாடுகளைத் தண்டிக்க பயங்கரமான அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது.
ஆனால் மென்ங் கைது செய்யப்பட்ட செய்திகள் உலகை உறைய வைத்த பின்னர், அதற்கடுத்த நாள் காலை நியூ யோர்க் டைம்ஸ் மற்றொரு குண்டை வீசியது. அமெரிக்க-சீன வர்த்தக போரில் ஒரு "சமரசத்தை" எட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் டொனால்ட் ட்ரம்ப் இரவு விருந்தில் அமர்ந்திருந்த போது, முன்னொருபோதும் இல்லாத இந்த கைது நடவடிக்கை நடக்கப்பட இருப்பதைக் குறித்து அந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கவில்லை என்று அறிவித்தது.
அந்த கைது நடவடிக்கை குறித்து, ஜனநாயக கட்சி செனட்டர் மார்க் வார்னர் மற்றும் குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் புர், அத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன். ஆர். போல்டன் போன்ற பிரமுகர்கள் எச்சரிக்கைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்ற உண்மைக்கு இடையிலும், இது இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. அவர் ஏன் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கவில்லை என்று வினவிய போது, ஜி உடனான சந்திப்பில் ட்ரம்புடன் இருந்த போல்டன், காரணம் காட்டவியலாது என்று இவ்வாறு தெரிவித்தார்: நீதித்துறையிடமிருந்து வரும் அறிவிப்பு "ஒவ்வொன்றையும் நிச்சயமாக ஜனாதிபதிக்கு நாங்கள் தெரிவிப்பதில்லை,” என்றார்.
மென்ங் கைது செய்யப்பட்டமை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் எந்தவொரு சமரசத்திற்கான சாத்தியக்கூறையும் இல்லாது செய்துள்ளது. “நட்புறவு நாடுகளின் குழு, இணக்கத்திற்கு வருவது சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே கண்டறிந்தது. திருமதி. மென்ங் கைது செய்யப்பட்ட பின்னர், முன்நகர்வதற்கான இறுதிக்கெடு நேரம்குறித்து வெடிக்கும் வெடிகுண்டாக (Time bomb) தெரிகிறது,” என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது.
அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவிக்காமலேயே இதுபோன்றவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை நடக்கலாம் என்ற உண்மையானது, இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, ஒரு விடயத்தை அப்பட்டமாக தெளிவாக்குகிறது: அதாவது, சீனாவுடனான அமெரிக்க மோதல் ட்ரம்பின் தனிமனிதயியல்பு அல்லது அவரின் பிரத்தியேக முத்திரையான "அமெரிக்கா முதலில்" வெகுஜனவாதத்தின் விளைபொருள் அல்ல. அதற்கு பதிலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினது மட்டுமல்ல, மாறாக உளவுத்துறை அதிகாரத்துவத்தின், அத்துடன் முன்னணி சட்ட வல்லுனர்களின் நிரந்தரமான அல்லது "பின்புல" அரசைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவானது ட்ரம்பின் ஆக்ரோஷமான சீன-விரோத கொள்கைக்கு ஆதரவாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களது இணைய தணிக்கைக்கு முன்னணி ஆதரவாளராக நின்ற செனட்டர் வார்னர், இந்த கைது நடவடிக்கை குறித்த செய்திகளுக்கு விடையிறுக்கையில், அந்நடவடிக்கையைப் பின்வருமாறு பாராட்டினார்: “ஹூவாய்... நமது தேசிய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்பது சில காலமாகவே தெளிவாக இருந்துள்ளது.” அவர் தெரிவித்தார், “தடையாணைச் சட்டத்தை உடைத்ததற்காக, ட்ரம்ப் நிர்வாகம், ஹூவாயை முழு பொறுப்பாக்கும் என்று நம்புகிறேன்.”
ஜனநாயக கட்சிக்கு நெருக்கமான மற்ற பிரமுகர்களும் உடனடியாக அந்நகர்வைப் பாராட்டினர், சீனா மீது ட்ரம்ப் போதுமானளவுக்கு கடுமையாக இல்லை என்று கண்டிக்கும் அளவுக்கு அவர்கள் சென்றார்கள். “சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷத்தனத்திற்கு, நீண்டகாலமாகவே அமெரிக்க தலைவர்கள் போதுமானளவுக்கு விடையிறுக்க தவறிவிட்டார்கள்,” என்று நியூ யோர்க் டைம்ஸ்கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட் எழுதினார். “சீனாவை நோக்கிய அதிக போர்வெறி கொள்கையே அர்த்தமுள்ளது,” என்றார்.
டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய முன்று முன்னணி அமெரிக்க பத்திரிகைகளில் எதுவுமே வெள்ளை மாளிகையின் குற்றகரமான நடவடிக்கையைக் குறித்து ஒரு துளி விமர்சனத்துடன் ஒரேயொரு கட்டுரை கூட பிரசுரிக்கவில்லை.
இது அக்டோபர் 4 இல் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சீனா குறித்து ஒரு பிரதான கொள்கை உரையில் உச்சரித்த கோட்பாடுகளை, இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது, அந்த உரையை விமர்சகர்கள் சீனாவுடனான ஒரு புதிய "பனிப்போரின்" உதயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பென்ஸ் அவர் உரையில், பெய்ஜிங் அதன் "2025 சீனா தயாரிப்பு” திட்டத்தைக் கைவிட வேண்டுமென கோரியதுடன், அதை “தானியங்கி இயந்திரவியல், உயிரிதொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உளவுபார்ப்பு உட்பட உலகின் மிகவும் முன்னேறிய தொழில்துறைகளில் 90 சதவீதத்தை" கையகப்படுத்துவதற்கான முயற்சி என்று குறிப்பிட்டார்.
பென்ஸ் உரை வழங்கி ஒருசில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்தின் மீது பென்டகன் ஓர் ஆய்வை வெளியிட்டு, சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்ய அமெரிக்காவுக்கு ஒரு “ஒட்டுமொத்த சமூக” அணுகுமுறை அவசியப்படுவதாக வாதிட்டது.
முன்னாள் ட்ரம்ப் அரசியல் ஆலோசகரும் நவ-பாசிசவாதியுமான ஸ்டீவ் பானன், மென்ங் கைது செய்யப்பட்டதைச் சீனாவை எதிர்கொள்வதற்காக "அரசாங்கத்தின் ஒட்டுமொத்த" அணுகுமுறையின் பாகமாக பாராட்டினார். அவர் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், “ட்ரம்பின் கீழ்,” “இறுதியில், சீனாவை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க அரசு அதிகாரத்தின் மொத்த சக்தியும் முதல்முறையாக ஒன்று திரண்டு வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள்,” என்றார்.
சீனாவை நோக்கிய அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாடு எந்தவிதத்திலும் ரஷ்யா மற்றும் ஈரான் உடனான மோதலில் இருந்து ஒரு பின்வாங்கலை அர்த்தப்படுத்தாது. உண்மையில், பென்ஸ் சீனாவுடன் புதிய "பனிப்போர்" அறிவித்து இரண்டு மாதங்களில், வாஷிங்டன் அதன் மிகவும் ஆக்ரோஷமான ரஷ்ய-விரோத நடவடிக்கைகளில் இதுவரையில் இல்லாத சிலவற்றை மேற்கொண்டுள்ளது, ரஷ்யா உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குள் அதன் கூட்டாளியான உக்ரேன் போர்க்கப்பல்களைச் செலுத்துவதற்கு வாஷிங்டன் தூண்டிவிட்டதால், இருதரப்பிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடந்தது மற்றும் மத்திய-தூர அணுஆயுத தளவாடங்கள் (INF) சம்பந்தமான உடன்படிக்கையிலிருந்து அது விலகியது ஆகியவை அதில் உள்ளடங்கும்.
ஓர் அணுஆயுத சக்தியான சீனாவுக்கு எதிரான அவர்களின் போர் தயாரிப்பில், அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் சீனாவின் வளர்ச்சியைப் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருக்கும் ஓர் உயர்-தொழில்நுட்ப போட்டியாளராக மட்டும் அதை பார்க்கவில்லை, மாறாக அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும் ஒரு தடையாக பார்க்கிறது.
உலகம், 5ஜி என்றறியப்படும் அலைபேசி தொழில்நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது, இதன் ஆதரவாளர்கள் கருத்துப்படி, இது "இணைய பயன்பாட்டு சாதனங்கள்" என்றழைக்கப்படுவதில் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்பதோடு, அது இன்னும் மலிவாகவும், இன்றைய "மென்" சாதனங்களை விட கூடுதலாக பரந்தளவில் தகைமை கொண்டதாகவும் இருக்கும். 5ஜி தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட "சாதனங்களில்" வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் ஆலை தானியங்கி இயந்திரங்கள் மட்டுமல்ல, மாறாக போர் ஆயுதங்களும் இருக்கும், இவை தொலைதொடர்பு வலையமைப்புகளைத் துல்லியமாகவும் வேகத்துடனும் பயன்படுத்தும்.
5ஜி உள்கட்டமைப்பு வழங்குவதில் ஹூவாய் முன்னனி நிறுவனமாக உள்ளது, சீனாவை ஒதுக்கிக் தள்ளி, அமெரிக்கா அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்காக அதன் பொருளாதார, இராணுவ மற்றும் புவிசார் அரசியல் சக்தியின் அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்த முயன்று வருகிறது.
முக்கியத்துவத்தில் குறைவற்ற இரண்டாவது காரணி, உள்நாட்டு சமூக பதட்டங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு இடையே அரசுக்கான "சட்டப்பூர்வத்தன்மையின் நெருக்கடி" என்று அட்லாண்டிக் கவுன்சில் எதை குறிப்பிட்டதோ அந்த நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம், ரஷ்யா ஆகட்டும் அல்லது சீனா ஆகட்டும், ஒரு வெளிப்புற எதிரியை உருவாக்குவதை, வெடிப்பார்ந்த வர்க்க பதட்டங்களை வெளிப்புறத்திற்கு திருப்புவதற்கு ஒரு வழிவகையாக பார்க்கிறது. சமீபத்தில் டைம்ஸ் கட்டுரையாளர் லியோன்ஹார்ட் குறிப்பிட்டதைப் போல, அமெரிக்க பொதுமக்களுக்கான ஒரு "தெளிவான எதிரியை" உருவாக்க சீனாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இறுதியாக, அமெரிக்க தொழில்நுட்ப துறையைக் காப்பாற்றுவது மற்றும் அதன் உலகளாவிய ஏகபோகமயமாக்கல்களை விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, அமெரிக்க உளவுத்துறை எந்திரத்திற்குள் ஆழமாக அவை ஒருங்கிணைக்கப்படுவதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வார்னர் போன்ற பிரமுகர்களின் விருப்பத்திற்கிணங்க அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்ப்பு கண்ணோட்டங்கள் மீது பாரியளவில் தணிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் அமெரிக்க மக்கள் மீது வலை போன்று பரந்து விரிந்த கண்காணிப்புகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதற்கு கைமாறாக, அந்நிறுவனங்கள் இராணுவ, பொலிஸ் மற்றும் உளவுத்துறையின் கொழுத்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன, அதேவேளையில் ஹூவாய் போன்ற அவற்றின் போட்டியாளர்கள் அமெரிக்க அரசால் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டனின் நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமான விளைவுகளுடன் அச்சுறுத்துகிறது. சீனாவுக்கு எதிரான அதன் தாக்குதலில், அமெரிக்கா கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலக போருக்கு இட்டுச் சென்ற நிலைமைகளைத் தூண்டிவிட்டு வருகிறது.
Andre Damon
7 December 2018

Tuesday, 11 December 2018

6 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா போர்களுக்காக செலவிட்டுள்ளது

US has spent almost $6 trillion on wars since 2001

2001 ல் இருந்து கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா போர்களுக்காக செலவிட்டுள்ளது
By Trévon Austin
17 November 2018
பிரவுன் பல்கலைக்கழக, சர்வதேச மற்றும் பொது விவகாரத்திற்கான வாட்சன் கல்வி நிறுவனம் (Watson Institute of International & Public Affairs at Brown University) வெளியிட்ட ஒரு அறிக்கை, “பயங்கரவாதத்தின் மீதான போர்” குறித்து செலவிடப்பட்ட மொத்த தொகை , முன்பு கூறபட்டதை விட மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்த ஆய்வின் ஆசிரியரான, பேராசிரியர் நேட்டா சி. க்ராஃபோர்ட், 2019 ஆம் நிதி ஆண்டின் இறுதிக்குள்ளாக 9/11 க்குப் பிந்தைய போர்களுக்காக கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்கள் தொகையை செலவிடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இராணுவம், போர்களுக்காக 1.5 டிரில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது என பாதுகாப்புத் துறை (Department of Defense - DoD) மார்ச்சில் வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், பிரவுன் பல்கலைக்கழக அறிக்கை, ஏனைய கூட்டாட்சித் துறைகள் முழுவதிலுமான செலவின விபரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள DoD இன் புள்ளிவிபரங்கள் தவறிவிட்ட நிலையில், அதனை ஒரு வேண்டுமென்றே குறைத்துக்காட்டும் மதிப்பீடாக குறிப்பிடுகிறது. அத்துடன், இந்த புதிய மதிப்பீடு, உள்நாட்டு பாதுகாப்புத்துறை (Department of Homeland Security - DHS) செலவுகள், வரவு செலவுத் திட்ட அதிகரிப்புக்கள், மூத்த படையினருக்கான மருத்துவச் செலவுகள் போன்றவற்றை மட்டுமல்லாமல், போர்களுக்கான செலவினங்களுக்கான கடன்கள் மீதான வட்டியையும் உள்ளடக்கியதாக உள்ளது.
மறைமுக போர் செலவினங்கள் உட்பட, 2001 முதல் போர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4.6 டிரில்லியன் டாலர் அளவினதாக இருக்கும். மேலும் இந்த அறிக்கை, 9/11 க்குப் பிந்தைய மூத்த படையினரின் எதிர்கால பாதுகாப்பிற்காக 2059 ஆம் ஆண்டு வரையிலுமாக சுமார் 1 டிரில்லியன் டாலரை செலவிட அரசாங்கம் கடமைப்பட்டிருக்கும் எனவும் மதிப்பிடுகிறது. அதாவது, மொத்த தொகை 5.993 டிரில்லியன் டாலரை நெருங்கியதாக இருக்கும் என்பதாகும்.
அமெரிக்கா அதன் போர் மற்றும் தலையீடுகளை பெருமளவில் தொடர்வதை 2023 இல் நிறுத்திக் கொண்டாலும் கூட, இன்னும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அதற்கான கூடுதல் செலவினத் தொகை 808 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது. அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைகளை தொடரும் காலம் வரை மூத்த படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்ற காரணத்தால், தொகுக்கப்பட்ட செலவுகள் 6.7 டிரில்லியன் டாலரை விஞ்சி நிற்கும் எனவும் தெரிவிக்கிறது.
எங்குபோய் முடியும் என்று தெரியாத நிலையில், அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களுக்கான நிதி மற்றும் மனித இழப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா போர்களுக்காக செலவிடுவதில் பற்றாக்குறையை கொண்டிருக்கும் நிலையில் கடன் பெற்று அதற்காக நிதியளிக்கும் நிலையில் இருப்பதாக ஒரு குறிப்பிட்ட கவலையையும் சமீபத்திய ஆய்வு உருவாக்கியுள்ளது. 2011 இல், போர்களுக்கான செலவின ஒதுக்கீடுகள் 1.5 டிரில்லியன் டாலர் என இருந்திருக்குமானால், அதுவே வட்டியுடன் சேர்ந்து 7.9 டிரில்லியன் டாலராக பெருகி நிற்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த மதிப்பீட்டில் இருந்து போர் செலவினங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டிருந்தது என்பதுடன், பெருமளவில் கடன்களும் சேர்ந்துவிட்டன, எனவே இது, ஒரு வேண்டுமென்றே குறைத்துக்காட்டும் மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியும்.
9/11 முதலாக போர் தொடர்பான செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக பென்டகன் கூறியதை விடவும் மூன்று மடங்கு அதிகமானதாக, பெரியளவினதாக 5.9 டிரில்லியன் டாலர் மதிப்பீடு உள்ளது. DoD மதிப்பீடு செய்த 1.7 டிரில்லியன் டாலர் என்பது 2018 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் செலவு செய்யப்பட்டுவிடும், ஆனால் இந்த குறைந்த மதிப்பீடு போர் தொடர்பான ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டம் மற்றும் செவினங்களில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியதாகும்.
காங்கிரஸின் செலவின ஒதுக்கீடு பென்டகனின் மதிப்பீட்டை உள்ளடக்கவில்லை. ஏனைய போர் தொடர்பான செலவினங்களில், குறிப்பாக “வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் (overseas contingency operations - OCO)” போன்றவற்றில் செலவின அதிகரிப்பை காங்கிரஸ் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகளை OCO செலவு நேரடியாக ஆதரிக்கிறது. DoD உடன் சேர்ந்து, 2001 முதல், OCO செலவுகளில் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.
இன்னும் கூடுதலாக அளவிட முடியாத அளவிற்கு தொகை செலவிடப்பட்டுள்ளது, ஊட்டச்சத்து குறைபாடு, சேதமடைந்த உள்கட்டமைப்பு, மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற மறைமுக விளைவுகளால் பலமுறை நிகழ்ந்த அதிகபட்ச நிதி இழப்புக்களுடன் 370,000 உயிர்களின் நேரடி இழப்பும் போரில் நிகழ்ந்ததாக இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. சுமார் 200,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பேராசிரியர் க்ராஃபோர்ட், இன்னும் அதிகமானோர் பலியாகியிருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கின் காரணமாக இந்த மதிப்பீடுகள் அதை குறைத்துக் காட்டுவதாக தனது தனிப்பட்ட கருத்தைக் குறிப்பிடுகிறார்.
மேலும், “அவர்கள் கேட்கும் நிதி எந்த அளவினதாக இருந்தாலும், செலவைப் பற்றி கவலையில்லை, அத்துடன் இந்தச் செலவு தகுதி வாய்ந்ததா அல்லது விவேகமானதா என்பதைப் பொறுத்ததாகவும் அல்லாமல் பென்டகன் செலவு செய்யும் திறனுடன் இருப்பதாக மட்டும் கருதுவதாகவே “காங்கிரஸின்” மனப்பாங்கு கிட்டத்தட்ட உள்ளது” என்றும் க்ராஃபோர்ட் குறிப்பிடுகிறார்.
“பயங்கரவாதத்தின் மீதான போரில்” இருந்து வரும் மூத்த படையினரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும். மூத்த படையினர் விவகாரத் துறை (Department of Veteran Affairs), 2039 ல், மூத்த படையினரின் எண்ணிக்கை 4.3 மில்லியனாக உயரும் என்று மதிப்பிடுகிறது. அத்துடன், போரில் இருந்து கடுமையான காயங்களுடனோ அல்லது மனநிலை பாதிப்புக்களுடனோ பலரும் திரும்புவார்கள் என்ற நிலையில், நிதி தேவையும் சமுதாய எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மத்திய கிழக்குப் போர்கள், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்களது நாடுகளை விட்டு தப்பியோடும் நிலைக்கு தள்ளியதான மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. செலவழிக்கப்பட்ட அசாதாரண அளவிலான பெரும் தொகையுடன் சேர்த்து, வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் நடத்திய போர்கள் முதலாளித்துவத்தின் நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தொடர்ந்து முன்னேறுவதற்கு போரைத் தவிர வேறு வழியில்லை என்றே ஆளும் வர்க்கம் கருதுகிறது, ஆனால், அதன் விளைவு உழைக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரழிவுகரமானதாக இருக்கும் என்பதே உண்மை.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/cost-n24.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts