w e l c o m e - ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு (1917-2017) - சர்வதேச இணையவழி தொடர் - மார்ச் 11, மார்ச் 25, ஏப்பிரல் 22 மற்றும் மே 6 - இன்றே பதிவு செய்யுங்கள்

Search This Blog

The Struggle of Maruti Suzuki Auto Workers

The Struggle of Maruti Suzuki Auto Workers
Thirteen sentenced to life imprisonment in India Free the framed-up Maruti Suzuki workers!

Saturday, 29 November 2014

எண்ணெய் விலை போரில் OPECஇன் முடிவு ஒரு பலத்த அடியாகும்


image taken from internet
வூதி அரேபியா தலைமையில் உள்ள சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பான OPECஇன் நேற்றைய அறிவிப்பு, அதாவது சரிந்து வரும் எண்ணெய் விலைகளை முகங்கொடுத்துள்ள நிலையில் உற்பத்தியைக் குறைக்கப் போவதில்லை என்ற முடிவு, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் சாத்தியமான முக்கிய துணை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், எரிசக்தி தொழில்துறையின் மீது ஒரு கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

OPEC நாளொன்றுக்கு 30 மில்லியன் பேரல்கள் அளவுக்கு உற்பத்தியை பராமரிக்க வேண்டும் என்ற செய்தி வந்த உடனேயே, எண்ணெய் விலை கூடுதலாக 8 சதவீதம், பேரலுக்கு சுமார் 70 டாலர்கள் என்றளவிற்கு சரிந்தது. இது ஜூன் மாதத்திற்குப் பின்னர், மொத்த வீழ்ச்சியை ஏறத்தாழ 40 சதவீதத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

சரிவடைந்துவரும் எண்ணெய் விலை இரண்டு காரணிகளின் ஒரு விளைபொருளாகும்: ஒன்று ஷெல் வாயு அகழ்விலிருந்து அமெரிக்க உற்பத்தி அதிகரிக்கப்பட்டமை, அடுத்தது, சரிந்துவரும் வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தின் பெரும்பகுதியில் நிலவும் தேக்கநிலை, இது தேவை குறைவுக்கு இட்டுச் சென்றுள்ளது. விலை வீழ்ச்சி சவூதி தலைமையிலான நடவடிக்கையுடன் சேர்ந்து கொள்கிறது, அந்நாடு தெளிவாக அமெரிக்க ஷெல் எண்ணெய் தொழில்துறைக்கு குழிபறிக்க திரும்பியுள்ளது.

இந்த முடிவின் மிக உடனடி விளைவுகள் வெனிசூலா, அல்ஜீரியா மற்றும் ஈரானில் உணரப்படும், இவையனைத்தும் OPEC நாடுகள், அந்த அரசாங்கங்களின் வருவாய்கள் பேரலுக்கு சுமார் 100 டாலர்கள் என்றளவில் இருப்பதைச் சார்ந்துள்ளன, 2011இல் இருந்து ஜூனில் வீழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வரையில் அவை அதில் தான் தங்கியிருந்தன.

வெனிசூலாவும் அல்ஜீரியாவும் நாளொன்றுக்கு சுமார் 2 மில்லியன் பேரல்கள் அளவுக்கு OPEC உற்பத்தியை வெட்ட வேண்டுமென அழுத்தம் அளித்து வந்தன.

ஒரு OPEC உறுப்பு நாடல்லாத ரஷ்யாவும் கடுமையாக பாதிகப்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. அதன் பொருளாதாரம் மீதான தடைகள் அதற்கு குறிப்பிட்டளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் சேர்ந்து, ரஷ்யா அதன் வரவு-செலவு திட்டத்தை சமநிலையில் வைத்திருக்க, அதற்கு எண்ணெய் விலை பேரலுக்கு $80 மற்றும் $100க்கு இடையே இருப்பது அவசியமாகிறது.

விலை வீழ்ச்சிக்கு சவூதி காட்டிய எதிர்நடவடிக்கை, 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக இருந்த அதன் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். அப்போதும் அங்கே எண்ணெய் விலைகள் சரிந்து வந்தபோது, அது உற்பத்தி வெட்டுக்களைச் செய்யும் வழியில் வழிநடத்திச் சென்றது, அதன் விளைவாக 2011இல் விலைகள் பேரலுக்கு 100 டாலரை கடந்து உயர்ந்தன.

அப்போதிருந்து எரிசக்தி சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, அதை ஒரு எரிசக்தி இறக்குமதியாளர் சந்தையிலிருந்து பெரிதும் வெளியே கொண்டு வந்துள்ளது. 2005இல் 60 சதவீதமாக இருந்த இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க திரவ எரிபொருள் இறக்குமதி நுகர்வு 21 சதவீதம் மட்டுமே இருக்குமென அனுமானிக்கப்படுகிறது.

ஆனால் எண்ணெய் விலைகள் பேரலுக்கு சுமார் 80 டாலருக்கு அதிகமாக இருந்த போதுதான், அந்த விலையுயர்ந்த ஷெல் எண்ணெய் அகழ்வு தொழில்துறையின் விரிவாக்கம் அதிகரிக்கப்பட்டது. விலைகள் அந்த மட்டத்திற்குக் கீழே வீழ்ச்சி அடைய தொடங்கினால், சிறிய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

சந்தை ஆய்வாளர்கள் பலருடைய கருத்துப்படி, விலையை உயர்த்துவது மேற்கொண்டும் அமெரிக்காவின் உற்பத்தியை அதிகரிக்க மட்டுமே செய்யுமென்று கருதியதால் தான் சவூதியர்கள் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுக்கவில்லை. அமெரிக்கா உற்பத்தியை அதிகரிப்பதென்பது உலகளாவிய சந்தைகளில் OPEC அதன் பங்கை இன்னும் அதிகமாக இழக்கச் செய்கிறது.

உண்மையில், அமெரிக்க தொழில்துறையைப் பாதிக்கச் செய்வதற்காக மேற்கொண்டும் விலையைக் குறைக்கும் அதிரடி நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இது இரும்பு எஃகு சந்தையில் பின்பற்றப்படும் ஒரு தந்திரோபாயமாகும், அத்துறையில் BHP-பில்லிடன் மற்றும் ரியோ டின்டோ போன்ற மலிவு-விலை உற்பத்தியாளர்கள், சந்தை வீழ்ச்சி அடைந்து வரும்போதும் கூட, விலையுயர்ந்த உற்பத்தியாளர்களைத் தடுக்க நிர்பந்திக்கும் நம்பிக்கையில், உற்பத்தி அளவுகளை உயர்த்தி வருகின்றன.

அந்த முடிவு குறித்த பல கருத்துரைகளில், சவூதி நடவடிக்கைகளின் ஆக்ரோஷமான உள்நோக்கமே மையப்புள்ளியாக இருந்தது. அங்கே குறைந்தபட்சம் $60க்கு குறைந்தாலுமே கூட, அந்தவொரு சந்தை விலையையும் OPEC ஏற்க வேண்டி இருக்குமென குவைத் எண்ணெய் மந்திரி அலி சலாஹ் அல்-ஒமெர் தெரிவித்தார்.

ஏனையவர்கள் அதையும் விட அதிகமாக அப்பட்டமாக இருந்தனர். “வரவிருக்கும் ஆண்டுகளில் $80க்கு கூடுதலான விலையில் இன்னும் ஸ்திரமாக அமைப்பதற்காக, குறுகிய காலத்திற்கு பேரலுக்கு $60 என்றளவுக்கு எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டியிருக்கிறதென்ற யோசனையை சவூதி அரேபியா கொண்டு செல்கிறது என்று தான் இதை நாம் விளக்கப்படுத்துகிறோம்," பெட்ரோமேக்ஸ் கன்சல்டன்சியின் ஓலிவர் ஜேகோப் ராய்டருக்குத் தெரிவித்தார். “வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் அபிவிருத்தி திட்டங்களை மெதுவாக்குவதற்காக சிறிது காலத்திற்கு OPEC எண்ணெய் விலைகளைக் குறைத்து வைக்கும் ஆர்வத்தில் இருக்க வேண்டும்."

OAO Lukoilஇன் துணை தலைவரும், ரஷ்ய எண்ணெய் நிறுவன வர்த்தக அதிபருமான லியோனிட் ஃபெடுன் கூறுகையில், OPEC கொள்கை அமெரிக்க ஷெல் தொழில்துறையின் ஒரு பொறிவை உறுதிப்படுத்தும். பேரலுக்கு சுமார் $70 என்ற இன்றைய விலையில் அகழ்ந்தெடுப்பதென்பது பல உற்பத்தியாளர்களை இலாபமில்லா நிலைமைக்கு நெருக்கமாக கொண்டு வருவதாக தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், OPECஇன் நோக்கமே "அமெரிக்க சந்தையைத் துடைத்தழிப்பது தான்", அங்கே ஷெல் வளர்ச்சி டாட்.காம் குமிழிக்கு நிகராக உள்ளது என்றார்.

பேரலுக்கு 80 டாலரை விட குறைந்த விலையில் இருந்தால் அமெரிக்காவில் உள்ள 12 மிகப்பெரிய ஷெல் எண்ணெய் பேசின்கள், அதாவது சுமார் 80 சதவீதம், பெரிதும் இலாபமற்றதாகிவிடும் என்று ஜேபி மோர்கன் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் ஓர் ஆய்வு அறிவித்திருந்தது.

எவ்வாறிருந்த போதினும், உயர்செலவு கொண்ட அமெரிக்க ஷெல் உற்பத்தியாளர்களைத் துடைத்தெறியும் முனைவு, உலகளாவிய நிதியியல் சந்தைகளில் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். அமெரிக்காவினது எரிசக்தி திட்டங்களுக்கு பெருமளவில் உயர்-அபாய அல்லது பெருமதிப்பற்ற கடன்பத்திர (junk bonds) வெளியீடுகளில் இருந்து நிதியளிக்கப்பட்டுள்ளன. 2010இல், எரிசக்தி பொருட்களது நிறுவனங்கள் அமெரிக்க உயர் இலாப குறியீட்டு பட்டியலில் 18 சதவீதமாக இருந்தன, இது துணை முதலீடு தரத்தில் கடன் பெறுபவர்கள் என்றழைக்கப்படுபவர்களை அளவிடுவதாகும். அகழ்வு நிறுவனங்கள் வாங்கிய பாரிய கடன்களின் விளைவாக இன்று அவை 29 சதவீதமாக உள்ளன.

எண்ணெய் விலைகள் பேரலுக்கு 60 டாலர் அளவுக்கு வீழ்வது பெரிதும் சாத்தியமாக கூடியதே என்ற நிலையில், அவ்வாறு நிகழ்ந்தால், அங்கே அமெரிக்க கடன் பெறுவோர் சிலரின் மத்தியில் அதிகபட்சமாக 30 சதவீதம் அளவுக்கு வாராக்கடன் விகிதம் (default rate) ஏற்படக்கூடுமென ஜேர்மன் வங்கியின் ஆய்வு எடுத்துக்காட்டியது.

பிரிட்டிஷ் Telegraphஇல் இந்த மாத தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கை இவ்வாறு எச்சரித்தது: “அமெரிக்காவில் அதிக எண்ணெய் வழங்குவதற்காக நெருக்கித் தள்ளிக்கொண்டு ஓடிய ஓட்டம், பயங்கர கொந்தளிப்பு மிகுந்த பிரிவான பெருநிறுவனங்களுக்கான கடன்வழங்கு சந்தையில் ஓர் அபாயகரமான கடன் குமிழியை உருவாக்கி உள்ளது, அது உலகின் அந்த மிகப்பெரிய பொருளாதாரத்திற்கு ஒரு பரந்த அமைப்புரீதியிலான அபாயத்தை முன்னிறுத்தக்கூடும்."

பிரதான வங்கிகள் மீது எண்ணெய் விலை வீழ்ச்சியின் தாக்கத்திற்கு சான்று, நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்தது. “எண்ணெய் விலையின் கடுமையான வீழ்ச்சி எவ்வாறு அந்த பரந்த பொருளாதாரத்தின் மூலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கு அறிகுறியாக,” இரண்டு பிரதான வங்கிகள், பார்க்லே மற்றும் வேல்ஸ் ஃபார்கோ ஆகியவை, “இரண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு அளித்த $850 மில்லியன் கடன்கள் மீது சாத்தியமான அளவுக்கு கடுமையான இழப்புகளை" முகங்கொடுக்கின்றன என்று அது எழுதியது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லின்ச் உயர்-இலாப குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 இடர்பாட்டில் சிக்கியுள்ள பத்திரங்களில், சுமார் 52, அல்லது சுமார் 29 சதவீதம், எரிசக்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருந்தன என்பதையும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

உலகின் எஞ்சிய பகுதிகள் தேக்கநிலையையோ அல்லது பின்னடைவையோ அனுபவித்து வருகின்ற அதேவேளையில், அமெரிக்க பொருளாதாரம், ஆக்கபூர்வமாக மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக, எவ்வாறு பலத்தோடு முன்னோக்கி செல்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவில் ஷெல் எண்ணெய் உற்பத்தி உயர்வு புகழ்ந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மற்றொரு பிரதான நிதியியல் நெருக்கடிக்கு ஆதாரமாக திரும்பக் கூடும்.

By Nick Beams 
28 November 2014
http://www.wsws.org/tamil/articles/2014/nov/141129_ope.shtml

Friday, 28 November 2014

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது

Sri Lankan SEP to contest presidential election
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), 2015 ஜனவரி 8 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது. எமது வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன ஆவார். அவர், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடுவதில் நீண்ட கொள்கைப் பிடிப்பான வரலாற்றைக் கொண்ட ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஆவார்.

உலகப் போர் அபாயத்துக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அவற்றைச் சூழ தொங்கிக்கொண்டிருக்கும் போலி இடதுகளுக்கும் எதிராக, இந்த தேர்தலில் சோசலிசத்துக்காகவும் தொழலாள வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகள், ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியை பாதுகாப்பதிலும் மற்றும் அதற்காக வக்காலத்து வாங்குவதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.

தாமதமானால் தனது ஆதரவு மேலும் சரிந்துவிடும் என்று அஞ்சி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர் பிரிவினர் மத்தியில் பரந்த அளவில் சீற்றம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

மிகுந்த பதட்டமான அரசியல் சூழ்நிலையிலேயே ஜனவரி 8 தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையையும் சீனாவுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புகளையும் உக்கிரமாக்கியுள்ள நிலைமையில், கொழும்பில் உள்ள ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், வாஷிங்டனுடன் நெருக்கமான உறவைப் பேணுமாறும் பெய்ஜிங்குடன் இராஜபக்ஷ ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளை முறித்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கின்றன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்ததோடு தான் “எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக” இராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) செயலாளராகவும் இருந்த சிறிசேனவுடன் இன்னும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். அரசாங்க உறுப்பினர்கள் மத்தியில் கொந்தளிப்பை பெரிதுபடுத்துவதற்காகவும் மேலும் பலரை வெளியேறச் செய்வதற்காவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூஎன்பீ) முன்கூட்டியே இந்த நகர்வு தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடந்த வாரம் வரை பாதுகாத்த சிறிசேன, திடீரென நாட்டில் “மூடிமறைக்கப்பட்ட சர்வாதிகாரம்” நிலவுவதாக கண்டனம் செய்து, “மோசடி, ஊழல் மற்றும் அநியாயங்களும் செல்வாக்குச் செலுத்துவதாக” பிரகடனம் செய்தார். அவரது கருத்துக்கள், பெய்ஜிங் உடனான உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்ட வாஷிங்டனின் போலி “மனித உரிமைகள்” பிரச்சாரத்தின் வழியில் முழுமையாக நிற்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் அமெரிக்க ஈடுபாட்டிற்கான ஆதாரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளின்டன் மன்றத்தில் செயற்படும் அவர், சிறிசேன ஒரு ஜனாதிபதி போட்டியாளராக திடீரெனத் தோன்றுவதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

கொழும்பில் நிலவும் அரசியல் நெருக்கடியானது, ஏகாதிபத்திய சதிதிட்டங்களிலும், மற்றும் 2008 பூகோள நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து மோசமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சியால் எரியூட்டப்பட்டுள்ள போரை நோக்கிய உந்துதலிலும், உலகின் ஒவ்வொரு பகுதியும் அகப்பட்டுக்கொண்டுள்ளதை தெளிவாகத் தெரியும் படி, வெளிப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும், யுத்தத்துக்கான தோற்றுவாயான இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசவும் மற்றும் உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்கவும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பப் போராடுகின்றன.

யூரேசியன் பெரு நிலப்பரப்பை கைப்பற்றும் வாஷிங்டனின் பரந்த குறிக்கோள்களின் பாகமாக உள்ள, அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையினால் உருவாக்கப்பட்டுள்ள புவிசார்-அரசியல் நீர்ச்சுழிக்குள் ஒட்டு மொத்த தெற்காசியாவும் சிக்கிக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பூராவும், உக்ரேன் சம்பந்தமாக அமெரிக்கா ரஷ்யாவுடன் மோதல்களை ஈவிரக்கமற்று உக்கிரமாக்கி வந்துள்ளதோடு மத்திய கிழக்கில் ஒரு புதிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், ஆசியாவில் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களையும் உக்கிரமாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தசாப்த காலங்களாக அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளமை, நாட்டினுள் முடிவில்லாத ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கிவிட்டுள்ளது மட்டுமன்றி, பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் ஒரு எளிதில் கையாள முடியாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியும், அமெரிக்கா மற்றும் அதன் இரு ஏகாதிபத்திய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியவை மிகவும் நெருக்கமாக நகர்த்தியுள்ளமை, போர் அபாயத்தை இன்னும் உக்கிரமாக்கியுள்ளது.

அரசாங்கம், எதிர் கட்சிகள் மற்றும் பல்வேறு போலி இடது அமைப்புகளுமாக முழு இலங்கை அரசியல் ஸ்தாபகமும், போர் அச்சுறுத்தல் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வேண்டுமென்றே இருட்டில் வைத்துள்ளன. இந்த மௌனமான சதியை தகர்ப்பதற்கும், போர் மற்றும் இந்த அனைத்துக் கட்சிகளதும் நிகழ்ச்சி நிரலான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளும்.

இலங்கையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தபோது இலங்கை இராணுவம் இழைத்த யுத்தக் குற்றங்களை பற்றிக்கொண்டுள்ள அமெரிக்கா, கட்டுப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு சர்வதேச விசாரணையுடன் இராஜபக்ஷவை அச்சுறுத்துகின்றது. புலிகளுக்கு எதிரான போரை உச்சகட்டம் வரை ஆதரித்த வாஷிங்டனின் இலக்கு, பெய்ஜிங்கில் இருந்து தூர விலகிக்கொண்டு தனது “முன்னிலை” கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தை நெருக்குவதாகும்.

அரசாங்கத்தினதும், எதிர் கட்சிகளதும் பிரதிபலிப்புகள் சரிசமமாக போலியானவையாகும். இராஜபக்ஷ “சர்வதேச சதியில்” பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டிக்கொண்டாலும், சதிகாரர்களை பெயர் குறிப்பிடாததோடு, தனது அரசாங்கத்தை வாஷிங்டனுக்கு உகந்ததாக்குவதற்கு முயற்சிப்பதன் பேரில், அமெரிக்க அரசியல் செல்வாக்கு அமைப்புகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகின்றார். அதே சமயம், வாழ்க்கைத் தரங்கள் மீதான அதன் கடுமையான தாக்குதல்களையிட்டு தொழிலாள வர்க்கத்தில் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக, இனவாதத்தை கிளறிவிடுவதையும் பொலிஸ்-அரச வழிமுறைகளை மேலும் பலப்படுத்துவதையும் அரசாங்கம் உக்கிரமாக்கியுள்ளது.

சிறிசேனவும் யூஎன்பீயும் அரசாங்கத்தின் எதேச்சதிகார வழிமுறைகளை கண்டனம் செய்த போதிலும், தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை திணிப்பதில் இராஜபக்ஷவைப் போலவே ஈவிரக்கமற்றவர்களாக இருப்பர். உலகில் சந்தை சார்பு கொள்கைகளை முதலில் அமுல்படுத்திய அரசாங்கங்களில் யூஎன்பீ அரசாங்கமும் ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தங்களை தகர்ப்பதிலும் கொடூரமான பொலிஸ் அடக்குமுறைகளை முன்னெடுப்பதிலும் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. உள்நாட்டுப் போருக்கு தொடக்கமாக இருந்த 1983 இனவாத படுகொலைகளை தூண்டிவிட்டது யூஎன்பீயே ஆகும். “ஜனநாயகத்துக்கான” சிறிசேனவின் அழைப்பானது, அமெரிக்காவினதும், சீனாவுக்கு எதிரான அதன் “முன்னிலை” கொள்கையினதும் பக்கம் இலங்கையை உறுதியாக இருத்துவதை சாதாரணமாக சமிக்ஞை செய்கின்றது.

நீண்டகாலத்துக்கு முன்னரே தனது ஏகாதிபத்திய-விரோத தோரணையை கைவிட்டுவிட்ட எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ), “எதிர் கட்சிகளின் பொது வேட்பாளருக்குப்” பின்னால் –அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் பின்னால்- அணிதிரண்டுள்ளது. முன்னர் இராஜபக்ஷவுக்கும் அவரது கொடூர யுத்தத்துக்கும் ஆதரவளித்தமையினால் பரந்தளவில் அதிருப்திக்குள்ளாகியுள்ள ஜேவிபீ, தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் இருக்க முடிவெடுத்துள்து. சிறிசேனவுக்கு பகிரங்கமாக ஆதரவளிக்காவிட்டாலும், “இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை தோற்கடிப்பதே” பிரதான இலக்காக இருக்க வேண்டும் என பிரகடனம் செய்ததன் மூலம், அது எங்கு நிற்கின்றது என்பதை சமிக்ஞை செய்துள்ளது.

சோசலிச மற்றும் சர்வதேசியவாத கோட்பாடுகளுக்காக போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சி கறைபடியாத சாதனையைக் கொண்டுள்ளது. உள்நாட்டுப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட போராடிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், வடக்கு மற்றும் கிழக்கின் யுத்த வலயங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிவந்தன. தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, சர்வதேச சோசலிச முன்னோக்குக்கான அர்ப்பணிப்பு கொண்ட போராளி என்ற வகையில் தனது முழு இளமைக் காலத்தையும் அதற்காகவே செலவிட்டுள்ளார். அவர், ஆசிரியர்கள் மத்தியிலும் மற்றும் தனது அநேக முன்னாள் மாணவர்கள் மத்தியிலும், அவர்களது உரிமைகளுக்காகவும் ஏனைய தொழிலாளர் மற்றும் ஏழைகள் தட்டினரது உரிமைகளுக்காவும் சளைக்காமல் போராடுபவராகவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் காட்டிக்கொடுப்புகளையும் கொள்கை ரீதியில் எதிர்ப்பவராகவும் அறியப்பட்டுள்ளார். ஒரு அரசியல் குழு உறுப்பினர் என்ற வகையில், அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் (wsws.org) கொழும்பு ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் கட்சியின் கொள்கைகளை விளக்கும் விவரமான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதோடு நாடு பூராவும் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களை, எமது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் உத்வேகத்துடன் அதில் பங்கேற்குமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் பிரச்சாரத்துக்காக 600,000 ரூபா நிதி சேகரிப்பைத் தொடங்கியுள்ளதோடு ஆகக்கூடிய நிதி உதவிகளைச் செய்யுமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கில் உடன்பாடு கொண்ட அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

By Socialist Equality Party (Sri Lanka)
26 November 2014
http://www.wsws.org/tamil/articles/2014/nov/141127_srise.shtml

Saturday, 22 November 2014

இலங்கையில் 18வது அரசியலைம்புத் திருத்தமும் போலி விவாதங்களும்

Image taken from internet
லங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அடுத்த ஜனவரியில் அவசர ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் மற்றும் அதில் அவர் போட்டியிடப் போவதாகவும் பகிரங்கமானவுடன், 18வது அரசியலைமைப்புத் திருத்தம், முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்ளில் பிரதான தலைப்பாக ஆகியிருக்கின்றது. எதேச்சாதிகார ஆடசிக்கான பாதையின் திருப்பு முனையாக 2010ல் நிறைவேற்றிக் கொண்ட இந்த திருத்தத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்துக்கும் மற்றும் தனது அரசியல் எதிரிகளுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவசியமான அதிகாரங்களை இராஜபக்ஷ குவித்துக் கொண்டுள்ளார்.
தனது எதேச்சாதிகார ஆட்சியை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டு அவர் கணக்கிடும் 2022 வரையான நீண்ட காலத்துக்கு, சர்வதச நிதி மூலதனத்தின் கட்டளைகளை அமுல்படுத்தி, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சமூக எதிர்ப் புரட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கே இராஜபக்ஷவால் அவசர ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தெரியாமல் ஜனநாய விரோதமான முறையில் பாராளுமன்றத்தின் ஊடாக அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக இராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி பதவியில் இருக்கக்கூடிய காலம் வரையறை அற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் கொடுக்கப்ட்ட மிகப் பிரமாண்டமான அதிகராங்களுக்கும் மேலாக, நீதிமன்றம், பொலிஸ், தேர்தல் ஆணைக் குழு மற்றும் மத்திய வங்கி மீதும் கணிசமான அதிகாரமும் புதிய திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறிய தட்டினர் மத்தியில், மேலும் மேலும் அதிகாரத்தையும் நிதியையும் குவித்துக் கொள்வதற்கும், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தீவிரமாக்குவதற்கும் இந்த புதிய அதிகாரங்கள் இராஜபக்ஷவால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.திருத்தத்தின் பிற்போக்கு குறிக்கோளானது, தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அதன் கபடத்தனம் மற்றும் நன்மை பற்றி முதலாளித்துவ ஆட்சித் தட்டினரில் உள்ள பல குழுக்கள் மத்தியில், நான்கு ஆண்டுகளின் பின்னர் நடத்தப்படும் விவாதங்களின் உண்மையான குறிக்கோள், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்கத்துக்கும் மற்றும் முழு முதலாளித்துவ ஸ்தாபகத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் பலமான எதிர்ப்பை திசை திருப்புவதே ஆகும்.
மேல் குறிப்பிடப்பட்ட பிரதான உந்துதுதலை வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் தலைப்பு கடந்த அக்டபர் 26ல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. “18ம் அரசியலைமைப்பு திருத்தத்தின் மீது மேற்கொள்ளப்படும் விவாதம், நான்கு ஆண்டுகள் தாமதித்திருப்பது அதிகமாகும்" என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியான அந்த ஆசிரியர் தலையங்கம், திருத்தம் சம்பந்தமாக சண்டே டைம்ஸ் ஆரம்பத்தில் முன்வைத்த எச்சரிக்கையை பின்வருமாறு முன்வைத்திருந்தது: “சமநிலை மற்றும் அதிகாரத்தை பிரிக்கும் அடிப்படை முறைகளை இது தூக்கி வீசுவதாகவும் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை நிறுவுவதாகவும் நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம். நாம் இவ்வாறு எழுதுகிறோம்... 'இலக்கு நன்மையானதாக இருக்கலாம். ஆயினும், நன்மையான குறிக்கோள்களுடன் இணைந்து நரகத்துக்குப் போகும் பாதையும் திறக்கப்படும் என பழைய பழமொழி உள்ளது.’ இதன் அர்த்தம் மிகவும் தெளிவானது.”
நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குறிக்கோள் என்ன என்பது தெளிவு" என ஆசிரயர் தலையங்கம் மேலும் குறிப்பிடுகின்றது. திருத்தத்தின் உண்மையான குறிக்கோள்களை மூடி மறைத்து அவற்றை நன்மையானவையாக இருக்கக் கூடும் என நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய சடன்டே டைம்ஸ், இப்போது குறிக்கோள் தெளிவானது எனக் குறிப்பிட்டாலும் அதைத் தெளிவுபடுத்தாமல் இருக்கின்றது. அல்லது திருத்தத்துக்கு பின்னால் இருக்கும், இப்போது மிகவும் மாறித் தெரிகின்ற பிற்போக்கு இலக்கை மூடி மறைக்கின்றது.
18வது அரசியலமைப்பு திருத்த்தின் உண்மையான குறிக்கோள் என்ன என்பது பற்றி 2010ல் தெளிவுபடுத்தியது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச் சமத்துவக் கட்சியும் (சோசக) மட்டுமே ஆகும்.“இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம் எதேச்சதிகார ஆட்சியை உறுதிப்படுத்துகின்றது" என்ற தலைப்பின் கீழ், சோசக பொதுச் செயாலளர் விஜே டயஸ் எழுதி 2010 செப்டெம்பர் 21 உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான முன்னோக்கு கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:“இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் ஊடாக முன் தள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றமானது பூகோள நிதி மூலதனத்தால் கோரப்பட்ட சிக்கன திட்டங்களை சுமத்தும்போது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றி உள்நாட்டிலும் மற்றும உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை ஆகும்.
செப்டெம்பர் 8 நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தம். ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலைமையிலான முழுமையான பொலிஸ் அரசை நோக்கிய பயணத்தின் இன்னொரு அடியெடுப்பாகும்.
சமூக பதட்டங்கள் வளர்ச்சியடையும்போது, பாராளுமன்ற விதிமுறைள் மூலமாக ஆழமாக மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் கொள்கைகளை நடமுறைப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு மேலும் மேலும் சிக்கலாக இருக்கும் அதேவேளை, அத்தகைய நிலையில் எதேச்சாதிகார மற்றும் பாராளுமன்றத்துக்கு புறம்பான ஆட்சி முறைக்கு அவை திரும்பும் என அந்த கட்டுரையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
போர்க் கடனில் நசுக்கப்ட்டுள்ள மற்றும் பூகோள நிதி நெருக்கடியின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இலங்கை நிர்வாகம், உலகம் பூராவும் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே உக்கிரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுப்பதற்காக, வாழ்க்கை நிலைமைகள் சீரழிவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் நிச்சயமாக வெடிக்க கூடிய எதிர்ப்புக்குத் தயாராகுவதற்காக, இராஜபக்ஷ தனது ஆதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டு வருகின்றமையும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
உறுதியான" மற்றும் "பலமான" அரசாங்கத்துக்கான கோரிக்கை,இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்ப்பட்டதல்ல என்பதும் அரசாங்கங்களின் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள சமூக நெருக்கடிகளுக்கு எதிராக வளர்ச்சியடையும் வெகுஜன அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கும் நிலையில், அரசியல் ஸ்திரமின்மை சட்டமாக ஆகி உள்ளது என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.
சோசக விடுத்த இந்த எச்சரிக்கை, நான்கு ஆண்டுகளின் பின்னர் மிகவும் பலம்வாய்ந்த முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது இடைவிடாமல் தொடுக்கப்படும் தாக்குல்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள்,விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக நசுக்குவதற்காக "18”வது திருத்தத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரங்களை இராஜபக்ஷ நன்கு பயன்படுத்தி வருகின்றார்.
போலி இடதுகள், மத்திய தர வர்க்க புத்திஜீவிகள் உட்பட பல்வேறு கும்பல்கள், 18வது திருத்தம் உட்பட இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தடுத்து நிறுத்த முடியும் என்ற மாயையை தொழிலாளர்களுக்குள் பரப்புகின்றனர். இந்த நடவடிக்கைகள் இராபக்ஷவின் தனிப்பட்ட கெட்ட குணத்தில் இருந்து தோன்றுவதல்ல என்றும் அவை சமூக வெடிப்புக்கு முகங்கொடுத்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் வெளிப்பாடு என்றும் சோசக மட்டுமே தெளிவுபடுத்தியது. இந்த எதேச்சாதிகார திட்டங்களுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்தை தூக்கிவீசும் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்துடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சோசக தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்துள்ளது.
முதலாளித்துவ ஸ்தாபகத்துக்கான ஒரு கட்சியாக மாறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ), இராஜபக்ஷ மூன்றாம் முறை போட்டியிடுவது "சட்ட விரோதமானது" என கூறிக்கொண்டு ஒரு போலி பிரச்சாரமொன்றை நடத்துவது, தொழிலாள வர்க்கத்தை இந்த வேலைத் திட்டத்தில் இருந்து தூர விலக்குவதற்கே ஆகும். இராஜபக்ஷவின் போட்டியிடலுக்கு எதிராக ஜேவிபீயால் நீதிமன்றத்தின் முன் தாக்கதல் செய்யப்பட்ட வழக்கின் நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருப்பவர், பிரதம நீதீயரசர் மொஹான் பீரீஸ் ஆவார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் அவசியங்களுக்கு தடையாக இருப்பதாக கணிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து இறக்கிய பின்னர், அந்த இடத்தில் அமர்த்தப்பட்ட இராஜபக்ஷவுக்கு நெருக்கமானவரான பீரிசின் தீர்ப்பு என்னவென்பது தெளிவானது.
2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், எதேச்சாதிகார அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்தவற்காவும் பிரதான ஊடகமாக்கிக் கொள்ளப்பட்ட இனவாத போருக்கும் முழு ஆதரவு கொடுத்த ஜேவிபீ, 2010ல் இந்த திருத்தத்தை கொண்டுவந்த போது அதன் உண்மையான ஆபத்துக்களை தொழிலாள வர்க்கத்துக்கு மூடி மறைத்ததோடு அவர்களின் எதிர்ப்பை பலவீனமான வீதி எதிர்ப்புகளாக தரம் குறைத்தது.
இந்த நிலையில் போலி இடது கட்சிகளான ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி உட்பட இன்னும் பல அமைப்புகளும் "18”ல் அடங்கியுள்ள அதிகாரங்கள் கொண்ட முழு ஜனாதிபதி முறைமையையும் தூக்கி வீச நடவடிக்கை எடுக்கும் "பொது இடது" வேட்பாளருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக பிரச்சாரத்த்தில் ஈடுபடுகின்றன. போலி இடது நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் அதேவேளை, அதே கட்சியின் இன்னொரு பகுதியினர் "பொது இடது வேட்பாளருக்கு" தாம் ஆதரவளிப்பதாக கூறுகின்றனர்.

இவை எதுவும் வளர்ச்சியடையும் எதேச்சதிகாரத்திற்கு சவால் செய்யாததோடு, அவற்றின் இலக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்று வளர்ச்சியடைவதை தடுத்து, தொழிலாள வர்க்கத்தையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் முதலாளித்துவ முறைமைக்குள் கட்டிப்போடுவதே ஆகும். இந்த சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மற்றும் அவற்றின் வேலைத் திட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் பிரிந்து அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிபடையிலான ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும். ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதன் மூலம், தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருதவற்காக போராடும், அத்தகைய தொழிலாள வர்க்க இயக்கம் மூலமாக ஜனநாயக முறையில் தேர்வு செய்துகொள்ளப்படும் அரசயலமைப்பு சபையின் ஊடாக மட்டுமே உண்மையான ஜனநாயக அரசியலமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.
By Panini Wijesiriwardane,
5 November 2014
http://www.wsws.org/tamil/articles/2014/nov/141121_lsks.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts