இந்த வாரம் ஜப்பானிய பாதுகாப்பு மந்திரி இட்சுனோரி ஒனோடெராவின் இந்தியாவிற்கான நான்கு நாள் விஜயம், சீனாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மூலோபாய கூட்டுறவிற்குள் புது டெல்லியை ஒருங்கிணைக்கும் டோக்கியோவின் நகர்வுகளை அடிக்கோடிடுகிறது. ஜப்பானின் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பெய்ஜிங் உடன் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு இடையில், சீனாவுடன் தீர்க்கப்படாத எல்லை மோதல்களைக் கொண்டுள்ள மற்றொரு நாடான இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் அழுத்தம் அளித்து வருகிறது.
திங்களன்று, ஒனொடெரா அவரது இந்திய சமதரப்பான ஏ. கே. அந்தோணி உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்திய பாதுகாப்பு அமைச்சக தகவல்களின்படி, “ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டணியை மேலும் கூடுதலாக ஒருங்கிணைத்து உறுதிப்படுத்த, கடற்பகுதி பாதுகாப்பு சம்பந்தமானவை உட்பட இந்திய-ஜப்பான் பாதுகாப்பு ஆலோசனை மற்றும் கூட்டுறவை பலப்படுத்த அவர் முடிவெடுத்தனர்.”
“ஆண்டுதோறும் உயர்மட்ட பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதைத் தொடர்வது" மற்றும் "ஜப்பான் கடற்பகுதி சுய-பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படை இடையே வழக்கமான அடிப்படையில் இருதரப்பு இராணுவ ஒத்திகைகளை நடத்துவது" ஆகியவற்றில் அந்தோணியும் ஒனொடெராவும் உடன்பட்டனர். “சிப்பாய்களை பரிவர்த்தனை செய்து கொள்வது" மற்றும் பரிசோதனை ஓட்ட விமானிகள் மற்றும் ஏனைய விமானப்படை சிப்பந்திகளை பகிர்ந்து கொள்வதன் மீது விவாதங்கள் நடத்துவது குறித்தும் அவர்கள் மேற்கொண்டு முடிவெடுத்தனர். இந்த வருடம் அந்தோணி ஜப்பானுக்கு விஜயம் செய்வார் மற்றும் இந்திய கடற்படை அங்கே கூட்டு ஒத்திகைகள் நடத்தும்.
இத்தகை நகர்வுகள், சீனாவை பல்வேறு இராஜதந்திர புறக்கணிப்புகள் மற்றும் இராணுவ ஆயுத்த வேலைகள் மூலமாக சுற்றி வளைத்துவரும் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பின்" கட்டமைப்பிற்குள் பிரதான நாடுகளை கூடுதலாக வரிசைப்படுத்துவதைக் குறிக்கின்றன. ஆசியாவில் இராணுவ மற்றும் மூலோபாய கூட்டணிகளை அபிவிருத்தி செய்தும் மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் போன்ற அதன் நேச நாடுகளை சீனாவுடனான அவற்றின் பிராந்திய பிரச்சினைகளில் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாடுகளை எடுக்க ஊக்குவித்தும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஆசியாவில் அமெரிக்கா அதன் இராணுவ அடித்தளங்களைப் பலப்படுத்தி வருகிறது.
அந்த இரண்டு பாதுகாப்பு மந்திரிகளும் குறிப்பாக ஜப்பானில் சென்காயு என்றும் சீனாவில் தியாவு என்றும் அறியப்படும் சர்ச்சைக்குரிய தீவுகளின் மீது கிழக்கு சீன கடலில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பதட்டங்களை மற்றும் கடந்த நவம்பரில் கிழக்கு சீன கடலில் பெய்ஜிங் ஒருதலைபட்சமாக அறிவித்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) குறித்த அறிவிப்பு ஆகியவற்றை விவாதித்தனர்.
இந்திய நாளிதழான தி ஹிந்து பத்திரிகையில் வெளியான தகவலின்படி, “அந்த சந்திப்பின் போது, திரு. அந்தோணி ஒனொடெராவிடம் இந்தியா சர்வதேச கடல் எல்லைகளில் சுதந்திர போக்குவரத்தை வலியுறுத்தும் தரப்பில் நிற்கிறது என்பதையும் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் விண்ணப்பிக்கும் என்றும் கூறியிருக்கலாம் என்று உணரப்படுகிறது." அவை மறைமுக குறிச்சொற்களாகும், சீன கடற்பகுதிக்கு அருகிலுள்ள கடல்களில் அமெரிக்கா தடையின்றி அணுகுவதைக் கோர மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்களில் சீனாவின் பிராந்திய பிரச்சினைகளுக்குள் தலையிட, வாஷிங்டனால் இவை பயன்படுத்தப்பட்டன.
சீனாவை எல்லா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பதற்கான அமெரிக்க நகர்வுகளில் ஜப்பான் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒரு முத்தரப்பு கூட்டணியில் புது டெல்லியை ஒருங்கிணைத்ததன் மூலமாக ஒரு "நான்குதரப்பு" கூட்டணியாக விரிவாக்க பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஒரு நகர்வை மீட்டுயிர்ப்பித்துள்ளார். அதுபோன்றவொரு அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் நிஜமான இலக்கு சீனாவாகும்—அது பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு ஒனொடெரா அளித்த ஒரு பேட்டியில் தெளிவாக்கப்பட்டு இருந்தது.
கிழக்கு சீன கடலில் எழுந்துள்ள பதட்டங்களைக் குறிப்பிட்டு காட்டி ஒனொடெரா இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டையும் பொறுத்த வரையில், சீனா ஒரு முக்கியமான அண்டை நாடாகும். இரண்டு நாடுகளுமே சீனாவுடன் முக்கிய பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஆத்திரமூட்டும் சமீபத்திய சீன நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சீனாவிற்கு ஒரு சேதியை அனுப்ப வேண்டி உள்ளது.”
சீனாவிடம் இருந்து வரும் சவால்களைச் சமாளிக்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஒரு முத்தரப்பு குழுவாக்கத்திற்கான டோக்கியோவின் முந்தைய முன்மொழிவைக் குறித்து கேட்கப்பட்ட போது, ஒனொடெரா பின்வருமாறு விடையிறுத்தார்: “இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளன. பொருளாதாரரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் மற்றும் இராணுவ படைகளிலும் இவை பெரிய நாடுகளாலும்... இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா கூட்டாக இருந்து சீனாவிற்கு ஒரு பொதுவான சேதியை அனுப்பினால் அது நிறைய அர்த்தப்படுத்தும்.”
சீனாவிற்கு எதிர்பலமாக இந்தியாவைப் பயன்படுத்தும் நோக்கில், வாஷிங்டன் இந்தியாவுடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஜோடித்து வருகிறது. இந்தியாவை ஈர்க்க அமெரிக்கா பல மூலோபாய மற்றும் பாதுகாப்பு சார்ந்த விட்டுகொடுப்புகளை விஸ்தரித்துள்ளது. இந்தியா அணுஆயுதங்களை வைத்திருந்தாலும் அதற்கு யுரேனியம் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சிவில் அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, மற்றும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நவீன ஆயுத தளவாட அமைப்புமுறை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஆகியவை அவற்றில் உள்ளடங்கி உள்ளன. புது டெல்லியோ அதன் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளைத் தொடர ஒரு கருவியாக அமெரிக்க நகர்வுகளைப் பெரிதும் தழுவி உள்ளதோடு அதேபோன்ற புவி-மூலோபாய காரணங்களுக்காக ஜப்பானுடன் அதன் உறவுகளை பலப்படுத்தி வருகிறது.
அமெரிக்க பின்புலத்துடன், அதன் இராணுவ ஆற்றலை மீள்-அபிவிருத்தி செய்து வரும் ஜப்பான் அதுபோன்றவொரு ஆயத்தங்களைக் கொண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய அரசியலமைப்பு தடைகளைக் கடந்துவர முயன்று வருகிறது. அந்த நிகழ்முறை அபேயின் கீழ் வேகமாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த டிசம்பரில், அபே'இன் மந்திரிகள் சபை முதல்முறையாக ஜப்பானின் முன்பில்லாத "தேசிய பாதுகாப்பு மூலோபாயம்" (NSS) என்பதற்கு ஒப்புதல் வழங்கியது. அது இன்னும் கூடுதலாக ஆக்ரோஷமான இராணுவ அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது. திங்களன்று சந்திப்பின் போது ஒனொடெரா NSS குறித்து அந்தோணிக்கு விளக்கினார்.
டிசம்பர் 2012இல் பதவியேற்ற பின்னர், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை விரிவாக்க, அபேயின் மந்திரிசபை முக்கிய அரசு விஜயமான ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் இந்திய விஜயத்திற்கும் ஒப்புதல் வழங்கியது, அது கடந்த நவம்பரில் நடந்தேறியது. இந்தியாவிடம் இருந்து ஒரு தசாப்த கால பழமையான அழைப்புக்கு விடையிறுப்பாக நிகழ்ந்த அந்த விஜயம், இந்திய மற்றும் ஜப்பானிய ஊடகங்களில் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மகத்தான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக வர்ணிக்கப்பட்டது.
டோக்கியோவைப் போலவே, புது டெல்லியும் சீனாவுடன் ஒரு நீண்டகால எல்லை பிரச்சினையைக் கொண்டுள்ளது, அது கடந்த ஆண்டு வெடித்தெழுந்தது. கடந்த ஏப்ரலில், இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக்கில் வரையறுக்கப்பட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு (Line of Actual Control - LAC) என்றழைக்கப்படுவதை ஒட்டி இந்திய மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையே ஒரு வார கால மோதல் இருந்தது. இந்தியா மற்றும் சீனா 1962இல் எல்லை போர் ஒன்றை சிறியளவில் நடத்தி உள்ளன.
டோக்கியோ உடனான நெருக்கமான உறவுகளுக்கு அதன் உற்சாகமான வரவேற்பை குறிப்பிட்டுக் காட்டி, இந்திய அரசு ஜனவரி 26இன் குடியரசு தின கொண்டாட்டங்களில் அபே'ஐ தலைமை விருந்தினராக இருக்க அழைப்பு விடுத்துள்ளது. இது ஒரு ஜப்பானிய பிரதம மந்திரியின் 2011க்குப் பிந்தைய முதல் விஜயமாக இருக்கும். அபே அரசாங்கத்தின் கூட்டணி பங்காளியான, புதிய கொமெய்டோ கட்சியின் (New Komeito Party) தலைவர் நாட்சுயோ யமாகுசி, திங்களன்று புது டெல்லியில் பேசுகையில், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் "ஒரு ஜப்பானிய பிரதம மந்திரி தலைமை விருந்தினராக பங்கெடுக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்,” என்றார். “கூட்டணியை பலப்படுத்துவதில் … அதுவொரு மாபெரும் சகாப்த சமிக்ஞையை அனுப்பும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் அறிவித்தார்.
சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புகளை விரிவாக்க, ஜப்பான் மற்றும் இந்தியாவை நெருக்கத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க பின்புல நகர்வுகளில் ஒரு கூடுதல் படியை அபேயின் விஜயம் குறிக்கும். குறிப்பாக, கிழக்கு சீன கடலில் பெய்ஜிங்கின் ஒரு வான் பாதுகாப்பு மண்டல அறிவிப்பால் உருவான நெருக்கடிக்கு பின்னர் உடனடியாக, அவ்விரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை விரிவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் புவி-அரசியல் பதட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஒனொடெராவின் விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்ட விதத்தில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கான நகர்வுகள், ஒரு தனிப்பட்ட சம்பவமோ அல்லது பிழையோ அப்பிராந்தியத்தை மற்றும் உலகம் முழுவதையும் ஒரு மோதலுக்கு இழுத்து வருவதற்கு ஒரு தொடக்க புள்ளியாக மாறுவதற்கான ஆபத்தை பெரிதும் உயர்த்தி உள்ளது.
By Deepal Jayasekera
10 January 2014
10 January 2014
http://www.wsws.org/tamil/articles/2014/jan/140117_japp.shtml