Search This Blog

Sunday, 19 January 2014

ஜப்பானிய பாதுகாப்பு மந்திரியின் இந்திய விஜயம் இராணுவ உறவுகளைப் பலப்படுத்துகிறது


இந்த வாரம் ஜப்பானிய பாதுகாப்பு மந்திரி இட்சுனோரி ஒனோடெராவின் இந்தியாவிற்கான நான்கு நாள் விஜயம், சீனாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மூலோபாய கூட்டுறவிற்குள் புது டெல்லியை ஒருங்கிணைக்கும் டோக்கியோவின் நகர்வுகளை அடிக்கோடிடுகிறது. ஜப்பானின் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பெய்ஜிங் உடன் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு இடையில், சீனாவுடன் தீர்க்கப்படாத எல்லை மோதல்களைக் கொண்டுள்ள மற்றொரு நாடான இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் அழுத்தம் அளித்து வருகிறது.

திங்களன்று, ஒனொடெரா அவரது இந்திய சமதரப்பான ஏ. கே. அந்தோணி உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்திய பாதுகாப்பு அமைச்சக தகவல்களின்படி, “ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டணியை மேலும் கூடுதலாக ஒருங்கிணைத்து உறுதிப்படுத்த, கடற்பகுதி பாதுகாப்பு சம்பந்தமானவை உட்பட இந்திய-ஜப்பான் பாதுகாப்பு ஆலோசனை மற்றும் கூட்டுறவை பலப்படுத்த அவர் முடிவெடுத்தனர்.”

“ஆண்டுதோறும் உயர்மட்ட பரஸ்பர விஜயங்களை மேற்கொள்வதைத் தொடர்வது" மற்றும் "ஜப்பான் கடற்பகுதி சுய-பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படை இடையே வழக்கமான அடிப்படையில் இருதரப்பு இராணுவ ஒத்திகைகளை நடத்துவது" ஆகியவற்றில் அந்தோணியும் ஒனொடெராவும் உடன்பட்டனர். “சிப்பாய்களை பரிவர்த்தனை செய்து கொள்வது" மற்றும் பரிசோதனை ஓட்ட விமானிகள் மற்றும் ஏனைய விமானப்படை சிப்பந்திகளை பகிர்ந்து கொள்வதன் மீது விவாதங்கள் நடத்துவது குறித்தும் அவர்கள் மேற்கொண்டு முடிவெடுத்தனர். இந்த வருடம் அந்தோணி ஜப்பானுக்கு விஜயம் செய்வார் மற்றும் இந்திய கடற்படை அங்கே கூட்டு ஒத்திகைகள் நடத்தும்.

இத்தகை நகர்வுகள், சீனாவை பல்வேறு இராஜதந்திர புறக்கணிப்புகள் மற்றும் இராணுவ ஆயுத்த வேலைகள் மூலமாக சுற்றி வளைத்துவரும் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பின்" கட்டமைப்பிற்குள் பிரதான நாடுகளை கூடுதலாக வரிசைப்படுத்துவதைக் குறிக்கின்றன. ஆசியாவில் இராணுவ மற்றும் மூலோபாய கூட்டணிகளை அபிவிருத்தி செய்தும் மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் போன்ற அதன் நேச நாடுகளை சீனாவுடனான அவற்றின் பிராந்திய பிரச்சினைகளில் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாடுகளை எடுக்க ஊக்குவித்தும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஆசியாவில் அமெரிக்கா அதன் இராணுவ அடித்தளங்களைப் பலப்படுத்தி வருகிறது.

அந்த இரண்டு பாதுகாப்பு மந்திரிகளும் குறிப்பாக ஜப்பானில் சென்காயு என்றும் சீனாவில் தியாவு என்றும் அறியப்படும் சர்ச்சைக்குரிய தீவுகளின் மீது கிழக்கு சீன கடலில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பதட்டங்களை மற்றும் கடந்த நவம்பரில் கிழக்கு சீன கடலில் பெய்ஜிங் ஒருதலைபட்சமாக அறிவித்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) குறித்த அறிவிப்பு ஆகியவற்றை விவாதித்தனர்.

இந்திய நாளிதழான தி ஹிந்து பத்திரிகையில் வெளியான தகவலின்படி, “அந்த சந்திப்பின் போது, திரு. அந்தோணி ஒனொடெராவிடம் இந்தியா சர்வதேச கடல் எல்லைகளில் சுதந்திர போக்குவரத்தை வலியுறுத்தும் தரப்பில் நிற்கிறது என்பதையும் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் விண்ணப்பிக்கும் என்றும் கூறியிருக்கலாம் என்று உணரப்படுகிறது." அவை மறைமுக குறிச்சொற்களாகும், சீன கடற்பகுதிக்கு அருகிலுள்ள கடல்களில் அமெரிக்கா தடையின்றி அணுகுவதைக் கோர மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்களில் சீனாவின் பிராந்திய பிரச்சினைகளுக்குள் தலையிட, வாஷிங்டனால் இவை பயன்படுத்தப்பட்டன.

சீனாவை எல்லா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பதற்கான அமெரிக்க நகர்வுகளில் ஜப்பான் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒரு முத்தரப்பு கூட்டணியில் புது டெல்லியை ஒருங்கிணைத்ததன் மூலமாக ஒரு "நான்குதரப்பு" கூட்டணியாக விரிவாக்க பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஒரு நகர்வை மீட்டுயிர்ப்பித்துள்ளார். அதுபோன்றவொரு அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் நிஜமான இலக்கு சீனாவாகும்—அது பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு ஒனொடெரா அளித்த ஒரு பேட்டியில் தெளிவாக்கப்பட்டு இருந்தது.

கிழக்கு சீன கடலில் எழுந்துள்ள பதட்டங்களைக் குறிப்பிட்டு காட்டி ஒனொடெரா இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டையும் பொறுத்த வரையில், சீனா ஒரு முக்கியமான அண்டை நாடாகும். இரண்டு நாடுகளுமே சீனாவுடன் முக்கிய பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஆத்திரமூட்டும் சமீபத்திய சீன நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சீனாவிற்கு ஒரு சேதியை அனுப்ப வேண்டி உள்ளது.”

சீனாவிடம் இருந்து வரும் சவால்களைச் சமாளிக்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஒரு முத்தரப்பு குழுவாக்கத்திற்கான டோக்கியோவின் முந்தைய முன்மொழிவைக் குறித்து கேட்கப்பட்ட போது, ஒனொடெரா பின்வருமாறு விடையிறுத்தார்: “இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளன. பொருளாதாரரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் மற்றும் இராணுவ படைகளிலும் இவை பெரிய நாடுகளாலும்... இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா கூட்டாக இருந்து சீனாவிற்கு ஒரு பொதுவான சேதியை அனுப்பினால் அது நிறைய அர்த்தப்படுத்தும்.”

சீனாவிற்கு எதிர்பலமாக இந்தியாவைப் பயன்படுத்தும் நோக்கில், வாஷிங்டன் இந்தியாவுடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஜோடித்து வருகிறது. இந்தியாவை ஈர்க்க அமெரிக்கா பல மூலோபாய மற்றும் பாதுகாப்பு சார்ந்த விட்டுகொடுப்புகளை விஸ்தரித்துள்ளது. இந்தியா அணுஆயுதங்களை வைத்திருந்தாலும் அதற்கு யுரேனியம் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் சிவில் அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, மற்றும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நவீன ஆயுத தளவாட அமைப்புமுறை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஆகியவை அவற்றில் உள்ளடங்கி உள்ளன. புது டெல்லியோ அதன் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளைத் தொடர ஒரு கருவியாக அமெரிக்க நகர்வுகளைப் பெரிதும் தழுவி உள்ளதோடு அதேபோன்ற புவி-மூலோபாய காரணங்களுக்காக ஜப்பானுடன் அதன் உறவுகளை பலப்படுத்தி வருகிறது.

அமெரிக்க பின்புலத்துடன், அதன் இராணுவ ஆற்றலை மீள்-அபிவிருத்தி செய்து வரும் ஜப்பான் அதுபோன்றவொரு ஆயத்தங்களைக் கொண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய அரசியலமைப்பு தடைகளைக் கடந்துவர முயன்று வருகிறது. அந்த நிகழ்முறை அபேயின் கீழ் வேகமாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த டிசம்பரில், அபே'இன் மந்திரிகள் சபை முதல்முறையாக ஜப்பானின் முன்பில்லாத "தேசிய பாதுகாப்பு மூலோபாயம்" (NSS) என்பதற்கு ஒப்புதல் வழங்கியது. அது இன்னும் கூடுதலாக ஆக்ரோஷமான இராணுவ அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது. திங்களன்று சந்திப்பின் போது ஒனொடெரா NSS குறித்து அந்தோணிக்கு விளக்கினார்.

டிசம்பர் 2012இல் பதவியேற்ற பின்னர், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை விரிவாக்க, அபேயின் மந்திரிசபை முக்கிய அரசு விஜயமான ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் இந்திய விஜயத்திற்கும் ஒப்புதல் வழங்கியது, அது கடந்த நவம்பரில் நடந்தேறியது. இந்தியாவிடம் இருந்து ஒரு தசாப்த கால பழமையான அழைப்புக்கு விடையிறுப்பாக நிகழ்ந்த அந்த விஜயம், இந்திய மற்றும் ஜப்பானிய ஊடகங்களில் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மகத்தான குறிப்பிடத்தக்க மைல்கல்லாக வர்ணிக்கப்பட்டது.

டோக்கியோவைப் போலவே, புது டெல்லியும் சீனாவுடன் ஒரு நீண்டகால எல்லை பிரச்சினையைக் கொண்டுள்ளது, அது கடந்த ஆண்டு வெடித்தெழுந்தது. கடந்த ஏப்ரலில், இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக்கில் வரையறுக்கப்பட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு (Line of Actual Control - LAC) என்றழைக்கப்படுவதை ஒட்டி இந்திய மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையே ஒரு வார கால மோதல் இருந்தது. இந்தியா மற்றும் சீனா 1962இல் எல்லை போர் ஒன்றை சிறியளவில் நடத்தி உள்ளன.

டோக்கியோ உடனான நெருக்கமான உறவுகளுக்கு அதன் உற்சாகமான வரவேற்பை குறிப்பிட்டுக் காட்டி, இந்திய அரசு ஜனவரி 26இன் குடியரசு தின கொண்டாட்டங்களில் அபே'ஐ தலைமை விருந்தினராக இருக்க அழைப்பு விடுத்துள்ளது. இது ஒரு ஜப்பானிய பிரதம மந்திரியின் 2011க்குப் பிந்தைய முதல் விஜயமாக இருக்கும். அபே அரசாங்கத்தின் கூட்டணி பங்காளியான, புதிய கொமெய்டோ கட்சியின் (New Komeito Party) தலைவர் நாட்சுயோ யமாகுசி, திங்களன்று புது டெல்லியில் பேசுகையில், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் "ஒரு ஜப்பானிய பிரதம மந்திரி தலைமை விருந்தினராக பங்கெடுக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்,” என்றார். “கூட்டணியை பலப்படுத்துவதில் … அதுவொரு மாபெரும் சகாப்த சமிக்ஞையை அனுப்பும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் அறிவித்தார்.

சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புகளை விரிவாக்க, ஜப்பான் மற்றும் இந்தியாவை நெருக்கத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க பின்புல நகர்வுகளில் ஒரு கூடுதல் படியை அபேயின் விஜயம் குறிக்கும். குறிப்பாக, கிழக்கு சீன கடலில் பெய்ஜிங்கின் ஒரு வான் பாதுகாப்பு மண்டல அறிவிப்பால் உருவான நெருக்கடிக்கு பின்னர் உடனடியாக, அவ்விரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை விரிவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் புவி-அரசியல் பதட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஒனொடெராவின் விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்ட விதத்தில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கான நகர்வுகள், ஒரு தனிப்பட்ட சம்பவமோ அல்லது பிழையோ அப்பிராந்தியத்தை மற்றும் உலகம் முழுவதையும் ஒரு மோதலுக்கு இழுத்து வருவதற்கு ஒரு தொடக்க புள்ளியாக மாறுவதற்கான ஆபத்தை பெரிதும் உயர்த்தி உள்ளது.

By Deepal Jayasekera 
10 January 2014

http://www.wsws.org/tamil/articles/2014/jan/140117_japp.shtml

ஈரான் உடன்படிக்கையோடு, சூறையாடும் நோக்கங்கள் இல்லாமலா, அமெரிக்கா தந்திரோபாயங்களைத் திருப்புகிறது

ஜனவரி 20இல், ஈரானின் சிவில் அணுசக்தி திட்டங்களை நிறுத்தி வைக்கும் ஒரு ஆறு மாதகால உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். ஈரானை இராணுவ பலங்கொண்டு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்த பின்னர், வாஷிங்டன் தற்போது "சமரசத்திற்கான ஒரு வாய்ப்பை" வழங்க விரும்புவதால் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இந்த இடைக்கால உடன்படிக்கையில் பேரம்பேச இணைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் தீர்க்கமான மூலோபாய நோக்கங்களைப் பின்தொடர்வதற்கு ஒரு தந்திரோபாயமாக மட்டுமே "சமரசத்தை" முயன்று வருகிறது. அந்த நோக்கங்களை அது இறுதியில் யுத்தத்தின் மூலம் அடைய முயலக்கூடும். ஈரான் மீது இப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலை வாஷிங்டன் ஆழ்ந்த மற்றும் நிரந்தர விட்டுகொடுப்புகளுக்கு அழுத்தமளிப்பதற்கான ஓர் இன்றியமையா கூறாக காண்கிறது.
கடந்த செப்டம்பரில் சிரியா மீதான ஒரு தாக்குதலில் இருந்து வாஷிங்டன் பின்வாங்கிய பின்னர், ஈரானுடன் இராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பியமை இரண்டு சூறையாடும் கணக்கீடுகளால் உந்தப்பட்டுள்ளது. முதலாவதாக, மத்திய கிழக்கில் மற்றொரு அமெரிக்க யுத்தமானது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" இருந்து, அதாவது,சீனாவை தனிமைப்படுத்தும் மற்றும் இராணுவரீதியில் எதிர்க்கும் முயற்சிகளில் இருந்து, அபாயகரமாக பின்னுக்கு தள்ளப்படும் என்பதாகும்.
இரண்டாவது, அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஈரானிய முதலாளித்துவ ஆட்சியாளர்களை இழுத்து வர முடியும், அதன் எண்ணெய் துறை மற்றும் செல்வ வளத்தை அமெரிக்க பெருநிறுவனங்களின் ஆதாயங்களுக்காக மறுபங்கீடு செய்ய முடியும், மற்றும் அதன் மூலோபாய இடத்தை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கைலெபனானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையில்ஸ்திரப்படுத்த பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதாகும்.
அந்த இடைக்கால அணுசக்தி உடன்படிக்கையோடு, வாஷிங்டன் ஈரானிடமிருந்து பெரும் விட்டுக்கொடுப்புகளை வசூலித்துள்ளது. இந்த ஏற்பாடுகள் ஒரு இறையாண்மை அரசு மற்றும் அணுசக்தி பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு நாடு என இரண்டு விதத்திலும் ஈரானின் உரிமைகளை நசுக்குகிறது. அந்த உடன்படிக்கை ஈரானின் 5சதவீதத்திற்கு குறைந்த யுரேனிய செறிவூட்டுதலைத் தடுக்கிறது, ஈரானின் 20சதவீதத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பாதியை வெளியேற்றுகிறது,தெஹ்ரான் அதன் அராக் கடினநீர் அணுஉலையை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதைத் தடுக்கிறது, மற்றும் அந்நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்தை முன்பில்லாத விதத்தில் உள்ளார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறது.
இதற்கு கைமாறாக, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளும் சுமார் 7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான "தடைகளைத் திரும்ப எடுக்கும் உதவியை" ஈரானுக்கு வழங்குகின்றன. இந்த தொகை—7 பில்லியன் டாலர்விதிக்கப்பட்ட தடைகள் மூலமாக வெறும் ஆறு வாரங்களில் எண்ணெய் இறக்குமதிகளில் ஈரான் இழந்த தொகை ஆகும்! அனைத்திற்கும் மேலாக,ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக குறைத்துள்ள மற்றும் அந்நாட்டை உலக வங்கியியல் அமைப்புமுறைக்கு வெளியே உறைய வைத்திருக்கும் முக்கிய தடைகள் முழுவதுமாக நடைமுறையில் உள்ளன.
இந்த தடைகள் யுத்தம் இல்லாத சமயங்களில் முன்பொருபோதும் திணிக்கப்பட்டிராத மிக கடுமையான தடைகளாகும். அந்த தடைகளே வலிய மோதலுக்குச் செல்லும் ஒரு நடவடிக்கையாக உள்ளன, அது பாரபட்சமின்றி ஈரானிய சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளை இலக்கில் கொள்கிறது.அவை ஈரானிய பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளதோடு, அரசு வருவாயை வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, மேலும் 40 சதவீத பணவீக்கத்திற்கு எரியூட்டி பாரிய வேலை இழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியை அவை தடுத்ததன் மூலமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டனின் ஈரானிய கொள்கையானது, சிரியாவில் அதன் சுன்னி இஸ்லாமிய கைப்பாவைகள் மூலமாக அது நடத்தியுள்ள பிரிவினைவாத யுத்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த புள்ளி, ஈரானுடன் அதன் உடன்படிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போது, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் பிரச்சாரத்தை ஒப்புக் கொண்டதன் மூலமாக வாஷிங்டனாலேயே அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.
சிரியாவில் யுத்தம் குறித்து நடைபெறவிருக்கின்ற மாநாட்டில், ஈரான் விவகாரங்கள் நீக்கப்படும் என்று திங்களன்று ஒபாமா நிர்வாகம் அறிவித்தது.அமெரிக்கா ஆதரவளிக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு பாதி இடங்களை வழங்கும் ஒரு "இடைக்கால அரசை" கொண்டு டமாஸ்கஸின் அதிகாரத்தை மாற்றுவதற்கு ஈரான் உடன்பட்டால், அம்மாநாட்டில் கலந்து கொள்ள தெஹ்ரானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்தார்.
அதேவேளையில், வாஷிங்டன் ஆத்திரமூட்டும் விதத்தில் சிரியாவில் உள்ள அதன் கைப்பாவைகளுக்கு அதன் இராணுவ உதவிகளை அதிகரித்தது.வாஷிங்டனின் உதவிகள் அனேகமாக அல் கொய்தா குழுக்களுக்குச் செல்லும் என்றும், சிரியாவில் அதன் யுத்த உந்துதலினால் ஏற்படும் "துணை பாதிப்பாக"அமெரிக்காவிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் "திரும்பி வருவதை" ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கலாம் என்றும் ஒபாமா நிர்வாகம் பார்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடாக இருந்தாலும், ஒரு முழு அளவிலான சிவில் அணுசக்தி திட்டத்தை கட்டுப்பாடற்ற உரிமையோடு ஈரானால் பெற முடியும் என்பதால்,ஈரானுடனான தற்போதைய தற்காலிக உடன்படிக்கையானது ஈரானின் அணுசக்தி திட்டத்தை வரம்புக்கு உட்படுத்தும் ஒரு "இறுதி"உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்குக் களம் அமைக்க கூடியதாக உள்ளது.
அவர்கள் தோல்வி அடைய அங்கே "50க்கு 50” வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்ததோடு சேர்ந்து, தற்காலிக உடன்படிக்கைக்கு இட்டு சென்ற பேச்சுவார்த்தைகளை விட இந்த பேச்சுவார்த்தைகள் "மிகவும் கடினமானதாக" இருக்குமென்று ஒபாமா மற்றும் கெரி ஏற்கனவே அறிவித்துள்ளனர். அவ்வாறான ஒரு தோல்வியின் விளைவாக "அமெரிக்கா ஒரு நடவடிக்கையில் இறங்குமென்று" (அதாவது கடுமையான தடைகள் மற்றும் யுத்தத்திற்கான நாட்கள் எண்ணப்படும் என்பதை) வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் தொடர்பு செயலர் ஜே கார்னே திங்களன்று அறிவித்தார்.
அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அணுசக்தி பிரச்சினை என்பது எப்போதுமே மிரட்டுவதற்கு மற்றும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் பின்புலத்தை அமைப்பதற்கு,தேவைப்பட்டால் இராணுவரீதியில் இறங்குவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இருந்த ஷாவின் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரத்தை எது தூக்கியெறிந்ததோ அந்த 1979ஈரானிய புரட்சியோடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் தன்னைத்தானே சமரசப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே இறுதி பகுப்பாய்வாக உள்ளது.
ஈரானிய புரட்சி ஒரு பலம் வாய்ந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு எழுச்சியாக இருந்தது. இருந்தாலும், ஸ்ராலினிச டூடெஹ் கட்சியும் (Tudeh Party) மற்றும் குட்டி முதலாளித்து "இடது" வகைப்பட்ட குழுக்களும் ஈரான் இன்னும் சோசலிசத்திற்கு தயாராகவில்லை என்று வலியுறுத்தி, தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்கு திட்டமிட்டு அடிபணிய செய்தனர். அதற்கு மூச்சுவிட கிடைத்த இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் அந்த மக்கள் இயக்கத்திற்கு கடிவாளமிட மற்றும் இடதை கண்மூடித்தனமாக ஒடுக்க மற்றும், தொழிலாள வர்க்க சக்தியின் மற்றும் சுய-அமைப்புகளின் அனைத்து வெளிப்பாடுகளையும் அழிக்க அயாத்துல்லாஹ் ஹொமெனியின் (Ayatollah Khomeini) தேசியவாத-மதகுருவாத ஆட்சியை பயன்படுத்தியது.
35 ஆண்டுகளாக, அந்த இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு வந்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பு எப்போதும் இரு-முகமாக இருந்து வந்துள்ளது, அது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான ஈரானிய முதலாளித்துவத்தின் சொந்த சக்தியை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் வரம்புகளின் மீது நிலைநிறுத்துவதற்கான அவர்களின் கடுஞ்சினத்தில் வேரூன்றி இருந்தது.
அன்றைய காலத்திலிருந்து வேறுபட்டு இப்போது, ஈரானிய ஆட்சி வாஷிங்டனுடன் பொருந்தி நிற்க விரும்புகிறது. 2001இல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்த போது தெஹ்ரான் வாஷிங்டனுக்கு உளவு சேதிகள் வழங்கியதோடு, புஷ் நிர்வாகம் காபூலில் அதன் கைப்பாவை ஆட்சியாளராக ஹமீத் கர்சாயை பதவியேற்ற அதற்கு உதவியது. இஸ்ரேல் அரசை அங்கீகரிக்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் பிரதான இராணுவ எதிர்ப்பாளர்களுக்கு, அதாவது பாலஸ்தீன குழு ஹமாஸ் மற்றும் லெபனிய ஷியைட் போராளிகள் ஹெஸ்பொல்லாவிற்கு, ஆதரவை வெட்டும் என்ற ஒரு "பிரமாண்ட பேரத்தை" தெஹ்ரான் 2003இல் முன்மொழிந்தது.
வாஷிங்டனின் அணியில் ஒருங்கிணைந்து நிற்பதற்கான முயற்சியில்,ஈரானிய முதலாளித்துவம் சந்தை-சார்பு சீர்திருத்தங்களை வேகப்படுத்தவும் மற்றும் புரட்சிக்குப் பின்னர் சமூக சலுகைகளாக என்ன மிஞ்சி இருக்கின்றதோ அவற்றை நீக்கவும் முயன்று வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் நவ-காலனித்துவ சதிக்கு எதிராக மத்திய கிழக்கு முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெடிப்பார்ந்த எதிர்ப்பு அங்கே மேலெழுந்து வருகின்றது.
தற்காலிக அணுசக்தி உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டிருக்கின்ற நிலையில்,அடுத்த வாரம் ஸ்விட்சர்லாந்தில் நடக்கவிருக்கின்ற உலக பொருளாதார மாநாட்டிற்கு ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி பயணிப்பார் என்றும்,அங்கே அவர் மேற்கத்திய வர்த்தகங்கள் மற்றும் அரசியல் மேற்தட்டை ஈர்ப்பார் என்றும் தெஹ்ரான் அறிவித்துள்ளது. ஈரானின் பாரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைச் சிறப்பு சலுகைகளோடு அணுகுவதற்கு ஆதரவு தெரிவித்து, அவரது அரசாங்கம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எரிசக்தித்துறை பெருநிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
ஏகாதிபத்தியத்தை இடைவிடாது எதிர்க்கக்கூடிய மற்றும் கடந்த நூற்றாண்டின் உலக யுத்தங்களை விட மிகப் பெரிய சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய புதிய யுத்தங்களுக்குள் மனிதயினத்தை தள்ளுவதில் இருந்து தடுக்கக்கூடிய ஒரே சக்தி, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே ஆகும்.
Keith Jones
16 January 2014

 http://www.wsws.org/tamil/articles/2014/jan/140118_with.shtml

Wednesday, 15 January 2014

அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு யுத்தத்திற்குள் ஈராக் சரிவதும்

US imperialism and Iraq’s descent into civil war

ஈராக்கிய நகரமான பல்லூஜாஹாவின் மீது இரண்டு முறை காட்டுத்தனமான முற்றுகைகளை அமெரிக்க இராணுவம் நடத்திய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அந்நகரம் மீண்டுமொருமுறை ஓர் இரத்தந்தோய்ந்த ஆயுதமேந்திய மோதலை முகங்கொடுத்துள்ளது.
ஈராக்கிய ஜனாதிபதி நௌரி அல்-மலிக்கியின் இராணுவம் பல்லூஜாஹின் புறநகர் பகுதிகளில் குண்டுகள் ஏந்திய இராணுவ டாங்கிகளைக் குவித்துள்ளதோடு, அண்டையிலிருந்த அப்பாவி மக்கள் மீது குண்டுகளையும், சிறியரக பீரங்கி குண்டுகளையும் வீசியது, அதில் எண்ணிக்கையற்ற மக்கள் காயமடைந்தனர். உயிருக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானவர்கள் நகரை விட்டு வெளியேறினர். குடிநீர், உணவு மற்றும் எரிபொருள் கிடைக்காத நிலைமையானது ஓர் இரங்கத்தக்க பேரழிவை உருவாக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அந்நகரின் குடிவாசிகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களைச் சரணடைய செய்ய தூண்டவில்லை என்றால் அந்நகரின் மீது ஒரு முழு அளவிலான தாக்குதலைத் தொடங்க இருப்பதாக மலிக்கி அறைகூவல் விடுத்துள்ளார்.
2004 ஏப்ரலில் மற்றும் மீண்டும் நவம்பர்-டிசம்பரில், அமெரிக்க ஆக்கிரமிப்பால் பல்லூஜாஹ் ஒரு படுகொலைக் களமாக மாற்றப்பட்டது. AC-130 ஸ்பெக்டர் யுத்தவிமானங்கள், F-16 போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொண்டு வான்வழி மூலமாக அந்நகரம் தாக்கப்பட்டது. அந்நகரைத் தாக்க தரைப்படையாக 10,000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகளின் ஒரு படைக்கு ஆதரவாக டாங்கிகள் மற்றும் மத்தியரக பீரங்கிகளும் இருந்தன. குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் ஏவுகணைகளும் (இவை ஜெனிவா தீர்மானங்களின் கீழ் இரசாயன ஆயுதங்களால் தடை செய்யப்பட்டவை ஆகும்) மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. மருத்துவமனைகளும், அவசரநேர வாகனங்களும் இலக்காக்கப்பட்டன.
இறுதியில், அந்நகரில் என்ன எஞ்சி இருந்ததோ அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு சேதப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த கட்டிடங்களில் ஐந்தில் ஒன்று முழுமையாக அழிப்பட்டிருந்தன. நூறு ஆயிரக் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். அந்த இரண்டு முற்றுகைகளில் குறைந்தபட்சம் 120 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர், அதேவேளை எத்தனை ஆயிர ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்பதன் மீது எவ்வித துல்லியமான எண்ணிக்கையும் இதுவரை இல்லை.
பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் பல்லூஜாஹ், ரமாதி மற்றும் ஈராக்கின் மேற்கத்திய அன்பார் மாகாணத்தின் ஏனைய இடங்களில் நிலவும் தற்போதைய நிலைமைகளை, ஒரு தசாப்தமாக அப்பகுதியைச் சாந்தப்படுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பால் பெரும் "தியாகங்கள்" செய்யப்பட்ட நிலையில், இத்தகைய சம்பவங்கள் என்னவொரு அதிர்ச்சியை மற்றும் ஏமாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற என்ற நிலைப்புள்ளியில் இருந்து எடுத்துக்காட்ட தொடங்கி உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நோக்கமாக கொண்ட மற்றும் ஈராக்கிய மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக ஈராக் யுத்தம் மீண்டும் ஒருமுறை சித்தரிக்கப்பட்டு வருகிறது.
பல்லூஜாஹ் மீதான அந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஒரு யுத்த குற்றத்தை உள்ளடக்கி இருந்தது. அதன் நோக்கங்களில், பரந்த வீச்சில் மற்றும் முரட்டுத்தனத்தில், அது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் எதிர்ப்பு காட்டிய மக்களுக்கு எதிராக நாஜிக்களால் வழங்கப்பட்ட ஒருவிதமான கூட்டு தண்டனையோடு ஒப்பிடக்கூடியதாக இருந்தது. அது ஒட்டுமொத்த அமெரிக்க யுத்தத்தின் குற்றவியல் குணாம்சத்தின் அடையாளமாக இருந்தது. இல்லாத "பேரழிவு ஆயுதங்கள்" மற்றும் பாக்தாத்திற்கும் அல் கொய்தாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்த பொய்களை அமெரிக்க மக்களிடையே திரித்துவிட்டு, அந்த யுத்தமானது மத்திய கிழக்கில் மற்றும் அதன் எரிசக்தி ஆதாரவளங்களின் மீது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலதிக நோக்கங்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு சற்று முன்னர் ஒபாமா அமெரிக்க துருப்புகளை ஈராக்கிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார், இருந்த போதினும் எஞ்சியிருக்கும் அமெரிக்க துருப்புகளுக்கான சட்டப்பூர்வ விதிவிலக்கைப் பெற தவறியுள்ளது. எவ்வாறிருந்த போதினும், ஈராக்கிய மக்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஒன்பது ஆண்டுகளுக்கு நெருக்கமான காலத்தில் ஏற்பட்ட கசப்பான மரபுவழிகளை கையாள விடப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மிக குறிப்பிடத்தக்க வகையில் லிபியாவில் மௌம்மர் கடாபியைக் கவிழ்த்து போடுவதன் மூலமாகவும் மற்றும் சிரியாவில் பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றத்திற்கான ஒரு யுத்தத்தை ஆதரித்து தூண்டிவிடுவதன் மூலமாகவும் அப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் வேட்கை தொடர்ந்துள்ளது. பல்லூஜாஹ் மற்றும் ரமாதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களின் விளைவுகள், கடந்த காலத்திலும் மற்றும் நிகழ்காலத்திலும், ஒட்டுமொத்தமாக ஒரு வெடிப்பார்ந்த வடிவத்தை எடுத்துள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக பெரு நிறுவன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அந்த சண்டை, ஒரு திட்டமிட்ட பிரித்தாளும் மூலோபாயத்தின் பாகமாக, அமெரிக்க யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட குழுங்குழுவாத பிரிவுகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவை வடக்கில் உள்ள குர்திஷ் சிறுபான்மைக்கு பிராந்திய தன்னாட்சியைத் தொடர அனுமதித்துள்ள அதேவேளையில், எல்லைகள் மற்றும் எண்ணெய் வளத்திற்கான உரிமைகள் மீதான மோதல்கள் அங்கே உள்நாட்டு யுத்தத்திற்குள் வெடிப்பாக எழ அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற போதினும், அவை சிறுபான்மை சுன்னி மக்களுக்கு எதிராக ஈராக்கின் பெரும்பான்மை ஷியைட் மக்களை எதிர்த்து நிலைநிறுத்துவதில் வெற்றி கண்டன.
அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நிறுவப்பட்ட பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் அரசாங்கம், அன்பார் மக்களின் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட பாதுகாப்பு படைகளைப் பயன்படுத்தியும், மற்றும் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான போராட்டங்களை அல்கொய்தா பயங்கரவாதத்தின் நடவடிக்கைகளாக முத்திரை குத்தியும், முன்னணி சுன்னி அரசியல் பிரபலங்களை இரக்கமின்றி கழித்தொழித்து, பகிரங்கமாகவே ஒரு குறுங்குழுவாத நிகழ்ச்சிநிரலை பின்தொடர்ந்துள்ளது.
டிசம்பரின் முடிவில், ரமாதியில் நாடாளுமன்றத்தின் ஒரு பிரபல சுன்னி பிரிவு உறுப்பினரான அஹ்மத் அல்-அல்வானியைக் கைது செய்ய (அந்த நிகழ்முறையில் அவரது சகோதரர் மற்றும் ஐந்து மெய்காவல் சிப்பாய்களை கொன்றது), பின்னர் டிசம்பர் 30இல் ஒரு போராட்ட கூட்டத்தை உடைப்பதற்கு பாதுகாப்பு படைகளை அனுப்ப (அது பல மாதங்கள் அதே நகரில் தங்கி இருந்ததோடு, குறைந்தபட்சம் 17க்கும் அதிகமானோரைக் கொன்றது) திரும்பியதன் மூலமாக மலிக்கி அரசு தற்போதைய மோதலைத் தொட்டுள்ளது.
மக்கள் கோபம் சீறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஈராக்கில் உள்ள அல் கொய்தா இணைப்பு பெற்ற Islamic State மற்றும் தலைமறைவாக இருக்கும் உள்ளூர் பழங்குடியினர் அமைப்பு (ISIS) ஆகிய இரண்டு ஆயுதமேந்திய குழுக்களுமே பொலிஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதுடன், பாதுகாப்பு படைகளை விரட்டியடித்து உள்ளூர் சோதனைச்சாவடிகளை அமைத்தன, அவை துல்லியமாக பல்லூஜாஹ் மற்றும் ரமாதியின் பெரும்பகுதியை பிடித்திருந்தன.
மலிக்கிக்கு அதன் முழு ஆதரவைத் தெரிவித்தும், அவரது இராணுவத்திற்கு ஹெல்பயர் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் உட்பட ஆயுதங்களை அவசரமாக அனுப்பி வைத்தும் ஒபாமா நிர்வாகம் விடையிறுப்பு காட்டி உள்ளது. அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் F-16 யுத்த விமானங்களை அந்த ஆட்சிக்கு அனுப்ப தாமதமாகி கொண்டிருந்ததை முடிவுக்கு கொண்டு வர, அது காங்கிரஸ் மீது முழு அழுத்தத்தைச் செலுத்தியது. முன்பை விட இன்னும் அதிகமாக குழுவாத மற்றும் சர்வாதிகார தன்மைக்கு மாறி உள்ள ஓர் ஆட்சியின் கைகளில் கிடைக்கும் இந்த ஆயுத தளவாடங்கள், சாமானிய குடிமக்களைப் படுகொலை செய்ய பயன்படுத்தப்படக்கூடும் என்பது ஒபாமா வெள்ளை மாளிகைக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.
அல் கொய்தாவின் அச்சுறுத்தலால் ஒரு தவிர்க்கவியலா உந்துதலாக, அதன் இராணுவ உதவிகளை வாஷிங்டன் எடுத்துக்காட்டி உள்ளது. அத்தோடு பல்லூஜாஹைக் கைப்பற்றி உள்ளவர்களை "அப்பிராந்தியத்தின் மிகவும் அபாயகரமானவர்கள்" என்று வெளியுறவுத்துறை செயலர் ஜான் கேரி வர்ணித்துள்ளார்.
எதார்த்தம் என்னவென்றால் வாஷிங்டன் இன்னமும் பாக்தாத்தின் மீது தக்க வைத்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் செல்வாக்கின் பிரதான கருவிகளில் இதுபோன்ற உதவியும் ஒன்றாக உள்ளது. துருப்புகள் வெளியேறினாலும் கூட, அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை உள்ளடக்கிய அமெரிக்க தூதரகத்தை மையமாக கொண்ட 1,000 ஆட்களைக் கொண்ட ஈராக் பாதுகாப்பு-கூட்டுறவு அலுவலகம் அங்கே எஞ்சி உள்ளது. ஆக்கிரமிப்பு முடிவடைந்ததில் இருந்து, அது 9 பில்லியன் டாலர் மதிப்பிலான நூற்றுக்கணக்கான இராணுவ விற்பனை ஒப்பந்தங்களைக் காப்பாற்றி வைத்துள்ளது. முன்னாள்-சிறப்பு நடவடிக்கைகள் துருப்புகளைச் சேர்ந்த பெரும்பான்மையினரைக் கொண்ட அமெரிக்க ஒப்பந்ததாரர்கள், “ஆலோசகர்கள்" என்ற பெயரில் ஈராக்கிய படைகளில் "ஊடுருவி" உள்ளனர்.
அல் கொய்தாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதைப் பொறுத்த வரையில், அதுவும் பெரிதும் வாஷிங்டனின் சொந்த தயாரிப்பாகும். சிரியாவில் எல்லை கடந்த ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க பின்புலத்திலான யுத்தத்தால் பரந்தளவில் ISIS பலமூட்டப்பட்டுள்ளது, அங்கே சிரியாவில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளால், குறிப்பாக சவூதி அரேபியாவால் அதற்கு ஆயுத உதவிகளும், நிதியுதவிகளும் அளிக்கப்படுகின்றன. மலிக்கி பல்லூஜாஹாவில் ISIS மீது குண்டுவீச ஈராக்கிற்கு கூடுதலாக ஏவுகணைகளை அவசரகதியில் அனுப்புகின்ற வாஷிங்டன், அலெப்போவில் ISIS படைகள் மீது சிரியாவின் குண்டுவீச்சை அது தூற்றுகிறது. இதுவே அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் போலித்தனத்தையும் ஆத்திரமூட்டல்களையும் எடுத்து காட்டுகின்றன.
இந்த வெட்டவெளிச்சமான முரண்பாட்டில், அல் கொய்தாவை வாஷிங்டன் இரண்டுவிதமாக பயன்படுத்துகிறது என்பதே உள்ளார்ந்து இருப்பதாகும். அது எங்கே அதற்கு தேவைப்படுகிறதோ அங்கே—1980களில் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் மிக சமீபத்தில் லிபியா மற்றும் சிரியாவில் பயன்படுத்தியதைப் போலஅதையொரு பகடைக்காயாகவும், பின்னர் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் இன்று மீண்டும் ஈராக்கிலும் அதன் தலையீட்டை நியாயப்படுத்த அதையொரு அரக்கனைப் போலவும் பயன்படுத்துகிறது.
பல்லூஜாஹில் அது பற்ற வைத்துள்ள நெருப்பில் குளிர்காய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கும் வாய்ப்பை திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் ஈராக் விவகாரத்தில் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானின் "பொதுவான எதிரிகள்" என்பதை உயர்த்திக் காட்டும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு காட்டி இருந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நல்லிணக்கம் ஈரானிய அணுசக்தி திட்டம் மீதான ஓர் உடன்படிக்கையைக் கடந்து அப்பிராந்தியத்தில் "ஸ்திரப்பாட்டிற்கான" ஒரு துருப்பாக ஈரான் திரும்பும் அளவிற்கு நீடிக்க முடியும் என்று அது ஆலோசனை வழங்கியது.
இருந்த போதினும், அதுபோன்றவொரு மறுஒழுங்கமைப்பு மத்திய கிழக்கைக் கிழித்துக் கொண்டிருக்கும் ஆழ்ந்த சமூக, அரசியல் மற்றும் வர்க்க மோதல்களைத் தீர்க்கப் போவதில்லை, மாறாக குறிப்பாக சீனா உடனான மோதலின் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்திற்கான வேட்கைக்காக அதனால் அந்த நிலைமைகள் இன்னும் அதிகமாக சுரண்டப்படும்.
Bill Van Auken
9 January 2014

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts