Search This Blog

Friday, 3 March 2017

அமெரிக்காவில் குடியுரிமைபெற்ற இந்தியரின் கொலைக்கு மக்கள் ஆவேச எதிர்ப்பு

Popular outcry against murder of Indian immigrant in US

சென்ற வாரத்தில் கான்சாஸ் மாநிலம் ஒலாத்தி இல் குடியேறிய இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த வெளிநாட்டவர் வெறுப்பு தாக்குதலை கண்டனம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியது குறித்தும் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளிலுமே மக்களின் கோபம் பெருகி வருகிறது.
இனத் துவேஷங்களை கக்கிய பின் Austin's Bar & Grill என்ற மதுபான விடுதியில் இருந்து வெளியேறும்படி அச்சுறுத்திவிட்டு, பின் ஒரு துப்பாக்கியுடன் திரும்பிய அம்மனிதனால், ஸ்ரீனிவாஸ் குச்சிபோத்லா என்ற 32 வயதான மென்பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார், சக இந்திய குடியேற்றவாசியான அலோக் மதாசனி காயப்படுத்தப்பட்டிருந்தார். சுடுவதற்கு முன்பாக, அந்த துப்பாக்கிதாரி, “எனது நாட்டில் இருந்து வெளியேறு” என்றும் “பயங்கரவாதி” என்றும் கத்தியிருந்தார். இந்த தாக்குதலில், அந்த துப்பாக்கிதாரியை கையாள முயன்ற இயான் கிரில்லாட் என்பவரும் காயமடைந்தார்.
அமெரிக்க கடற்படையில் முன்னர் பணியாற்றிய 51 வயதான ஆடம் பூரின்டன் பிப்ரவரி 22 துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு திட்டமிட்ட கொலை மற்றும் இரண்டு திட்டமிட்ட கொலைமுயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார்.
பாதிப்படைந்தவர்கள் முஸ்லீம்கள் என்றும் ஈரானில் இருந்து வந்தவர்கள் என்றும் பூரின்டன் நம்பியதாக குற்றத்தை கண்ணால் கண்டவர்கள் கூறினர். GPS தயாரிப்பு நிறுவனமான Garmin இல் குச்சிபோத்லா உடன் வேலைபார்த்திருந்தவரான மதாசனி, சுட்டவர் தங்களிடம், “நீங்கள் இப்போது என்ன விசாவில் இங்கே இருக்கிறீர்கள், சட்டவிரோதமாய் இங்கே தங்கியிருக்கிறீர்களா?” என்று கேட்டதாக  நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
சென்ற வாரத்தின் துயரகரமான நிகழ்வுகள் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தால் நச்சுத்தனமான புலம்பெயர்ந்தோர்-விரோத பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதன் பின்புலத்தில் நடைபெற்றுள்ளன. ஈரான் மற்றும் ஆறு முக்கிய முஸ்லீம் நாடுகளில் இருந்தான புலம்பெயர் மக்கள் மற்றும் பயணிகளைக் குறிவைத்தான ஒரு நிர்வாக உத்தரவு, புலம்பெயர்ந்தவர்களைக் கைதுசெய்வதற்கும் திருப்பியனுப்புவதற்கும் குடியேற்ற போலிசின் தன்னிச்சையான அதிகாரங்களை பரந்த அளவில் விரிவுபடுத்தியுள்ளமை, ஆவணமற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைக் குறிவைத்தான திடீர்சோதனைகளது ஒரு அலை, மற்றும் மொத்தம்மொத்தமான திருப்பியனுப்பல்கள் மற்றும் தடுப்பு முகாம்களுக்கான தயாரிப்புகள் ஆகியவை இந்தப் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளன.
தமது புலம்பெயர்ந்தோர் விரோத நரவேட்டை மற்றும் முஸ்லீம்-விரோத மற்றும் மெக்சிகன்-விரோத மனோநிலையை தூண்டிவிடுவது ஆகியவற்றுக்கும் வெறுப்புமிகுதியினால் விளையும் குற்றங்களில் ஏற்பட்டிருக்கும் கூர்மையான அதிகரிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதாக ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாய் மறுத்திருக்கிறது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலரான சீன் ஸ்பைசர், சென்ற வாரத்தில் பேசும்போது, கான்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் முஸ்லீம்கள், யூதர்கள், மற்றும் புலம்பெயர்ந்தவர்களை குறிவைத்தான வன்முறையான தாக்குதல்களுக்கு ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் “வாய்வீச்சு” “ஏதோவொரு வகையில் பங்களித்திருக்கலாம்” என்பதான ஒரு செய்தியாளரின் சூசகக்குறிப்பை ஒரேபேச்சில் சுருக்கமாய் நிராகரித்தார். “இடைத்தொடர்பு எதுவும் இருப்பதாகக் கூறுவது....சற்று அபத்தமானது” என்று ஸ்பைசர் கூறினார்.
ஆயினும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் உழைக்கும் மக்கள் அதிலிருக்கும் தொடர்பை மேலும் மேலும் கண்டு வருகின்றனர் என்பதோடு கான்சாஸ் கொலை தொடர்பாக ட்ரம்ப்பின் கவனத்துக்குரிய மௌனத்தையும் குறித்துக் கொண்டிருக்கின்றனர்.
ட்ரம்ப்பின் இந்திய சமதரப்பான பிரதமர் நரேந்திர மோடி குச்சிபோத்லாவின் கொலையைக் கண்டனம் செய்யத் தவறியிருப்பதும் அதேஅளவுக்கு அரசியல்ரீதியாய் தோலுரித்துக் காட்டுவதாய் இருக்கிறது.
மோடி அமெரிக்காவில் பெருகிச் செல்லும் இந்தியக் குடியேற்ற மக்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவராக எப்போதும் பெருமையடித்து வந்திருக்கிறார் என்பதுடன் “பயங்கரவாதத்தின்” கடுமையான எதிரியாகவும் தன்னைக் காட்டி வந்திருக்கிறார். ஆயினும் கூட ஒலாத்தி இல் இந்தியக் குடியேற்றத்தினரைக் குறிவைத்து நடந்த இந்த பயங்கர தாக்குதல் குறித்து அவர் எதுவொன்றும் சொல்லியிருக்கவில்லை. அதேபோல, இந்தியா 175 மில்லியன் முஸ்லீம்களுக்கு தாயகமாக, உலகில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்ற போதிலும் கூட, முஸ்லீம் நாடுகளைக் குறிவைத்து ட்ரம்ப் கொண்டுவந்திருக்கும் பாகுபாடான பயணத் தடை குறித்தும் இந்தியப் பிரதமர் மோடி மௌனமாகவே இருந்து வருகிறார்.
மோடியின் பாரதிய ஜனதா கட்சி முஸ்லீம்-விரோத இந்து பேரினவாதத்திற்கு இழிபுகழ் பெற்றதாகும். ஆயினும், ட்ரம்ப்பின் முஸ்லீம்களுக்கான தடை மற்றும் ஒலாத்தி தாக்குதல் ஆகிய விவகாரங்களில் மோடி அமைதி காப்பதன் பிரதான காரணம், ட்ரம்ப் நிர்வாகத்தை சங்கடப்படுத்தக் கூடிய அல்லது பகைமைப்படுத்தக் கூடிய எந்தவொன்றையும் செய்துவிடக் கூடாது என்பதில் அவர் கொண்டிருக்கும் தீர்மானமான உறுதியே ஆகும். மோடியின் கீழும், மற்றும் இந்திய பெருவணிகத்தின் உற்சாகமான ஆதரவுடனும், இந்தியா அமெரிக்காவுடனான தனது இராணுவ-பாதுகாப்பு கூட்டை மிகப்பெருமளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. இந்திய ஆளும் உயரடுக்கானது, தமது வல்லரசு அபிலாசைகளுக்கு ஊக்கம்பெறுகின்ற நம்பிக்கைகளில், இந்தியாவை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலிலான ”முன்னிலை” அரசாக பொறுப்பற்ற வகையில் உருமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் முன்முனையாக செயல்படுவதாய் குற்றம்சாட்டப்படும் அமெரிக்க ஏழாவது கப்பற்படை (US Seventh Fleet) என்ற அமெரிக்க கடற்படையின் அங்கத்திற்கு பராமரிப்பு மற்றும் பழுதுநீக்க மையமாக இந்தியா ஆகவிருப்பதை சென்ற மாதத்தில் பென்டகன் வெளிப்படுத்தியது.
எப்படியிருந்தபோதிலும், ஒலாத்தி இன் பயங்கர நிகழ்வுகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி ட்ரம்ப் நிர்வாகம் குரோதத்தை கிளறி விடுவது ஆகியவை குறித்த வெகுஜன கோபம் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் பிரச்சினையாக நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஆவேச எதிர்ப்பு பெருகிச் செல்லும் நிலையில், வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் ஊடகச் செயலரான பிரதிக் மாத்தூர், குச்சிபோத்லா கொலை குறித்து ஆழமான கவலையை வெளிபடுத்துகின்ற மற்றும் ஒரு “துரித விசாரணை”யை மேற்கொள்வதற்கு அமெரிக்க அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்கின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஒலாத்தி இல் நடந்த பயங்கரத் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு தூதரகரீதியான எதிர்ப்பை புதுடெல்லி விநியோகித்திருந்ததாக ஊடகங்களில் வந்த தகவல்களை நேற்று இந்திய அதிகாரிகள் அவசரஅவசரமாய் மறுத்தனர். அமெரிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்திருந்ததால் அப்படியொரு நடவடிக்கைக்கு “அவசியமில்லாமல்” இருந்ததாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளரான கோபால் பக்லே கூறினார். “அரசாங்கத்தின் தலைமை முன்னுரிமையை தொடர்ந்து பெற்றுவரக் கூடிய ஒரு விவகாரமான, அமெரிக்காவில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அதிகமான கவலை என்ற விடயத்தில், அமெரிக்க அதிகாரிகள் எங்களுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும்” என்று பக்லே திட்டவட்டம் செய்தார்.
உண்மையில், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்ற பாரிய வேலைவாய்ப்பற்ற நிலை, வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக வறுமை ஆகியவற்றுக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிகடாக்கள் ஆக்குவது மற்றும் அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தை கட்டியெழுப்புவதை நியாயப்படுத்துவது ஆகிய இந்த இரண்டு நோக்கங்களுக்காகவும் தனது புலம்பெயர்-விரோத நரவேட்டையை இன்னும் நெருக்கி முன்தள்ளுவதற்கே ட்ரம்ப் நிர்வாகம் முழுமையாக நோக்கம் கொண்டிருக்கிறது.
அமெரிக்க முதலாளிகள் உயர்திறன் படைத்த வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிகமாக பணியமர்த்திக் கொள்ள வசதிதருகின்ற எச்1பி விசா வேலைத்திட்டத்தை (H1B Visa program) மிகப்பெருமளவில் குறைப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் கொண்டிருக்கக் கூடிய திட்டங்களின் பிரதான பலிகளாக நிச்சயமாக இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே இருக்கின்றனர்.
குச்சிபோத்லாவின் கொலைக்கு இந்திய அரசாங்கம் காட்டுகின்ற உணர்ச்சியின்மையும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு அது காட்டும் ஆர்வமும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களின் மனோநிலைக்கு நேரெதிரான நிலையைக் குறித்து நிற்கிறது. இரண்டு நாடுகளிலுமே, கோபம் பெருக்கெடுத்திருக்கிறது, அதன் பெரும்பகுதி ட்ரம்புக்கு எதிரானதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவானதாகவும் வெளிப்பட்டிருக்கிறது.
திங்கள் வரையான நிலவரப்படி, ஒலாத்தி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நிதிதிரட்டுவதற்காக குச்சிபோத்லாவின் முன்னாள் சகா ஒருவர் மூலம் தொடக்கப்பட்டிருந்த GoFundMe பிரச்சாரம் ஒன்றிற்கு 8,000க்கும் அதிகமான பேர் 1.25 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் பங்களித்திருந்தனர். கான்சாஸ் சிட்டி ஸ்டார் தகவலின் படி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஞாயிறன்று அங்கு நடந்த ஒரு அமைதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர்.
குச்சிபோத்லா பிறந்து வளர்ந்த இடமும் அவரது குடும்பம் வசித்து வரும் இடமுமான தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. ஹைதராபாத்தில் நேற்று நடந்த அவரது இறுதி ஊர்வலம் பகுதியாக ஒரு அரசியல் எதிர்ப்புப் பேரணியாவும் இருந்தது, பங்குபெற்றவர்களில் பலரும் “ட்ரம்ப் ஒழிக” “இனவாதம் ஒழிக” ஆகிய முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததோடு அவற்றை முழக்கமாகவும் எழுப்பினர்.
மோடி அரசாங்கத்தைப் போல அல்லாமல், ஒலாத்தி சம்பவத்திற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத நரவேட்டைக்கும் இடையிலான தொடர்பை இந்திய ஊடகங்களின் சில பகுதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. பிப்ரவரி 27 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான “வெறுப்பின் விலை” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கம், “தங்களது தேர்தல் பிரச்சாரம் முழுமையிலும் அமெரிக்காவிலான வெள்ளை தேசியவாதப் போக்குகளது செங்கனல் நெருப்புகளை விசிறி விட்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அவரது அரசியல் கூட்டாளிகளும் [குச்சிபோத்லாவின்] கொலை எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்” என்றது. ஒலாத்தி துப்பாக்கிச்சூடு “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புலம்பெயர்-விரோத நடவடிக்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சாமல் இருக்க முடியாது” என்ற தி இந்து பத்திரிகை அதனைக் கண்டிக்கத் தவறிய ட்ரம்பை கண்டனம் செய்தது. ”கான்சாஸ் துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் புண்ணாகி வருகின்ற சமூக-பொருளாதார குழப்பத்திற்கு ஹைதராபாத்தின் பொறியாளர் ஒருவர் பலியானார்” என்ற தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு தலையங்கம், “அமெரிக்கர்களிடம் இருந்து வேலைகளை ‘திருடுவதாக’ இந்தியர்கள் மீது குற்றம்சாட்டுவது ஒபாமா நிர்வாகத்தின் காலத்திலும் இருந்தது” என்று குறிப்பிட்டது.
இந்திய ஊடகங்களின் கருத்துக்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதி-வலதுசாரி திட்டநிரலானது இந்திய-அமெரிக்க மூலோபாயக் கூட்டணிக்கு வெகுஜன எதிர்ப்பைத் தூண்டி விட்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வருவாய்க்கான மிகப்பெரும் மூலவளமாக இருந்துவரக் கூடிய அமெரிக்க செயல்பாடுகளுக்கு குந்தகத்தை விளைவித்து விடுமோ என்ற அவற்றின் கவலைகளை எடுத்துக்காட்டுவனவாய் இருக்கின்றன.
இந்தியாவின் பிரதான ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), குச்சிபோத்லாவின் மரணத்தை “கையிலெடுத்து” ட்ரம்ப் நிர்வாகத்திடம் பேசுவதற்கும் “இதுபோன்ற சம்பவங்கள் இனிமீண்டும் நடவாது என்ற உத்தரவாதத்தை” அதனிடமிருந்து பெறுவதற்கும் மோடியை வலியுறுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. CPM நீண்டகாலமாகவே இந்திய முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதால், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுவதற்கு இந்திய மற்றும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அது விண்ணப்பம் செய்யவில்லை என்பதிலோ, அல்லது ஏன் மோடி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான கூட்டணியை அடியொற்றி, இந்தியக் குடியேற்ற மக்கள் மீதான ஒரு கொலைவெறி மிக்க, வெளிநாட்டவர்வெறுப்பு தாக்குலைக் குறித்து மிகவும் கவனத்துக்குரிய மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறார் என்பதை அது அம்பலப்படுத்தவில்லை என்பதிலோ ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.
By Wasantha Rupasinghe
1 March 2017

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts