Search This Blog

Sunday, 28 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-13)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


(பகுதி-13)

18. வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கேள்வி பதிலளிக்கப்பட முடியும். இருபதாம் நூற்றாண்டின் அத்தனை வெகுஜன எழுச்சிகளுக்கும் மத்தியில், வரலாற்றால் முன்நிறுத்தப்படும் கடமைகளின் மட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் உயர்ச்சி கண்டதற்கு ஒரு முன்னுதாரணமாக அக்டோபர் புரட்சி இருக்கிறது. இந்த சகாப்தத்தின் மாபெரும் பிரச்சினைகளை முகம்கொடுக்கும் சமயத்தில், அந்த வரலாற்று நிகழ்வினை ஆய்வு செய்வதும் அதன் படிப்பினைகளை உள்வாங்குவதும் அவசியமானதாகும்.
ரஷ்ய புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், சமகால அரசியலுக்கும், வரலாற்று அனுபவத்திற்கும் இடையில் ஒரு ஆழமான சந்திப்பும் பரிமாற்றமும் இருக்கிறது. 1917 புரட்சியானது முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய பேரழிவில் இருந்து எழுந்தது. சாரிச ஆட்சி தூக்கிவீசப்பட்டதை தொடர்ந்து எழுந்த அரசியல் சூறாவளியில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளான செல்வாக்கான சக்தியாக போல்ஷிவிக் கட்சி எழுந்தது. ஆயினும், 1917 இல் போல்ஷிவிக்குகளால் ஆற்றப்பட்ட பாத்திரமானது, தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஒரு சரியான புரட்சிகர முன்னோக்கை வகுத்தெடுப்பதற்குமான ஒரு நெடிய மற்றும் கடினமான போராட்டத்தின் விளைபயனாகும்.
19. அந்தப் போராட்டத்தின் இன்றியமையாத கூறுகளாக இருந்தவை எவை என்றால்: 1) தொழிலாள வர்க்கத்தின் கல்வி மற்றும் புரட்சிகர நடைமுறைக்கான தத்துவார்த்த அடித்தளமாய், மெய்யியல் கருத்துவாதம் மற்றும் மார்க்சிச-விரோத திருத்தல்வாதம் ஆகியவற்றுக்கு எதிராக இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை பாதுகாத்தமை மற்றும் விரித்துரைத்தமை; 2) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு முட்டுக்கட்டையிட்ட அல்லது குழிபறித்த சந்தர்ப்பவாதம் மற்றும் மத்தியவாதத்தின் பல வடிவங்களுக்கும் எதிரான தளர்ச்சியற்ற போராட்டம்; மற்றும் 3) 1917 இல் அதிகாரத்திற்கான போராட்டத்தை நோக்கி போல்ஷிவிக் கட்சியை நோக்குநிலை அமைத்திருந்த மூலோபாய முன்னோக்கினை, பல வருட காலத்தில், செதுக்கி உருவாக்கியிருந்தமை. இந்த பிந்தைய நிகழ்ச்சிப்போக்கில், முந்தைய தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை லெனின் ஏற்றுக் கொண்டமையானது, இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு இட்டுச் சென்ற மாதங்களில் போல்ஷிவிக்குகளின் மூலோபாயத்தை வழிநடத்திய இன்றியமையாத முன்னேற்றமாக இருந்தது.Thursday, 25 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-12)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


(பகுதி-12)

16. ஆனால் நிகழ்வுகளின் அழுத்தமானது தொழிலாள வர்க்கத்தை இடது நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இருக்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில், கோபம் மற்றும் போர்க்குணத்தின் மனோநிலை பெருகிக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி மற்றும் சோசலிசம், மார்க்சிசத்தின் ஆர்வத்தில் ஒரு மறுமலர்ச்சி, இரண்டின் அறிகுறிகளும் அங்கே இருக்கின்றன. அமெரிக்காவில், சோசலிஸ்டாக கூறிக் கொண்ட பேர்னி சாண்டர்ஸுக்கு, ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் 13 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அது அவரது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அல்ல, மாறாக ”பில்லியனர் வர்க்க”த்தின் மீதான அவரது கண்டனங்களுக்காகவும் ஒரு “அரசியல் புரட்சி”க்கு அவர் விடுத்த அழைப்புகளுக்காகவும் ஆகும். இது உலக முதலாளித்துவத்தின் இயல்பான தன்மையால் உத்தரவிடப்படுகின்ற ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகும். வர்க்கப் போராட்டமானது, அது வலிமையும் அரசியல் சுய-விழிப்பும் பெறப்பெற, மேலும் மேலும் அதிகமாக தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு முனையும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக், 1988 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டதைப் போல, “வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, ஆயினும் சாராம்சத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையை பெற்றாக வேண்டும்.”
17. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளாற்றலில் நம்பிக்கை கொள்வதென்பது அரசியல் மெத்தனத்திற்கான நியாயமாக ஆகிவிடாது. முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி இருக்கின்ற முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு இருக்கின்ற நிலைக்கும் இடையில் ஒரு பரந்த இடைவெளி இருக்கிறது என்ற உண்மையை உதாசீனம் செய்வது என்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும். அவ்விடத்தில்தான் ஒரு பெரும் அபாயம் பொதிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், மனித நாகரிகம் தப்பிப்பிழைப்பது என்பதே ஒரு கேள்விக்குறியாகும். இந்த சகாப்தத்தின் அடிப்படையான அரசியல் பணியானது புறநிலை சமூகப்பொருளாதார யதார்த்தத்திற்கும் அகநிலை அரசியல் நனவுக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிகாண்பதை உள்ளடக்கியதாகும். இது நிறைவேற்றப்பட முடியுமா?
(தொடரும்...)


Wednesday, 24 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-11)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


(பகுதி-11)

14. ஏகாதிபத்திய போரை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியானது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படலையும் சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியையும் உருவாக்குகிறது. ஆழமான மற்றும் எளிதில் தீர்க்கமுடியாத வர்க்க மோதலால் பின்னப்பட்டிருக்கும் ஒரு நாட்டிற்கு ட்ரம்ப் தலைமை கொடுக்கவிருக்கிறார். உலகெங்கிலும் இதேபோன்ற நிலைமைகள் தான் நிலவுகின்றன. ஐரோப்பாவின் அத்தனை மக்களிலும் கால்வாசிப் பேர், அதாவது 118 மில்லியன் பேர் வறுமையாலோ அல்லது சமூத்திலிருந்து தனிமைப்படுத்தலாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது. ஸ்பெயினில் வறுமை விகிதம் 28.6 சதவீதமாக இருக்கிறது, கிரீசில் இது 35.7 சதவீதமாக இருக்கிறது. இந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளால் உத்தரவிடப்பட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்த நாடுகள் ஆகும். இந்த ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது எண்ணிக்கை 71 மில்லியனாக உயர்ந்தது, இது 2013க்குப் பிந்தைய முதல் அதிகரிப்பாகும். வெனிசூலாவில் பாரிய வறுமையும் மிகைபணவீக்கமும் உணவுக் கலகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் பெருகிச் செல்வதானது வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட வடிவங்களது கூரிய அதிகரிப்பில் வெளிப்படுத்தப்படுவதாக உள்ளது. ரஷ்யாவில், முதலாளித்துவ மீட்சியின் அதிர்ச்ச்சியும் அதனை சூழ்ந்த தொழிலாள வர்க்கத்தின் விரக்தியும் புதுப்பிக்கப்பட்ட சமூக போர்க்குணத்திற்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றன. அதீத சமூக சமத்துவமின்மை நிலையும் புட்டின் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியின் பிரபுத்துவ தன்மையும் முன்னெப்போதினும் பெரிய அளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன.
15. இப்போது வரையிலும், அரசியல் வலதுகள், பேரினவாதத்தின் வாய்வீச்சு சுலோகங்களை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்குள்ளுமான சமூக அதிருப்தியை சுரண்டி வந்திருக்கின்றனர். ஆயினும், பேரினவாத வலதுகளின் பிற்போக்கான கட்சிகளது ஆரம்ப வெற்றிகளானவை ”இடது” என்றபேரில் கடந்துசெல்கின்ற அமைப்புகளது அதாவது சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினர், ஜேர்மனியில் இடது கட்சி, கிரீசில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத கட்சிகளின் அரசியல் சிடுமூஞ்சித்தனம், ஏமாற்று மற்றும் திவால்நிலையின் மீதே சார்ந்திருந்து வந்திருக்கின்றன. அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அரசு-முதலாளித்துவ மற்றும் பப்லோவாத அமைப்புகளையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். நடுத்தர வர்க்கத்தின் இந்த பிற்போக்கான அமைப்புகளது அத்தனை அரசியல் ஆற்றலும் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை மாற்றி முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டம் அபிவிருத்தி காண்பதற்கு முட்டுக்கட்டையிடும் பொருட்டு மார்க்சிசத்தை பொய்மைப்படுத்துவதிலேயே செலவிடப்படுகின்றன.

Tuesday, 23 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-10)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


(பகுதி-10)

13. சர்வதேசரீதியான வெளிப்பாடுகள் மற்றும் உள்நாட்டுரீதியான வெளிப்பாடுகள் இரண்டிலுமே, ட்ரம்ப்பின் கொள்கைகள் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் வலது நோக்கிய ஒரு உலுக்கும் நகர்வை பிரதிபலிக்கின்றன. ட்ரம்ப்பின் எழுச்சிக்கு இணையாக பிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் பெகீடா, இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் மற்றும் பிரெக்ஸிட்டுக்கான பிரச்சாரத்துக்கு தலைமைகொடுத்த கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கு பெருகியிருக்கிறது. ஜேர்மனியில், ஆளும் வர்க்கமானது பேர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையின் மீது நடந்த தாக்குதலை AfD (ஜேர்மனிக்கான மாற்று) தலைமையில் நடக்கும் அகதிகள்-விரோதப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் அரசியல் மற்றும் பொருளாதார சாரமானது, லெனின் விளக்கியவாறாக, ஏகாதிபத்தியத்தின் தன்மையிலேயே பொதிந்துள்ளது:
ஏகாதிபத்தியம் ஒட்டுண்ணித்தனமானது அல்லது அது சிதைந்து செல்லும் முதலாளித்துவமாகும் என்ற உண்மையானது, எல்லாவற்றுக்கும் முதலில், உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்புமுறையின் கீழ் ஒவ்வொரு ஏகபோகத்தின் குணாம்சமாக இருக்கின்ற, சிதையும் போக்கில் வெளிப்படுவதாக இருக்கிறது. ஜனநாயகக் குடியரசு முதலாளித்துவம் மற்றும் பிற்போக்கான-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் எல்லாம் மங்கிப் போய்விடுகிறது ஏனென்றால் இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன... [”ஏகாதிபத்தியமும் சோசலிசத்திலான பிளவும்”, லெனின் நூல் திரட்டு, தொகுதி 23 (மாஸ்கோ: முன்னேற்றப் பதிப்பகம், 1977), பக். 106] 
பகாசுர பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசுகள் ஆதாரவளங்களையும், வர்த்தக வழிப்பாதைகளையும் மற்றும் சந்தைகளையும் கட்டுப்படுத்த சண்டையிடுகின்ற நிலையில், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே போருக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் வர்க்க மோதல்களை வன்முறையாக ஒடுக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசியவாதம் கையிலெடுக்கப்படுகிறது.
(தொடரும்...)


Monday, 22 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-9)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


(பகுதி-9)

“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் அளிக்கும் வாக்குறுதியின் நடைமுறை அர்த்தம், பல தசாப்த கால வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக எட்டியிருந்த தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை ஓரளவுக்கு மேம்படுத்திய முற்போக்கான சமூக சீர்திருத்தங்களில் எஞ்சியிருக்கும் எதனையும் அழித்தொழிப்பது என்பதாகும். ட்ரம்ப்பின் சொந்த மனதில், “அமெரிக்காவை மகத்தானதாக்குவது” என்பது, 1890களின் நிலைமைகளுக்கு, அச்சமயத்தில் உச்சநீதிமன்றம் வருமானவரி என்பது கம்யூனிச முறை என்றும் அரசியல் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பளித்த நிலைமைகளுக்கு திரும்புவதை கொண்டதாகும். 1913 இல் வருமான வரி ஸ்தாபிக்கப்பட்டு, அதனைச் சூழ்ந்து தொழிலாளர்கள், பரந்த மக்கள் மற்றும் சுற்றுசூழல் சுரண்டப்படுவதன் மீது வரம்புகளை அமைத்த சமூக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டமையானது, ட்ரம்ப்பை பொறுத்தவரை, பணக்காரர்கள் அவர்கள் விரும்பிய அளவுக்கு பணம் சம்பாதிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமை மீதான ஒரு தாக்குதலாகும். பொதுக் கல்விக்கு நிதியாதாரம் அளிப்பது, குறைந்த பட்சம் ஊதியம் நிர்ணயிப்பது, சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு, மருத்துவ உதவி மற்றும் பிற சமூக நல உதவித் திட்டங்கள் ஆகியவை பணக்காரர்களிடம் இருந்து நிதி ஆதாரங்களை திருப்பிவிடுவதை ஏற்படுத்தியவை. பில்லியனர்களையும் பலகோடி-மில்லியனர்களையும் கொண்ட ஒரு மந்திரிசபையை திரட்டுகின்ற ட்ரம்ப், செல்வந்தர்களால் செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களின் ஒரு அரசாங்கத்திற்கு தலைமைகொடுக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்.
தனது கோடீஸ்வர-செல்வந்த சகாக்களுடன் சேர்த்து, முன்னாள் தளபதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்ட்டுகளது ஒரு குழுவை ட்ரம்ப் தனது மந்திரிசபைக்குள் கொண்டுவந்திருப்பதோடு தனது பிரதான ஆலோசகர்களாகவும் தேர்வு செய்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை கடிவாளமற்ற வகையில் திட்டவட்டம் செய்வதன் அடிப்படையிலான ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதே, அவர்களின் பணியாக இருக்கும். இதுவே “முதலில் அமெரிக்கா” என்ற சுலோகத்திற்கு புத்துயிரூட்டப்படுவதன் உண்மையான முக்கியத்துவம் ஆகும். அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் தேய்ந்து செல்வதுதான் அதன் ஏகாதிபத்திய திட்டநிரலுக்கு மேலும் அதிகமான மிருகத்தனத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வோல் ஸ்டீரிட் நிதிமுதலைகள் மற்றும் உளவு முகமைகளது ஊழல்மிக்க கூட்டான ஜனநாயகக் கட்சியானது, ட்ரம்ப் மீதான தனது விமர்சனத்தை, ரஷ்யாவை நோக்கி அவர் “மென்மையாக” நடந்து கொள்வதாக கூறப்படுவதன் மீது குவித்துள்ளது. அது கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதுகின்ற புவியரசியல்ரீதியான மற்றும்/அல்லது பொருளாதாரரீதியான நலன்களை கொண்ட அத்தனை நாடுகளுடனுமே ட்ரம்ப் நிர்வாகம் மோதலை தொடரவும் தீவிரப்படுத்த இருக்கிறது.
(தொடரும்...)

Saturday, 20 May 2017

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017 (பகுதி-8)

Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017


சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017

(பகுதி-8)

11. அமெரிக்க சமூகம் அதிகமான சமத்துவமற்றதாக ஆகியிருப்பதால், ஜனநாயகம் இன்னும் நிலவுவதாக நடிப்பது அதன் சித்தாந்தவாதிகளுக்கு அதிகமான கடினமாய் ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற ஆழமான வர்க்கப் பிளவுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவது நிறம், இனம், பாலினம் மற்றும் பால்விருப்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாள அரசியலின் அத்தியாவசியமான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்காவில் நிதிப்பிரபுத்துவ ஆட்சியின் யதார்த்தத்தை அதன் அத்தனை வெறுக்கத்தக்க நிர்வாணத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆயினும், ட்ரம்ப் ஏதோ, 2016 தேர்தல் தினம் வரையிலும், கொஞ்சம் எசகுபிசகாக இருந்தாலும் கூட அடிப்படையாய் கண்ணியத்துடன் இருந்த ஒரு சமூகத்திற்குள் அத்துமீறி புகுந்து விட்ட அரக்கன் போல் அல்ல என்பது வலியுறுத்தப்பட்டாக வேண்டும். நில சொத்து, நிதித்துறை, சூதாட்டம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் குற்றவியல்தனமான மற்றும் நோய்பீடித்த கலவைகளது விளைபொருளான ட்ரம்ப் தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மையான முகமாவார்.
12. உள்வரும் ட்ரம்ப் நிர்வாகமானது, அது உள்ளடக்கியிருக்கும் அதன் நபர்களைப்போலவே அதன் நோக்கங்களிலும், நிதிப்பிரபுத்துவத்தின் கிளர்ச்சி தன்மையை கொண்டிருக்கிறது. அழிந்துபோகவுள்ள சமூக வர்க்கம் என்ற வகையில் அதன் முடிவை நெருங்குகின்ற சமயத்தில், வரலாற்றின் அலைகளுக்கு எதிர்த்துநிற்கும் தனது முயற்சியில், அதன் அதிகாரம் மற்றும் தனிச்சலுகைகளை நீண்டகாலமாக அரிப்பதாக அது கருதுகின்றவற்றை மீண்டும் தலைகீழாக்குவதற்கு முயற்சி செய்கின்ற வடிவத்தை அது எடுப்பதென்பது அபூர்வமான ஒன்றல்ல. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களது தடுத்து நிறுத்தமுடியாத சக்திகள், அதன் ஆட்சியின் அடித்தளங்களை அரித்துத் தின்ன தொடங்கியதற்கு முன்பாக இருந்த நிலைமைகளுக்கு (அல்லது இருந்ததாக அது கற்பனை செய்த நிலைமைகளுக்கு) திரும்புவதற்கு அது முனைகிறது. இங்கிலாந்தில் 1640 இல் புரட்சி வெடிப்பதற்கு முன்பாக 11 ஆண்டுகளுக்கு முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தை கூட்டுவதை தடைசெய்தார். 1789 புரட்சியின் சமயத்தில் பாரிஸில் Etats-General (சட்டமன்ற, ஆலோசனை சபை) கூடிய சமயத்தில், பிரெஞ்சு பிரபுத்துவமானது 1613 முதலாக தேய்ந்து சென்றிருந்த தனது தனிச்சலுகைகளை மீண்டும் ஸ்தாபிக்க நோக்கம் கொண்டிருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டு போருக்கு முன்பாக தென்பகுதி உயரடுக்கினர் நாடெங்கிலும் அடிமைமுறையை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்தனர். 1861 ஏப்ரலில் சம்டெர் கோட்டை மீதான துப்பாக்கிச்சூடு விளைவுரீதியாக அடிமை-உடையவர்களது கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்து நின்றது.
(தொடரும்...)

Friday, 19 May 2017

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்தியப் பிரதமரை வரவேற்க முண்டியடிப்பதன் பின்னணியில்

Image source from Internet
மே 12 அன்று, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தோட்டத் தொழிற்சங்கங்கள் மோதிக்கொள்கின்றன. ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள வெசாக் கொண்டாட்டங்களை திறந்து வைக்க இலங்கை வரும் மோடி, ஹட்டனுக்கு அருகில் டிக்கோயாவில் இந்திய நிதியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை ஒன்றை திறந்து வைக்க தோட்டப் பகுதிக்கும் செல்லவுள்ளார். அதன் பின்னர் அங்கு நோர்வுட் நகரில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்பார்.
ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் (த.மு.கூ.) ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்திய முதலாளித்துவத்துடன் பாரம்பரிய உறவுகொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதில் பங்கேற்க முயற்சிக்கின்றது. கடந்த ஞாயிறு மாலை ஏற்பாடுகளை பார்வையிட நோர்வுட் சென்ற இ.தொ.கா. பிரமுகர் செந்தில் தொண்டமானை, த.மு.கூ.யின் ஒரு தலைவரும் அரசாங்கத்தின் அமைச்சருமான பழனி திகாம்பரம் இடை நடுவில் வழி மறித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. திகாம்பரம் தங்களை மிரட்டியதாக செந்தில் தொண்டமான் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
மோடியை “பிரமிக்க வைப்பதற்காக” இரு சாராரும் தத்தமது கட்சிகளில் இருந்து அதிகளவானவர்களை அணிதிரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலைமைகளின் மத்தியிலேயே மோடியின் விஜயம் இடம்பெறுகின்றது. தொடர்ச்சியான காட்டிக் கொடுப்புகளின் விளைவாக இ.தொ.கா. தேர்தல் தோல்விகளை அடைந்துள்ளதுடன், அதன் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை சுரண்டிக் கொண்டு தலை தூக்கியுள்ள த.மு.கூ.யின் கீழும் தொழிலாளர்கள் தமது வாழ்க்கை நிலைமையில் எந்த வளர்ச்சியையும் காணவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் தேயிலைத் தோட்டக் கம்பனிகளுடன் சேர்ந்து சதி செய்து, உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதேவேளை, தொழிலாளர்களை குத்தகை விவசாயிகள் முறையுடன் கட்டிப்போட்டு, அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது ஒழிப்பதற்கான சதியை அமுல்படுத்துவதற்கும் இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 110 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதோடு அடிப்படை சம்பளம் 50 ரூபா அற்பத் தொகையால் அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக தொழிலாளர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் பொலிஸ்கார வேலையை பொறுப்பெடுத்துள்ள இந்திய ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வதும், கல்வி மற்றும் வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் நிதி உதவிகளை அதிகரிக்குமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் அதிருப்தியை தணிப்பதுமே மோடியை பிரம்மிக்க வைப்பதன் பிரதான நோக்கமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்கச் சார்பு கொழும்பு அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் தோட்டத் தொழிலாளர்களை லயன் வாழ்க்கையில் இருந்து மீட்டல் என்ற பெயரில் ஆங்காங்கே சிறு சிறு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதும் வீதிகளைப் புணரமைப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை தக்கவைத்துக்கொள்வதற்கே ஆகும்.
2015 ஜனவரியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவை பதவியில் அமர்த்துவதற்கு, மோடி நிர்வாகத்தின் ஆதரவுடன் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்ததன் மூலம் அமைச்சர் மனோ கனேசன் தலைமையிலனா த.மு.கூ., பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய நலன்களுக்கு சேவையாற்ற தன்னை வெளிப்படையாக அர்ப்பணித்துக்கொண்டது. நிதி நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அன்றாடமளவில் வளர்ச்சியடையும் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்கின்றது. இந்தப் போராட்டங்களுடன் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒன்று சேர்ந்து அமெரிக்க-சார்பு அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்வதை தடுப்பதற்கு த.மு.கூ. விழிப்புடன் செயற்படுகின்றது. இ.தொ.கா. இதிலிருந்து வேறுபட்டது அல்ல.
பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயலும் மோடி நிர்வாகம், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் நிதி நெருக்கடியில் இருந்து தலை தூக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் அடிக்கடி சீனா பக்கம் சாய்வதைப் பற்றியும், இராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பது குறித்தும் கவலை கொண்டுள்ளது. இதனால் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பகுதியை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினரான தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களின் ஆளுமையின் கீழ் வைத்திருக்க உதவிபுரியவும் மோடி அக்கறை காட்டுகின்றார்.
பிரிட்டிஷ் காலனித்துவத்தால் மலையகப் பகுதியில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப்பட்ட பின்னர், இந்திய காங்கிரசின் தலைவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவகர்லால் நேரு 1939ல் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்ததற்கும், மோடியின் விஜயத்துக்கும் சமாந்தரத்தை காண முடியும்.
1939ல் மாபெரும் உலகப் பொருளாதார பின்னடவு மற்றும் இரண்டாம் உலகப் போர் பதட்டங்களின் மத்தியில் நாட்டில் இடம்பெற்ற மாபெரும் தொழிலாளர் போராட்டங்களுக்கு அப்போது லங்கா சமசமாஜக் கட்சியே (ல.ச.ச.க.) தலைமை வகித்தது. காலனித்துவத்திடம் இருந்து முழுமையான சுதந்திரத்தை கோரிய, சோசலிசத்தை முன்நிறுத்திய ல.ச.ச.க.யின் கீழ் ஆயிரக்கணக்கான சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் அணிதிரண்டிருந்தனர்.
இந்த வர்க்கப் போராட்டங்களையிட்டு அச்சமடைந்த நேரு, இந்திய வம்சாவழியினர் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சவால் செய்ய, தொழில் மற்றும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை ஒரணியில் திரளுமாறு ஆலோசனை கூறி, தோட்டத் தொழிலாளர்களை சிங்களத் தொழிலாளர்களில் இருந்து தனிமைப்படுத்த முயற்சித்தார். இதன் விளைவாக தோன்றிய இலங்கை-இந்திய காங்கிரசில் இருந்தே சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருவானது. அன்று முதல் இன்றுவரை இ.தொ.கா. பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபத்துக்காக தொழிலாளர்களின் நலன்களை அடகுவைத்து வந்துள்ளது.
இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் வளர்ச்சியடையும் மூன்றாம் உலகப் போர் பதட்டங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியடைகின்ற நிலைமயின் கீழ், மோடி மலையகத்திற்கு விஜயம் செய்கின்றார்.
தொழிற்சங்கங்கள் சித்தரிப்பது போல், மோடி அல்லது இந்திய ஆளும் வர்க்கம் ஒரு கொடையாளியோ அல்லது ஜனநாயகமானதோ அல்ல. இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் கீழ், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மாருதி சுசுகி வாகன தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை மோடியின் தொழிலாள வர்க்க விரோத வணிகச் சார்பு கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும். குற்றச்சாட்டுக்கள் நிருபீக்கப்படாமலேயே, சோடிக்கப்பட்ட வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும் 18 பேருக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதே இந்த தொழிலாளர்கள் செய்த ஒரே “குற்றமாகும்”. இது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் தொழிலாளர்களை எச்சரிப்பதற்காகவும் கம்பனியும், நீதித் துறையும், பொலிசும் மற்றும் பா.ஜ.க. அரசாங்கமும் சேர்ந்து செய்த சதியாகும்.
இந்தியா தற்போது 101 பில்லியனர்களைக் கொண்டுள்ள அதே வேளை, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நாள் ஒன்றுக்கு 2 டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தமது சொத்துக்களை இழந்து மீண்டும் தமிழ் நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நாடு திரும்பியவர்கள் என்ற பெயரில் உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். நாடு திரும்பியவர்களும் ஏனைய தோட்டத் தொழிலளர்களும் உலகச் சந்தையில் கழுத்தை நெரிக்கும் போட்டியின் மத்தியில் சுமார் 100 இந்திய ரூபா நாள் சம்பளத்தில் சுரண்டப்படுகின்றனர்.
அதே வேளை இலங்கையின் இனவாத போரின் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலட்சக்கணக்கான வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப்புறத்தைச் சேர்ந்த தமிழர்கள் இழிநிலையிலான அகதி முகாம்களில் 20 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவதோடு குறித்த நேரத்தில் வெளியேறி மாலை 6 மணிக்கு முன்னர் முகாமிற்கு திரும்பி விட வேண்டும். கடந்த ஆண்டு ஒரு அகதியை அதிகாரி ஒருவர் கீழ்த்தரமாக நடத்தியமையினால் மனமுடைந்த அவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார். இத்தகைய ஒடுக்குமுறைகளைக் கையாளும் ஆளும் வர்க்கத்தையே இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தொப்புள்கொடி உறவு என அழைக்கின்றனர்.
இந்தியா போன்ற அரசுகள் வழங்கும் அற்ப சலுகைகளுக்குப் பின்னால் அவற்றின் பெரும் நலன்களும் கொடூரங்களும் உள்ளன என்பதற்கு தமிழ் மக்களின் அனுபவமே உதாரணமாகும். 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்குக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்து இறங்கிய இந்திய அமைதிப் படையே ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்தது. இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருப்பது சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கு தீவைப் பயன்படுத்திக்கொள்வதற்கே ஆகும். இதனால் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை பலியெடுக்கும் மூன்றாம் உலக அணுவாயுத யுத்தம் வெடிக்கும் ஆபத்தை மனிதகுலம் எதிர்கொண்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களதும் உண்மையான உறவினர்கள் இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் அல்ல, மாறாக மில்லியன் கணக்கான இந்தியத் தொழிலாளர்களே ஆகும். தங்களது சொந்த நலன்களுக்காக ஏகாதிபத்தியத்துடனும் பிராந்திய வல்லரசுகளுடனும் உறவு ஏற்படுத்திக்கொள்ள முயலும் தொழிற்சங்கங்களையும் கட்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இலாப நோக்கு உற்பத்தி முறையை ஒழித்துக்கட்டி, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை, அதாவது சோசலிச அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் இந்தியத் தொழிலாளர்களுடனும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுடனும் சுயாதீனமாக ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். 
By R. Shreeharan
11 May 2017
http://www.wsws.org/tamil/articles/2017/5-Mai/slpl-m12.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts